Published:Updated:

பரணி, மகம், சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய மகாபரணி நாள்... செய்ய வேண்டியவை என்னென்ன?

மகாபரணி நாள்: கருட புராணத்தின்படி ஆன்மாக்கள் அனுபவிக்கும் 28 விதமான தண்டனைகளில் இருந்தும் நம்மையும் நம்முடைய முன்னோர்களையும் மீட்டெடுக்கும் வல்லமை கொண்டவை பித்ரு வழிபாடுகளே.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாளய பட்ச காலத்தில் மகாபரணி, மஹாவியதீபாதம், மத்யாஷ்டமி, அவிதவா நவமி, துவாதசி, மகாளய அமாவாசை ஆகிய நாள்களில் நம் முன்னோர்களுக்காக தர்ப்பணம் விடுவது சிறப்பு என்கின்றன சாஸ்திரங்கள். மகாபரணி (24.09.21) வெள்ளிக்கிழமையும் மஹாவியதீபாதம் 28.09.21 செவ்வாய்க்கிழமையும் மத்யாஷ்டமி 29.09.21 புதன்கிழமையும் அவிதவா நவமி 30.09.21 வியாழக்கிழமையும் துவாதசி 3.10.21 ஞாயிற்றுக் கிழமையும் மகாளய அமாவாசை 6.10.21 புதன் கிழமையும் வரவுள்ளது. இதில் மகாளய பட்ச ஆரம்ப தர்ப்பண நாளான மகாபரணி நாள் இன்று.
பித்ரு காரியங்கள்
பித்ரு காரியங்கள்

நாம் ஒவ்வொருவருக்கும் ஐந்து விதமான கடமைகள் இருக்கின்றன என்று நமது தர்ம நூல்கள் கூறுகின்றன. அவை குடும்ப நலன் காண இறை வழிபாடு, லோக க்ஷேமத்துக்காக யாகங்கள் செய்வது, துறவிகள் - சந்நியாசிகளை வணங்குவது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது, விஷ்வே தேவர்கள் எனப்படும் பித்ருக்களைத் திருப்திப்படுத்த பித்ரு காரியங்கள் செய்வது என்பவையாம். இதில் பித்ரு கடமைகளைச் செய்ய ஏற்ற காலம் மகாளய பட்ச காலம் என்கிறார்கள். இதில் மகாபரணி நாள் அருமையான திதி என்றும் சொல்கிறார்கள்.

பரணி நட்சத்திரம் என்பதை வேதம், அபபரணி என்று போற்றுகிறது. பரணி நட்சத்திரத்தின் அதிதேவனாக யமன் இருப்பதால், பித்ருக்களின் காவலனான யமனை ஆராதிக்கும் நாளாகவும் இந்த மகாபரணி நாள் அமைகிறது. இந்த நாளில் நீங்கள் எங்கிருந்து தர்ப்பணம் செய்தாலும் அது கயாவில் தர்ப்பணம் செய்த புண்ணியத்தை அளிக்கும் என்கிறார்கள். இறைவனிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வுளவு பக்தி இருக்கிறதோ அதே அளவுக்கு தேவதைகளையும், பித்ருக்களையும் திருப்தி செய்விக்கும் கர்மாக்களை செய்விப்பதிலும் ஆவல் இருக்க வேண்டும் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

தர்ப்பணம்
தர்ப்பணம்

மகாளய பட்ச 15 நாள்களில், மகாபரணி நாள் உயர்வான திதி என்று ஆன்மிகப் பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த நாளில் நம் முன்னோருக்கு நாம் செய்யும் தர்ப்பணமும் படையலும் தான தர்மங்களும் அவர்களை மகிழ்வித்து நம் குலத்துக்கே நன்மையை அளிக்கும் என்றும் எந்தவிதமான பித்ரு தோஷம் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நாளில் வழிபாடுகளோடு தானம் அளிப்பதும் சிறப்பானது. குறிப்பாக முதியவர்களுக்கு செய்யப்படும் தானங்கள் உங்களை மேம்படுத்தும். வஸ்திர தானம், செருப்பு, குடை தானம் போன்றவை நலம் அளிக்கும்.

மகாளய பட்சம்: இந்த நாள்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா?

தந்தை அல்லது தாய் எனத் தொடங்கி முன்னர் நமது ஏழு தலைமுறைகளிலும் வாழ்ந்த அத்தனை முன்னோர்களுக்கும் இந்த நாளில் வழிபாடு செய்வது அவசியம். நியாயமாக முந்தைய காலங்களில் இந்த மகாளய பட்ச 15 நாள்களிலும் பித்ரு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இப்போது அந்த நடைமுறை குறைந்து விட்டது. எனினும் 15 நாள்கள் செய்ய இயலவில்லை என்றாலும் இந்த மகாபரணி நாளில் செய்வது மிகவும் திருப்தியை அளிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

மேலும் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க்கும் நாள் என்பதால் அன்று நாம் கொடுக்கும் திதி மற்றும் தர்ப்பணம் 15 நாள்களிலும் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தின் பலன்களை அளிக்கக்கூடியது என்பார்கள். மேலும் மகாபரணி நாள் பித்ருக்கள் நமக்கு அளிக்கும் பாவமன்னிப்பு நாள் என்றும் கூறப்படுகிறது.

வழிபாடு
வழிபாடு

மகாபரணி நாளில் யமதீபம் ஏற்றி வழிபடுவதும் சிறப்பானது எனப்படுகிறது. நெய், தாமரைத் தண்டு கொண்டு தீபங்கள் ஏற்றி எட்டுத் திக்குகளை நோக்கியவாறு எட்டு தீபங்கள் ஏற்றி வைத்து நம் முன்னோர்களைக் குறித்துப் பிரார்த்திப்பது நலம் சேர்க்கும். வீட்டின் உயரமான இடத்தில் தெற்கு நோக்கி ஒரே ஒரு விளக்கை ஏற்றுவது கூட போதுமானது என்றும் கூறப்படுகிறது. இதனால் யமபயம், பித்ரு தோஷங்கள் நீங்கும். அகால மரணமடைந்தவர்களுக்கு இந்த மகாபரணி நாளில் தானதர்மங்கள் அளித்து செய்யப்படும் வழிபாடு திருப்தியை அளித்து அவர்களுக்கு மோட்சம் கிட்ட வழி உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

27 நட்சத்திரக்காரர்களும் அளிக்க வேண்டிய அபிஷேகப் பொருள்கள் என்னென்ன? அதன் பலன்கள் என்ன?

நம் முன்னோர்களில் யாரேனும் தீராத மனக்கவலையோடு இருப்பின் அவர்களுக்கும் இந்த நாளில் செய்யப்படும் பித்ரு வழிபாடுகளால் மகிழ்ச்சி உண்டாகி முக்தி அடைவர் என்றும் ஞான நூல்கள் கூறுகின்றன. பரணி, மகம், சதயம் நட்சத்திரக்காரர்கள் இந்த மகாபரணி நாளில் பித்ரு வழிபாடு செய்வது மிக மிக உன்னதமானது எனப்படுகிறது. பரணி, சதய நட்சத்திரங்களின் அதிதேவதை யமன் என்பதாலும் மக நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள் என்பதாலும் இவர்களுக்கு சிறப்பானது என்கிறார்கள். சனி தோஷங்களால் துன்பப்படுபவர்களுக்கும் இந்த பித்ரு வழிபாடு நலம் அளிக்கும்.

மகாபரணி வழிபாடு
மகாபரணி வழிபாடு
கருட புராணத்தின்படி ஆன்மாக்கள் அனுபவிக்கும் 28 விதமான தண்டனைகளில் இருந்தும் நம்மையும் நம்முடைய முன்னோர்களையும் மீட்டெடுக்கும் வல்லமை கொண்டவை பித்ரு வழிபாடுகளே. அதிலும் இந்த மகாபரணி தின வழிபாடு சிறப்பானது எனப்படுகிறது. இதை தவறாமல் செய்து நீங்களும் உங்களுக்குத் பின்வரும் தலைமுறைகளும் நலமோடு வாழ வேண்டிக்கொள்கிறோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு