Published:Updated:

ஆழிமழைக் கண்ணா... மழையின் அறிவியலை விளக்கும் ஆண்டாளின் பாசுரம்... திருப்பாவை 4

நாம் தொழுதுகொள்வது நாராயணனை. அவன்தான் ஆதிமுதல்வன். ஆழிமழைக் கண்ணன். மன்னனின் தோழன் எப்படி தரித்திரனாய் இருக்க முடியும்... வாருங்கள், நாம் அந்த மழைக் கடவுளுக்கு எப்படி மழைபெய்யவேண்டும் என்று சொல்லித் தருவோம்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து

தாழாதே சார்ங்கம் தொடுத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்

ரங்கநாதர்
ரங்கநாதர்

கிருஷ்ணதேவராயருக்குக் கோதையின் பெருமைகள் யாவும் கேட்கக் கேட்க சலிக்காததாயிருந்தன.

``மன்னா, நம் வீட்டுப் பெண்பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கிறபோது விளையாட்டாய், `நீ பெரியவளானதும் யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்...' என்று கேட்பதுண்டு இல்லையா... அப்படித்தான் விஷ்ணுசித்தரும் கோதையைக் கேட்டார்.

துளசிச்செடியின் கீழ் அவதரித்த நாள் முதலாய் அவள் கேட்டதும் பார்த்ததும் விஷ்ணுசித்தரின் நாமசங்கீர்த்தனத்தையும் நித்திய பூஜையையுமே. அப்படியிருக்க அவள் நினைவில் அந்த கோவிந்தனைத் தவிர வேறு யார் தோன்றுவர்...

``அப்பா, அந்தக் கோவிந்தனைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்" தேனினுமினிய மழலைக் குரலில் சொன்னாள்.

அறியா வயதிலும் அவள் அரியைப் பற்றிப் பேசியதில் விஷ்ணுசித்தர் அகமகிழ்ந்தார்.

பிள்ளையின் சொல்தானே, மழலை மாறும்போது மனமும் மாறிவிடும் என்று நினைத்தார். ஆனால், நிலமகளில் விழுந்த விதை முளைக்காது போகுமா...

அவள் வளரும்போது அவன் மீதான பிரேமையும் வளர்ந்து கிளைத்தது. அவனையே அவள் மனம் கிளையாக்கிக் கொள்ளத் துடித்தது. காலங்கள் ஓடின. வளர்ந்துவிட்ட கோதையிடம் வளர்ந்துவிட்ட பக்திபாவம் கண்டு ஆழ்வார் அதிசயித்தார்.

``கோதை நீ யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?"

கோதை ஒரு கணம் தந்தையை உற்றுப் பார்த்தாள். பின் புன்னகையோடு பதிலுரைத்தாள்.

ஸ்ரீநவநீத கிருஷ்ணன்
ஸ்ரீநவநீத கிருஷ்ணன்

``ஏற்கெனவே நான் சொல்லியிருந்ததுதான் என் பதில். அந்தப் பெருமாளே என் இறைவன். என் துணைவன்"

``சரிதான். நீ சொல்லும் இறைவன் எவன்? அவனுக்கு ஏராளமான திவ்ய தேசங்கள். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு நாமம். அத்தனைபேரில் நீ யாரை மணக்கப் போகிறாய்..."

செந்தமிழ் பாக்களால் செவி நிறைக்கப்போகும் மகளின் சிந்தையோடு விளையாட விரும்பினார் சித்தர்.

``அப்பா, நீங்கள் ஒவ்வொரு தலமாகச் சொல்லுங்கள் எந்தத் தலத்து இறைவன் மீது என் உள்ளம் குவிகிறதோ, அந்தத் தலத்து மறையவனையே நான் மணக்கிறேன்."

கன்று மடியில் முட்டியதும் பால் சுரக்கும் பசுவினைப்போல, அந்த மாலவனின் நாமத்தைச் சொல்லச் சொன்னதும் சிந்தை மகிழ்ந்து அவன் பெருமை உரைக்கலானார் விஷ்ணுசித்தர். அதைக் கேட்ட கோதையும் தன் மனதில் ஒவ்வொரு பெருமாளையும் தரிசனம் செய்ய ஆரம்பித்தாள்."

``கோதை, அடேங்கப்பா, இந்தப் பாவை நோன்பில் இத்தனை பலன்களா?"

``அதெல்லாம் மாதம் மும்மாரி மழை பொழிகிறதுதான். யார் இல்லை என்றது. என்ன ஒவ்வொரு மழையும் கொசுத் தூறலாய் முடிந்து போகிறது. மண் வாசமும் உஷ்ணமும் எழுவதோடு சரி. மண் குளிர மழை பெய்வதேயில்லையே. இந்த நோன்பைக் கடைப்பிடித்தால் மழை வெளுத்துக்கட்டுமா..."

கோதை சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவர்களின் கேள்விகளைப் பழித்தாள்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

``நாம் தொழுதுகொள்வது நாராயணனை. அவன்தான் ஆதிமுதல்வன். ஆழிமழைக் கண்ணன். மன்னனின் தோழன் எப்படி தரித்திரனாய் இருக்க முடியும்... வாருங்கள், நாம் அந்த மழைக் கடவுளுக்கு எப்படி மழைபெய்யவேண்டும் என்று சொல்லிக் காட்டுவோம். நாம் சொன்ன சொல்லை மீற அவனுக்கு வழியிருக்கிறதா என்ன... நமது நாம சங்கீர்த்தனத்தின் செல்வாக்கு செல்லாத இடம் ஏதேனும் இருக்கிறதா என்ன...

மழை தேவனே, நீ எப்படி மழை பெய்யவேண்டும் என்பதை ஆய்ச்சியர்களான நாங்கள் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரைகளிலிருந்து கால் நனைப்பதுபோல் அல்லாமல் ஆழமாகச் செல். முங்கி வேண்டுமட்டும் நீரைக் குடித்து, கறுத்த உடலாக மாறு. எப்படிப் பட்ட கறுப்பு தெரியுமா... ஊழிக்காலம் முதல் இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல் மாறு.

ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்
ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி... நோன்பின் பயன்களைப் பட்டியலிடுகிறாள் கோதை! - திருப்பாவை 3

அவனின் திருமேனி போன்ற கறுமையாக இருந்தால் மட்டும் போதாது, அவனின் பராக்கிரமங்களும் வேண்டும். அந்த பத்மநாபனின் கையில் இருக்கும் இணையற்ற சக்கராயுதத்தைப்போல மின்னவேண்டும். அதனால் உருவாகும் இடி சாமானிய இடியாக இருக்கக்கூடாது. பாரதப் போரில் பகைவர்களை நடுங்க வைத்ததே பாஞ்ஜசன்யம் அதுபோல முழங்கவேண்டும். கோதண்ட ராமனின் தாழாத சாரங்கத்திலிருந்து இடைவிடாது பொழியும் சரமழைபோல் நீ பொழியும் மழையிருக்க வேண்டும், புரிகிறதா..."

ஆண்டாள் இவற்றையெல்லாம் பாசுரமாகவே பாடப் பாட பெருமழை பெய்து பெருகுவதுபோன்ற பேருணர்வைப் பெற்றனர் ஆய்ச்சியர்.

``அடேங்கப்பா, கோதை உன் அதிகாரம் தூள் பறக்கிறதே... " என்றால் ஒருத்தி.

``நீ சொல்வதில் இருக்கும் இயற்கையின் இயங்கியல் எம்மை சிலிர்க்க வைக்கிறது..."

``என்னைப் போற்றியதுபோதும். வாருங்கள் மார்கழி நீராடி அந்த மாயவனைப் போற்றுவோம்."

***

இந்தப் பாசுரம் மழைவேண்டிப் பாடும் பாசுரமாகக் கருதப்படுகிறது. இந்தப் பாசுரத்தை ஒரு நாளில் 108 முறை அனைவரும் கூடிப் பாட நிச்சயம் மழை வரும் என்பது ஐதிகம்.