Published:Updated:

ஆவணி மாதச் சிறப்புகள்: துன்பங்கள் நீங்கும் மாதம் இது... ஏன், எப்படி?!

ஆவணி மாதச் சிறப்புகள்
ஆவணி மாதச் சிறப்புகள்

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று (17-8-21) ஆவணி மாதம் பிறந்திருக்கிறது. சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள். சூரியன் சிம்மத்தில் வலுப்பெறும் இந்த மாதத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அது பலன் தரும் என்பது நம்பிக்கை. இதனாலேயே சிங்க மாதம் எனப்படும் ஆவணி வழிபாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்ற மாதமாகப் போற்றப்படுகிறது.

'சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை; சிவனுக்கு இணையான இறைவனும் இல்லை' என்கிறார் அகத்திய மாமுனி. தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. கேரளத்தில் இதுவே முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கொள்ளப்படுகின்றது. சிரவண நட்சத்திரம் என்று வடமொழியில் அழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி நாள் வருவதால் இது சிரவண மாதம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இந்த மாதமே வேதம் கற்றுக்கொள்ள தொடக்க மாதமாக இருந்து வந்துள்ளது. இன்று அது தேய்ந்து தேய்ந்து வெறும் பூணூலை மாற்றிக் கொள்ளும் ஒரு சடங்கான மாதமாக மாறிப் போயுள்ளது என்கிறார்கள் ஆன்றோர்கள். இம்மாதத்தில்தான் சாதுர்மாஸ்ய விரதத்தின் உச்ச தினங்கள் வருகின்றன. இதனால் இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் முக்கியமானவை என்பர்.

ஆவணி
ஆவணி
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் இணைந்து கடைய, அழுத்தம் தாளாத வாசுகிப் பாம்பு ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சை கக்கி விடுகிறது. இதனால் சகல தேவர்களும் அஞ்சி ஓட, தியாகத் திருவுருவான ஈசன், அந்த விஷத்தை தாம் ஏற்றுக்கொண்டு சகல லோகங்களையும் காக்கிறார்.

ஈசனுக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க சக்திதேவி தொண்டையைப் பற்றிக் கொண்டு அவரை நீலகண்டன் என்றாக்குகிறார். அவர் உடல் உஷ்ணத்தால் மாறிவிடாது இருக்க தேவர்கள் அவருக்கு கங்கையால் அபிஷேகம் செய்து, தலையிலேயே கங்கை மற்றும் சந்திரனை அமர வைத்து குளிர்ச்சியை உருவாக்குகிறார்கள். இது எல்லாம் நடைபெற்றது ஆவணியில் என்கின்றன புராணங்கள். இதனால் ஆவணி என்பது துன்பங்கள் நீங்கும் மாதம் என்றும், இது ஈசனுக்கு உரிய மாதம் என்றும் சொல்வர்.

வாமன மூர்த்தி
வாமன மூர்த்தி

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன. மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு. அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார். அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இது சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.

சைவ சமயத்தின் முதல் பெண் ஓதுவாமூர்த்தி மதங்க சூளாமணியார் வரலாறும், கற்றுத்தரும் பாடமும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள்.

ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம்

அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.

விழாக்களுக்கும் விரதங்களுக்கும் மட்டுமில்லாமல் இந்த மாதத்தில் பல ஆன்றோர்களும் அடியார்களும் தோன்றி உள்ளனர். இளையான்குடி மாற நாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் போன்றோரின் குருபூஜை வருவதும் இந்த மாதத்தில்தான்.

சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில என ஆன்மிக திருவகுப்புகள் செல்ல ஏற்ற மாதம் ஆவணி. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.

அடுத்த கட்டுரைக்கு