Published:Updated:

நல்லன அருளும் நவராத்திரி: மூன்றாம் நாள் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

நவராத்திரி

நவராத்திரி மூன்றாம் நாள் சிறப்புகள்: இன்று அம்மன் நான்கு வயது குழந்தையாக அருள்புரிகிறாள். கல்யாணி என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

நல்லன அருளும் நவராத்திரி: மூன்றாம் நாள் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

நவராத்திரி மூன்றாம் நாள் சிறப்புகள்: இன்று அம்மன் நான்கு வயது குழந்தையாக அருள்புரிகிறாள். கல்யாணி என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

Published:Updated:
நவராத்திரி

நாம் அனைவரும் கோயிலுக்குச் செல்வது என்பது மனதில் உள்ள குழப்பத்தை நீக்கவோ அல்லது நற்காரியங்களில் வெற்றி பெற பிரார்த்தனை செய்யவோதான். மனிதரால் உதவ முடியாது என்ற நிலை வரும்போது நிச்சயம் நாம் கடவுளைத்தான் சரண் அடைவோம். அதிலும் தாயைப் போன்ற அன்னை சக்தியை சரணம் என்று தஞ்சம் அடைந்துவிட்டால் போதும். தாயினும் சிறந்த தயாபரியாக துணை நின்று நமக்கு எது நல்லது, எது கெட்டது எனத் தேர்ந்தெடுத்து அந்த அம்மன் தருவாள். நாம் பிரார்த்தனை செய்கையில் நல்லதை மட்டுமே வேண்டி கேட்க வேண்டும். ஏதேனும் விபரீதமான பிரார்த்தனைகளை வேண்டிவிட்டால், அதிலிருந்து காப்பாற்றவும் அந்த அம்மனிடமே சரணாகதி அடைய வேண்டும். இதற்கு ஓர் உதாரணம் இதோ...

ஒரு அரசனின் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் அம்பிகையின் பக்தை. எனினும் அவளுக்கு மனதில் ஒரு விபரீத ஆசை உண்டாயிற்று. தன் மகன்கள் எவரும் அழிக்க முடியாத இணையில்லா வீரனாக இருக்க வேண்டுமென்று. அதோடு தன் மகன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஒரு புதிய குழந்தை பிறக்க வேண்டுமென்றும் விபரீத விருப்பம் கொள்கிறாள். சோமவார விரதமிருந்து சிவபெருமானைப் பிரார்த்தனை செய்து வேண்டிய வரத்தையும் பெற்று விட்டாள்.

கல்யாணி
கல்யாணி

பிரசவ காலம் நெருங்கியது. இவள் வாங்கிய வரம் பற்றி அரண்மனையில் இருப்போருக்குத் தெரிந்துவிட்டது. இதனால் அனைவருக்கும் பயம் ஏற்பட்டது. இந்த குழந்தை பிறக்கையில், அந்தக் குழந்தையிடமிருந்து விழும் ரத்தத் துளிகளால் எத்தனை குழந்தை உயிர்த்தெழுமோ, அதனால் என்ன விபரீதம் ஏற்படுமோ எனக் கவலை கொண்டனர்.

ஆனால் அம்பிகை கைவிட்டு விடுவாளா என்ன? அரசி பிரசவ வலி ஏற்பட்டு துடிக்க, அம்பிகை தானே மருத்துவச்சியாக உருமாறி வந்து பிரசவம் பார்க்கிறாள். தன் மடியில் அந்தத் தாயைக் கிடத்தி வயிற்றை விலக்கி, ஒரு துளி ரத்தம் கூட கீழே விழாமல் மழலையை எடுத்து இரு உயிரையும் காக்கிறாள். நடக்கப்போவது விபரீதம் என்று உணராமல் நாம் கேட்கும் வரம் தவறாக இருந்தாலும் அதைத் தடுத்து நல்லவிதமாக மாற்றிக் கொடுப்பவள் அன்னை சக்தி. அவளை நவராத்திரி நாளில் கொண்டாடுவோம்.

மூன்றாம் நாள் சிறப்புகள்:

இன்று அம்மன் நான்கு வயது குழந்தையாக அருள்புரிகிறாள். கல்யாணி என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

இன்றைய நாளுக்கான ஸ்லோகம்:

'கல்யாண காரிணி நித்யம்

பக்தானாம் பூஜிதா அனிஷம்

பூஜயாமி ச தாம் பக்த்யா

கல்யாணிம் சர்வகாம்யதாம்!'

பொருள்: எந்த தேவி நித்தமும் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு அனைத்து மங்கலங்களையும், விருப்பப்படும் அனைத்து பொருட்களையும் தருகிறாளோ, அந்த கல்யாணி தேவியை நான் இன்று பூஜிக்கிறேன்.

நவராத்திரி விரதம்
நவராத்திரி விரதம்

இந்த நாளில் ஸ்லோகம் சொல்லி முத்துக்கள் வைத்தோ அல்லது பாசியாலோ கோலம் போட்டு, மருக்கொழுந்து வைத்து வெள்ளை அல்லது பச்சை சம்பங்கியால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து, காம்போதி ராகத்தில் பாடி அம்மனை ஆராதிக்க வேண்டும்.

இவ்வாறு மனம் நெகிழ கல்யாணி தேவியைப் பிரார்த்தனை செய்தோமேயானால், நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைப்பாள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கச் செய்வாள். கல்யாண வரம் அருள்வாள். நம்பிக்கையோடு அம்பிகையை ஆராதியுங்கள். நலன்கள் யாவும் விளையும்!