Published:Updated:

ஆனைக்கல் மலைக்கு ஓர் ஆன்மிகப் பயணம்... சிலிரிப்பூட்டும் ஐயப்ப தரிசனம்! #Video

ஆனைக்கல் மலை
ஆனைக்கல் மலை

இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதைப் பயணம். சபரி யாத்திரையின் பெரிய பாதைக்கு ஒப்பான பயணவழி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இறைவனை இயற்கையான சூழலில் வழிபடுவது தன்னிகர் இல்லாத அனுபவம். அதிலும் ஐயப்பனை மலைமேல் வழிபடுவது அதற்கு ஈடு இணையே இல்லை. சபரிமலை தரிசனத்தைவிட சபரி யாத்திரையே மகத்துவம் வாய்ந்த அனுபவமாக சாமிமார்களுக்கு விளங்கும். அதேபோன்று ஐயப்பன் மலைமேல் அருளும் தலங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்று ஆனைக்கல் மலை. இதன் சிறப்பு என்னவென்றால் சபரி யாத்திரையில் பெரியபாதையில் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவம் இந்த ஆனைக்கல் மலையாத்திரையிலும் கிடைக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது, ஆனைக்கல் மலை. மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள - சுமார் 2500 அடி உயரம் கொண்ட குன்றுதான் இந்த ஆனை மலை.

ஆனைக்கல் மலை சாஸ்தா
ஆனைக்கல் மலை சாஸ்தா

இந்த மலைமுகட்டை உற்றுக் கவனித்தால், உச்சியில் திகழும் பாறை ஒன்று யானை படுத்திருப்பது போன்று தோன்றும். ஆகவே, இந்த மலையை ஆனைக்கல் மலை என்கிறார்கள் பக்தர்கள். நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆனைக்கல் மலை. இயற்கை எழிலார்ந்த இந்த மலையின் குகை ஒன்றில் அருள்பாலிக்கிறார், ஆனைக்கல் ஸ்ரீதர்மசாஸ்தா.

முனிவர்கள் பலர் தவம் செய்து அருள்பெற்றதாகச் சொல்லப்படும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்த ஆனைக்கல் சாஸ்தாகோயிலுக்குச் சென்று வழிபடுவது அலாதியான அனுபவம்.

இந்த மலைக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. நாகர் கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கி.மீ. பயணித்தால், தோட்டியோடு என்ற பகுதி வரும். அங்கிருந்து மெளன குருசுவாமி மடம் வழியாக செல்ல வேண்டும். சிறிது தூரம் வாகனங்களில் செல்லலாம். பிறகு சுமார் 5 கி.மீ. தூரத்துக் குக் கரடுமுரடான மலைப் பாதையில் பயணிக்க வேண்டும்.

மற்றொரு மார்க்கம்... நாகர்கோவிலிலிருந்து பார்வதிபுரம், கள்ளியங்காடு ஆலம்பாறை வழியாகச் சென்று, மலைமீது ஏறிச் செல்லலாம். எந்த வழியாகச் சென்றாலும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மரங்களும் புதர்களும் நிறைந்த பகுதி வழியாக நடந்துதான் மலைக்கு மேல் செல்ல முடியும்.

சாஸ்தா தரிசனம்
சாஸ்தா தரிசனம்

ஆனைக்கல் மலைக்குச் செல்லும் வழிகளில், ஆங்காங்கே பெயிண்ட் மூலம் எழுதப்பட்ட அடையாளங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. தோட்டியோடு பகுதி வழியாக செல்லும் பாதையைப் பக்தர்கள் இப்போதுதான் சீரமைத்து வருகிறார்கள். மலைப்பாதையில் நடந்து ஆனைக்கல் தர்மசாஸ்தா கோயிலைச் சென்றடைய குறைந்தது சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.

இந்த மலையில் ஏறிச் செல்லும்போது, சபரிமலைக்குப் பெருவழிப் பாதையில் பயணிக் கும் அனுபவம் கிடைக்கிறது. நம் பயணத்தில் பக்தர்கள் சிலரும் பூஜைப் பொருள்களுடன் மலையேறி வந்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு வழியாக, யானையைப் போன்று திகழும் பாறை இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்தப் பாறையின் வடக்குப் பகுதியில், வடக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. பாறையில் அமைந்துள்ள குகை போன்ற பகுதியில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீபூதத்தான் மற்றும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன

ஸ்ரீதர்மசாஸ்தா இடக் காலை மடித்து வைத்து, வலக் காலை தொங்கவிட்டபடி, கையில் தாமரை மலரை ஏந்தியவண்ணம் அருள்பாலிக்கிறார். அவரின் திருமுன் யானை வாகனம் அமைந்துள்ளது.

கோயிலுக்கு வெளியே திறந்தவெளியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கோயிலுக்குள் உள்ள ஒரு பாறையில் ‘இலங்கத்து புத்தன் வீடு’ எனும் சிறிய கல்வெட்டு ஒன்று உள்ளது.

இயற்கை அழகு ஓடை
இயற்கை அழகு ஓடை

இந்தக் கோயிலில் பூஜை செய்ய தனியாக பூசாரிகள் எவரும் இல்லை. மலை ஏறிச் செல்லும் பக்தர்களே சுவாமிக்கு பூஜை செய்கிறார்கள். பூஜை செய்வதற்கான உபகரணங்கள், நைவேத்தி யம் மற்றும் உணவு வகைகளைத் தயாரிக்கப் பயன்படும் பொருள்களைக் கோயிலிலேயே வைத்துள்ளார்கள்.

இந்த மலையில் சுவாமியின் சந்நிதி எப்படி வந்தது? இந்தத் தலத்தில் இயற்கை சுவாமிக்கு நித்திய அபிஷேகம் செய்கிறதாமே... அது என்ன? இங்கு வரும் பக்தர்கள் எப்படி வழிபடுகிறார்கள்? இந்த மலையின் சிறப்புகள் என்ன என்பன குறித்த விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். இயற்கையின் பேரழகையும் சாஸ்தாவின் தரிசனம் என்னும் பேரனுபவத்தையும் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு