Published:Updated:

"திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தானம்" - 400 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கல்வெட்டுடன் ஆய்வு நடுவத்தினர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஒரு கிராமத்தையே தானமாகத் தந்த செய்தியைக் கூறும் பிற்கால விஜயநகர காலத்துக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

"திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தானம்" - 400 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஒரு கிராமத்தையே தானமாகத் தந்த செய்தியைக் கூறும் பிற்கால விஜயநகர காலத்துக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

Published:Updated:
கல்வெட்டுடன் ஆய்வு நடுவத்தினர்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே அகரம் என்னும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில்... அண்ணாமலையார் கோயிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "நண்பர் ஒருவருடன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்ட போது, ராதாபுரத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில், ஆதிசிவன் கோயிலுக்கு எதிரே உள்ள வயல்வெளியில் வேப்பமரத்தின் அடியில், பலகைக்கல் ஒன்று இருப்பதைக் கண்டோம். சுமார் 5 அடி உயரத்திலும், 3அடி அகலத்திலும் அந்தக் கல் காணப்பட்டது. அங்குள்ள மக்களிடம் பலகைக்கல் தொடர்பாக விசாரித்த போது, அது பலகாலமாக மண்ணில் விழுந்து கிடந்ததாகவும், சில வருடங்களுக்கு முன்னரே அதனை எடுத்து மரத்தின் கீழ் நிறுவியதாகவும் தெரிவித்தனர்.

வயல்வெளி பகுதியில் கல்வெட்டு
வயல்வெளி பகுதியில் கல்வெட்டு

அதனைச் சுத்தம் செய்து பார்த்தபோது விஜயநகர காலத்திய எழுத்துக்கள் இருப்பதை கண்டோம். அந்தப் பலகைக் கல்லின் இடப்புறத்தில் சூரிய - சந்திரருடன் திருவண்ணாமலை கோயிலுக்குத் தரப்பட்ட தானத்தைக் குறிக்கும் 'சோணாசல கீரி' காணப்படுகிறது. நடு பகுதியில் சூலமும், வலது புறத்தில் இரு குத்து விளக்குகளும் காட்டப்பட்டுள்ளன. இதற்குக் கீழே உள்ள மீதி பகுதியில் 16 - 17ம் நூற்றாண்டின் எழுத்தமைதியையொத்த கல்வெட்டு இடம் பெற்றிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'ஸ்ஸ்ரீ' எனத் தொடங்கும் இக்கல்வெட்டு சோழர்களையும், சிங்களவர்களையும் வென்ற வெற்றி செய்தியை முதலில் குறிப்பிடுகிறது. "இராவிந குமாரர் வேங் இராச" என்பவர், 'வக்கையூர்' என்ற ஊரைத் அண்ணாமலையார் கோயிலுக்கு தானமாக அளித்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை நாச்சியாருக்கும் அர்த்தசாம கட்டளைக்கு 30 பாக்கும், 20 வெற்றிலையும் அடங்கிய 'அடைகாய அமுது' அளித்துள்ளார். இதனை நிறைவேற்ற அவ்வூரைச் சேர்ந்த ‘மெய் சொல்லும் பெருமாள் அண்ணாமலையார்’ என்னும் மாகேஸ்வரரை நியமித்துள்ளார்.

கல்வெட்டு
கல்வெட்டு

இக்கல்வெட்டில் பெரும்பாலான வார்த்தைகள் பாதி சொற்களாக இருப்பதோடு, அம்மன்னரின் பெயர் மற்றும் காலம் தெளிவாகத் தரப்படவில்லை. எனினும், இக்கல்வெட்டில் வரும் ‘வேங்’ என்ற சொல்லை வைத்து இதனை வேங்கடபதி மன்னராகக் கருதலாம் என்றார் இக்கல்வெட்டைப் படித்த ஓய்வு பெற்ற மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ஒருவர்.

பிற்கால விஜயநகர ஆட்சியில்... இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586-1614) மற்றும் மூன்றாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1632-1642) என்று இருவர் உள்ளனர். மூன்றாம் வேங்கடபதி ராயர் காலத்தில், விஜயநகர சாம்ராஜ்யம் பெருமளவில் வீழ்ச்சி கண்டு 300 வருட கால ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரின் காலம் முழுவதும் போரிலேயே கழிந்ததாக வரலாறு கூறுகிறது.

முதலாம் ஸ்ரீரங்கா ஆட்சியின் போது பெரிதும் வீழ்ச்சி கண்டிருந்த விஜயநகர சாம்ராஜியத்தை மீட்டெடுத்து சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் இரண்டாம் வேங்கடபதி ராயர்.

கல்வெட்டு ஆய்வு
கல்வெட்டு ஆய்வு

இவரது காலத்தில் தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்குக் கொடை வழங்கப்பட்டிருந்தாலும் குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குப் பல கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை இக்கோயிலில் பதிவாகியுள்ள 9 கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. எனவே இவரின் காலத்திலேயே இந்த தானமும் வழங்கியிருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.

திருவண்ணாமலையை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்குக் கொடை அளிக்கப்பட்டது போலவே, 'வக்கையூர்' என்ற ஊரும் தானமாக தரப்பட்டுள்ளதை சுமார் 400 வருடம் பழைமையான இக்கல்வெட்டின் மூலம் நம்மால் அறியமுடிகிறது. எனவே, நம் முன்னோர்களின் காலத்திய வரலாற்றைக் கூறும் இந்தக் கல்வெட்டு முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதே" என்றார்.