Published:Updated:

"100 ஆண்டுகள் பழைமையானது... ஆனால் அதுதான் என் பொக்கிஷம்!" - ரேவதி சங்கரன் வீட்டு பூஜை அறை! #Video

ரேவதி சங்கரன்
ரேவதி சங்கரன்

ரேவதி சங்கரனின் பூஜை அறை மிகச் சிறியதுதான். ஆனால் மிகவும் அரிய பொக்கிஷங்களைக் கொண்டிருந்தது. பூஜை அறையின் அமைப்பில் இருந்து அதில் இருந்த படங்கள் விக்ரகங்கள் என அனைத்தும் சிலிரிப்பூட்டும் பின்னணியோடு அமைந்திருந்தன.

ரேவதி சங்கரன் அறிமுகம் தேவைப்படாத ஆளுமை. ஹரி கதை முதல் குழந்தைகளுக்கு நரி கதை வரை சொல்லத் தெரிந்த பிரபலம். சின்னத்திரை மூலம் பிரபலமாகி பெரிய திரைவரை தன் திறமையை வெளிப்படுத்தியவர். பாட்டி வைத்தியத்தைக் கூடப் பாட்டு வைத்தியமாகத் தரத் தெரிந்த பாடகம். துள்ளல் குரலில் இவரது டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் காண்பவர்களுக்கு கலகலப்பும் வியப்பும் ஒருங்கே கூட்டும். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரேவதி சங்கரன் வீட்டு பூஜை அறை மற்றும் அவரது ஆன்மிகம் குறித்துக் கேட்டோம்.

"என் பாட்டி மூலமே எனக்கு இசை வந்து சேர்ந்தது. கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். அதேபோன்று தருமபுர ஆதினம் பி. சுவாமிநாதன் ஐயா அவர்களிடம் தேவாரம் கற்றுக்கொண்டேன். அவர்தான் எனக்குத் தேவாரம் கற்றுக்கொடுத்து, 'எப்போது எங்கு பாடினாலும் நால்வர் துதியோடு விநாயகன் துணையோடு பாடவேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

ரேவதி சங்கரன்
ரேவதி சங்கரன்

அதை இன்றுவரை பின்பற்றுகிறேன். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை என பக்திப்பாடல்கள் அனைத்தும் படித்தேன். கர்நாடக இசையோடு பரத நாட்டியமும் கற்றுக்கொண்டேன். இறைவன் அருளால் எனக்கு அவை நல்ல முறையில் பயிற்சி ஆனது.

இசை எனக்குப் பூர்வ ஜன்ம ஆசீர்வாதமோ என்னவோ... நான் பிறந்து 11-ம் நாள் எம். எஸ். சுப்புலட்சுமி அம்மா என் வீட்டுக்கு வந்திருந்தார். என் தாயும் அவரும் நண்பர்கள். அம்மா என்னை அவர் மடியில் போட்டார். அப்போது நான் அழுதிருக்கிறேன். உடனே எம்.எஸ். அம்மா, 'கமலா, உன் பொண்ணு சுருதி சுத்தமா அழுறா... நல்லா பாடுவா' என்று சொன்னார்களாம். அப்படிப்பட்ட பெரியவர்கள் ஆசீர்வாதம்தான் என்னை வளர்த்ததுன்னு சொல்லலாம்.

சின்ன வயசுல பாட்டி கூடக் கோயிலுக்குப் போவேன். இப்போ நிறைய பேருக்கு மறந்துவிட்ட விஷயங்களை அந்தக் காலத்தில் பாட்டி சொல்லிக்கொடுத்ததால் நினைவு வச்சிருக்கேன்.

'கால்களால் பயன் என் கறைக் கண்டன் உறை கோயில் கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்' என்பது திருமுறை வாக்கு. கோயில் போனால் பிரதட்சிணம் பண்ணனும். அங்கே துவார பாலகர்கள் இருப்பாங்க. அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டே கருவறைக்குள் செல்ல வேணும். அவர்கள் எல்லாம் எப்படிக் கைவச்சிக்கிட்டு இருக்காங்க... அதுக்கு என்னென்ன அர்த்தம் என்று பல விஷயங்களை விரிவா எடுத்துச் சொல்வாங்க. அதேமாதிரி நமஸ்காரம் பண்ணுவது எப்படி... ஏன்னு விரிவா சொல்லுவாங்க.

ரேவதி சங்கரன்
ரேவதி சங்கரன்

ஆண்கள் சாஷ்டாங்கமா விழுந்து நமஸ்காரம் பண்ணனும். அஷ்ட அங்கமும் தரையில் படும்படி நமஸ்கரிப்பதுதான் சாஷ்டாங்கம். ஆனால் பெண்கள் அப்படிப் பண்ணக் கூடாது. பஞ்சாங்க நமஸ்காரம்தான் செய்ய வேண்டும். முழங்கால், கால், கை, தலை, உச்சி ஆகியன படும்படிதான் நமஸ்காரம் செய்ய வேண்டும். காரணம், பெண்ணின் அங்கங்களில் கரு இருக்கும் அறை அல்லவா வயிற்றுப்பகுதி. அதனால் அது தரையில் படக்கூடாது. அதேபோன்று குழந்தைக்கு அமிர்தம் ஊட்டும் மார்பும் தரையில் படக்கூடாது. எவ்வளவு பெரிய புனிதமான விஷயங்கள் நம் மரபில் இருந்தன. இவற்றை எல்லாம் என் பாட்டிதான் எனக்கு சொல்லிக்கொடுத்தாள்.

ஒருமுறை புதுக்கோட்டை போயிருந்தபோது சாந்தானந்த சுவாமிகள் என்னை அழைத்து என் கையில் ஒரு சக்கரத்தைக் கொடுத்து, 'நீ சென்னையில் போய் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள் அவரிடம் போய் உபதேசம் வாங்கிக்கோ' என்று சொன்னார். அப்படி ராஜ கோபால சாஸ்திரிகள் மூலமே எனக்கு மந்திர உபதேசம் ஆனது. புவனேஸ்வரி தாயின் அருள் உனக்குப் பரிபூரணமா இருக்கு என்று சொல்லி அவர் ஆசீர்வாதம் செய்து மந்திரோபதேசம் கொடுத்தார். இன்னைக்கு வரைக்கும் அதை ஜபம் செய்துகொண்டு வருகிறேன்" என்றவரிடம் அவரின் பூஜை அறை பொக்கிஷம் குறித்துக் கேட்டோம்.

ரேவதி சங்கரன்
ரேவதி சங்கரன்

மகிழ்ச்சியோடு அவர் முதலில் எங்களுக்குக் காட்டியது ஶ்ரீதர ஐயாவாளின் படத்தை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமை வாய்ந்த அந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும்போது அதுவே தன் வாழ்வில் ஆன்மிகம் என்றால் என்ன என்று உணர்த்தியது என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டார். அதேபோன்று, அவர் பூஜை அறையில் இருக்கும் விக்ரகங்களைப் பற்றிச் சொல்லும்போது ஒவ்வொன்றுக்கும் பின் இருக்கும் கதையினைப் பகிர்ந்துகொண்டார். முத்தாய்ப்பாக அந்த பூஜை அறை அமைப்பில் இருந்த அற்புதம் ஒன்றைக் காட்டினார். அதை செய்துகொடுத்தவர் ஹசன் என்னும் ஓர் இஸ்லாமியர் என்று சொல்லி மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார். அதை அவர் சொல்லும்போதே நமக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது.

ரேவதி சங்கரன் அவர்களின் பூஜை அறைப் பொக்கிஷங்கள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
அடுத்த கட்டுரைக்கு