Published:Updated:

காவிரியை வணங்குவோம்

ஆடிப்பெருக்கு
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப்பெருக்கு

ஆடி-18

காவிரியை வணங்குவோம்

ஆடி-18

Published:Updated:
ஆடிப்பெருக்கு
பிரீமியம் ஸ்டோரி
ஆடிப்பெருக்கு

கன்னி, காவிரிப்பாவை, நீர்ப்பாவை, சோழர் குலக்கொடி, தமிழ்ப்பாவை, பொன்னி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் புண்ணிய நதி காவிரி. ஆடி-18 அன்று, பெருகிப் பாய்ந்து வரும் காவிரிப்பெண், ஒவ்வொரு இல்லத்துக்கும் வருவதாக ஐதிகம்.

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு


அன்றைய தினம், காவிரியாற்றில் அகல் விளக்குகளை விட்டு, வணங்குவர். இதனால், வாழ்வில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல், அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். `தாலிப் பெருக்கிக் கட்டுதல்' முதலான மங்கல காரியங் களையும் செய்வார்கள்.

தாலிப் பெருக்கிக் கட்டுதல்
தாலிப் பெருக்கிக் கட்டுதல்
M.Aravind - +919894496262

ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. விதைப்புக்கான நீர் ஆதாரம் ஆடி மாதத்தில் இருந்துதான் கிடைக்கத் தொடங்கு கிறது. தென்மேற்குப் பருவமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிடும். ஆடி 18 அன்று, நீர் தூம்புகள் திறக்கப்பட்டு அன்று வாய்க்கால்களில் வெள்ளோட்டமாகத் தண்ணீர் திறக்கப்பட்டு, பூஜைகள் செய்து மரியாதை செலுத்துவார்கள். ஆக, விவசாயத் தின் தொடக்க விழாவாகவும் ஆடிப்பெருக்கு திகழும் என்பார்கள் ஆய்வாளர்கள்.

நம் மன்னர்களும் தண்ணீரைப் போற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றுகளாக, ஏராளமான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. ஆடிப் பெருக்கு அன்று, வெல்லம் கலந்த பச்சரிசி, மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பூ, பழங் கள் ஆகியவற்றோடு காவிரியை மங்கலகரமாக வரவேற்று வணங்குவது நம் பண்டைய மரபு.

இந்த வருடம் 3.8.22 புதன் கிழமை அன்று ஆடிப்பெருக்குத் திருநாள். இந்த நன்னாளில் காவிரியின் புண்ணியக் கதையைப் படிப்பதும் கேட்பதும் சிறப்பு. இதனால் காவிரியில் புதுவெள்ளம் பெருகிப் பாய்வது போன்று நம் வாழ்விலும் சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.

கவேரர் எனும் மகரிஷி, ‘தனக்கு ஒரு மகள் வேண்டும்’ என்று பிரம்மனைக் குறித்து தவம் இருந்தார். இதனால் மகிழ்ந்த பிரம்மன் மகரிஷி யின் முன் தோன்றி, ‘`விஷ்ணுவின் அருளால் எனக்குக் கிடைத்த மானஸ புத்திரியை உமக்கு மகளாகத் தருகிறேன். இவளுக்கு, பெண், நதி என்று இரு உருவங்கள் உண்டு!’’ என்று அருளி மறைந்தார்.

பிரம்மன் அருளிய பெண் குழந்தைக்கு, ‘லோபா முத்திரை’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். நாள்கள் நகர்ந்தன. பருவ வயதை அடைந்த லோபாமுத்திரை, தந்தையின் ஆசி பெற்று, ஈசனை தியானித்து தவமிருந்தாள். லோபா முத்திரையின் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவள் முன் தோன்றினார்.

அவரிடம், ‘`இறைவா, நான் நதியாகி, பூமியை வளப்படுத்த அருள் புரியுங்கள்!’’ என வேண்டினாள். சிவபெருமான், ‘`உனது விருப்பம் நிறைவேறும். அத்துடன்... நீ, அகத்திய முனிவரை மணந்து இல்லறத்திலும் ஈடுபடு வாய். நதி வடிவினளான உன்னை, ‘காவிரி’ என்று எல்லோரும் போற்றுவர்!’’ என்று அருளினார். அதன்படி, ஒரு சுபமுகூர்த்த நாளில் அகத்தியருக்கும் லோபா முத்திரைக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் காசிக்குச் சென்று, சில காலம் தங்கினர். சிவ பூஜையுடன் இனிதே இல்லறம் நடத்தினர்.

இந்த நிலையில், பரமேஸ்வரனின் ஆணைப்படி அகத்தியர் தென் திசைக்குப் பயணப்பட நேர்ந்தது. லோபாமுத்திரையின் நதி வடிவை தமது கமண்டலத்தில் வசிக்கச் செய்த அகத்தியர், குடகு மலையை வந்தடைந் தார். அங்கிருந்த நெல்லி மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவத்தைத் தொடர்ந்தார். திருமாலே அங்கு நெல்லி மரமாக நின்றிருந் ததாகச் சொல்கின்றன புராணங்கள்.

லோபாமுத்திரை நதியாக மாறும் தருணம் வந்தது! தேவர்கள் ஒன்றுகூடி விநாயகரிடம் சென்று, காவிரியைப் பூமியில் பெருகியோடச் செய்யும்படி வேண்டினர்.

இதையடுத்து, காக்கை உருவெடுத்து வந்த விநாயகர், அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்தார். உள்ளே நதி வடிவில் இருந்த லோபா முத்திரை, காவிரியாக வெளியேறினாள். எனினும், செல்லும் திசை தெரியாமல், நெல்லி மரத்தையே சுற்றி வந்தாள். தவம் கலைந்து கண் விழித்த அகத்தியர், நடந்ததை அறிந்து வருந்தினார்.

பிறகு, ‘எல்லாம் இறைவன் சித்தம்’ என்று ஒருவாறு ஆறுதல் அடைந்தவர், காவிரி நல்லாளுக்கு வழிகாட்டியபடி நடக்க ஆரம்பித் தார். அவரைப் பின்தொடர்ந்த காவிரி, சோழ நாடு உட்பட பல தேசங்களை வலம் வந்து கடலில் கலந்தாள்.

புனித நதியாம் காவிரிக் கரையின் பல இடங்களில் லிங்கங்களை ஸ்தாபித்து, அவற்றுக்குக் காவிரி நீரால் திரு முழுக்காட்டி, கோயில் எழுப்பி வழிபட்டார் அகத்தியர். இந்த லிங்கத் திருமேனிகள் அருள்புரியும் ஆலயங்கள், அகஸ்தீஸ்வரங்களாகப் போற்றப்படுகின்றன.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காவிரி குறித்து ஒரு தகவலைச் சொல்கிறது. அது என்ன தெரியுமா?

‘காந்தமன் என்ற சோழ மன்னன், ‘தனது நாடு வளமுடன் திகழ, வற்றாத ஜீவ நதி வேண்டும்’ என்று அகத்தியரிடம் வேண்டினான். அதை ஏற்ற அகத்தியர், தமது கமண்டல நீரைத் தரையில் கவிழ்த்து, ‘விரிந்து செல்க!’ என்றார். அந்த நீர், பல்கிப் பெருகிக் காவிரி யாகப் பிரவாகித்தது!’ என்கிறது மணிமேகலை.

நாமும் 18-ம் பெருக்கன்று காவிரி முதலான நதிப்பெண்களை வணங்கி வளம் பெறுவோம்.


கருடன் பிறந்த ஆடி சுவாதி!

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத் தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாள்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.