Published:Updated:

ஆடிக்கூழும் அறிவியலும்!

ஆடி மாதம்
பிரீமியம் ஸ்டோரி
ஆடி மாதம்

சிவ.சதீஷ்குமார்

ஆடிக்கூழும் அறிவியலும்!

சிவ.சதீஷ்குமார்

Published:Updated:
ஆடி மாதம்
பிரீமியம் ஸ்டோரி
ஆடி மாதம்

ஆடிமாதம் என்றாலேயே நம் நினைவுக்கு வருபவை அம்மன் வழிபாடும் ஆடிக்கூழும்தான். ஆடிமாதம் அனைத்து அம்மன் கோயில்களிலும் கூழ் ஊற்றுவது வழக்கம். இந்தக் கூழ் ஊற்றுவதில் சில விஞ்ஞான விழுமியங்களும் அடங்கியுள்ளன என்கிறார்கள்.

ஆடி கூழ்
ஆடி கூழ்


ஆடிமாதம் மழைக்காலம் தொடங்கும் காலம் என்பதால் அப்போது நுண்கிருமிகளால் நோய்கள் அதிக அளவில் பரவும். முற்காலத்தில் அம்மை நோய் ஆடிமாதத்தில்தான் அதிகமாகப் பரவியது. காரணம் ஆடி மாதத்தில் காற்றும் அதிக விசையு டன் வீசும். ஆகவே, அந்தக் காற்றில் கிருமிகள் கலந்து நோய் பரவும்.

இதையொட்டியே `ஆடிக் காற்றில் அம்மையும் பரவும்' என்றார்கள். அப்பழமொழி `ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்' என்று மருவிவிட்டது.

இங்ஙனம் பல நோய்கள் பரவுவதற்கு ஏற்ற பருவ நிலை உடையதாக ஆடி மாதம் விளங்கியதால் 'நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து நோய் வருமுன் காக்க வேண்டும் என்று கருதியே, முன்னோர் ஆடிமாதம் கூழ் ஊற்றினர்.

கூழில் பயன்படுத்தப்படும் கேழ்வரகில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி நோயை வருமுன் காக்க உதவுகின்றன. ஆடிக் கூழ் தயார் செய்தால், அவரவர் வீட்டில் அவரவர் மட்டுமே குடிக்காமல் அனைவருக்கும் வழங்கி, எல்லோரும் நோயின்றி வாழ வழி செய்தனர் நம் முன்னோர்.

அக்காலத்தில் ஆடி மாதத்தில்தான் அதிகமாகப் பஞ்சம் நிலவும். அப்பஞ்சத்தால் வரகுகூட வாங்க இயலாத நிலைக்கும் மக்கள் ஆளாவது உண்டு. செல்வச் செழிப்பு மிக்கவர்கள், ஏழை-எளியவர் களைத் தங்களின் இல்லத்திற்கு அழைத்துக் கூழ் ஊற்றுவது, கூழ் பருக வருவோரின் இல்லாமையை வெளிக்காட்டுவதுபோல் இருக்கும் என்று கருதி, ஆலயத்தில் அம்பாளின் பிரசாதமாகக் கூழ் ஊற்றினார்கள் போலும்.

மேலும், தட்பவெப்பம் சரியாக இல்லாத நாள்களிலும் எளிதில் செரிக்கக் கூடிய உணவு இந்தக் கூழ். இதில் இடப்படும் வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் வெங்காயமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வகையில், அனைவரும் அச்செல்வத்தைப் பெற ஆடிக் கூழ் ஊற்றப்பட்டது. இப்படி கூழில் கூட அறிவியலைக் கண்டு ஆன்மிகம் வளர்த்த நம் முன்னோரை எப்படிப் போற்றுவது!