Published:Updated:

அம்பிகை துணை இருக்க ஆபத்து ஒன்றுமில்லை

அம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகை

வாசகர் அனுபவம்

அம்பிகை துணை இருக்க ஆபத்து ஒன்றுமில்லை

வாசகர் அனுபவம்

Published:Updated:
அம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகை

ஆடி என்றால் அம்மன் மாதம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லா மாதங்களும் அம்பிகையைக் கொண்டாடும் மாதங்கள் என்றே சொல்வேன். எங்கும் நிறைந்திருக்கும் சக்தி வடிவான அன்னை மாரி, சிலா ரூபமாக மட்டுமன்றி, காணும் இடம் எங்கும் நிறைந்து இருப்பவள். `எங்கெங்கு காணினும் சக்தியடா; ஏழு கடல் அவள் வண்ணமடா!' என்று பாடலே உண்டு அல்லவா!

அம்மன்
அம்மன்


பாம்பு புற்றின் அடியிலும், வேம்பின் அடியிலும் கூட எளிமை யாக வீற்றிருப்பவள் அன்னை மகமாயி. அவளின் தேவை எப்போதும் எல்லோருக்கும் உண்டு என்பதால், வீதிக்கு வீதி அவள் இல்லாத இடமே இல்லை எனலாம். அதுமட்டுமா? மங்கையரின் குங்குமத்திலும், பூசும் மஞ்சளிலும், மங்கல மாங்கல்யத்திலும் அருள்பவள் அன்னை சக்தி!

நம் தர்மத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருந் தாலும் பெண்களின் மனதுக்கு நெருக்கமானவள் மாரியம்மன்தான். பெற்ற தாயிடம் பேசுவதைப்போல அவளோடு உரிமையோடு உரையாடலாம்.

எனக்கு ஏதேனும் குழப்பமோ கலக்கமோ வந்தால், உடனே நான் அவளிடம் தஞ்சம் அடைந்துவிடுவேன். அம்மனின் படத்துக்கு முன் அமர்ந்து `என்ன செய்வது என்று சொல்லிக்கொடு, எனக்கு மனத் திடத்தைக் கொடு!' என்றெல்லாம் நச்சரித்துவிடுவேன். சேய் அழுதால் தாய் பொறுப்பாளா? எனக்கு ஏற்பட்ட கலக்கத்தை எல்லாம் வந்த இடம் தெரியாமல் போக்கிவிடுவாள். அவளின் அணுக்கத்தால்தான் அருமையான வாழ்வும் வரமும் எல்லோருக்கும் அமையும்.

பவானி தேவி, மதுரை
பவானி தேவி, மதுரை


வாழ்வில் நான் அடைந்த இன்பங்கள் யாவும் அம்பிகையின் அருளாலேதான் நடைபெற்றன என்பேன். அவற்றில் சிலவற்றை மட்டுமே எழுத்தால் எழுத முடியும். பலவற்றை என் கண்ணீர்தான் எழுதும். அவ்வளவு நெகிழ்ச்சியான அனுபங் களை அளித்திருக்கிறாள் அந்த அம்மன்.

ஷ்யாமளா, மாதங்கி என வேதங்கள் தொழும் அன்னை மீனாள் அவதரித்த மதுரை எனது ஊர். அவள் அருளாட்சி யில் என்றென்றும் நிம்மதியாக வாழ்வோரில் நானும் ஒருவள்.

பச்சை நிற மேனியளாக, பசுங்கிளியைக் கையில் ஏந்தி, ஒயிலாக சாய்ந்து, மயிலாக சாயல் கொண்டு அவள் நிற்கும் பேரழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நம் கஷ்டங் கள் எல்லாம் பறந்துவிடும்!

யாகத் தீயில் அவதரித்த சுயம்பு வடி வான அந்த மரகதவல்லி, தன்னைக் காண் பவர் எவருக்கும் கேட்பதைக் கொடுக்கும் கற்பக விருட்சமானவள்.

கண்களால் தன் குஞ்சுகளைக் காக்கும் மீனைப் போன்றவள் என்பதால் மீனாள் என்றும் அங்கயற்கண்ணி என்றும் பெயர் கொண்ட மீனாட்சி, மங்கல வரங்களை வாரி வழங்குபவள். எல்லா நாளும் இவளுக்குத் திருநாள் என்பதால் எப்போதும் இவளை விழாக் கோலத்தில் தரிசிக்கலாம் என்பது மதுரைக்கார்களுக்கு மட்டுமே கிடைத்த கொடுப்பினை!

மாமதுரையில் மீனாட்சி அம்மனின் கோயிலில் தரப்படும் தாழம்புக் குங்குமம் வெகு பிரசித்தமானது. அந்த மணமும் தூய்மையும் வேறெங்கும் கிடைக்காதது. அதனால் நான் போகும் இடமெல்லாம் அதை வாங்கிக் கொடுப்பதில் பெருமை கொள்கிறேன். ஆயிரம் ஆயிரம் அலங் காரங்கள் செய்து கொண்டாலும் நெற்றித் திலகத்துக்கு ஈடான பெருமை வேறெதற்கும் உண்டா!

எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் அந்த அன்னையின் திருவுருவை மனதில் தியானியுங்கள், கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் நிவர்த்தியாகி விடும். அனு தினமும் மீனாட்சியை வணங்கி, குங்குமம் இட்டுக் கொள் ளுங்கள், வீட்டில் சர்வ மங்கலங் களும் பொங்கிப் பெருகும்!

மீனாள் மட்டுமல்ல, நான் எங்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள அம்மனை வணங்கிவிட்டே மற்ற வேலைகளைப் பார்ப்பேன். அப்படி ஒரு பிடிப்பு அம்பாளின் மீது.

திருக்கடவூரில் அபிராமி, சிதம்பரத்தில் அவளே சிவகாமி என ஊருக்கு ஊர்... ஒரு காரணத்துக்காக அமர்ந்து இருப்பவளைக் கொண்டாடுவதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை சொல்லுங்கள்! கஷ்டத்தில் மட்டும் இல்லை, நான் சந்தோஷமாக இருந்தாலும் நான் முதலில் சென்று பார்ப்பது அம்பாளைத்தான். சந்தோஷத்தைப் பகிர்ந்து நன்றி சொல்லி வருவேன். அவள் அருளால் அந்த சந்தோஷம் இரட்டிப்பாகும்! மதுரையில் வண்டியூர் மாரியம்மனும் எனக்குப் பிரியமானவள்தான். கொஞ்சம் துடியான தேவி என்றாலும், அடியவர்களுக்கு அன்னையானவள்!

சமீபத்தில்கூட ஆன்மிகத்துடன் இணைந்து சோழர் உலாவாக ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டேன். அதில் திருச்சி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயிலில் நான் தரிசித்த லோக நாயகி அம்மனை மறக்கவே முடியாது.

கம்பீர அலங்காரத்தில் ஒரு மத்திம வயதுப் பெண்போல அவள் நின்ற அழகும் அதில் காணப்பட்ட கருணையும்... அப்பப்பா! அதேபோல திருப்புள்ளமங்கை மகிஷாசுரமர்த்தினி வடிவமும் கொள்ளை அழகு. அம்பிகை எங்கே வீற்றிருந்தாலும் அங்கு அழகும் கருணையும் பொங்கி வழியும். அவள் துணை இருக்கும்வரை எனக்கு துன்பமோ தோல்வியோ இல்லவே இல்லை!

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்

வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே!

- பவானி தேவி, மதுரை