பானகம்

தேவையானவை:
புளி - 150 கிராம் (அ) எலுமிச்சைப்பழம் - 3
வெல்லம் - 250 கிராம்
சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
பச்சைக் கற்பூரம் (விரும்பினால்) - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து, வடிகட்டவும். அல்லது எலுமிச்சைச் சாறெடுத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்துக்கொள்ளவும். பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித் தண்ணீருடன்/எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு அதில் சுக்குப்பொடி, உப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும். கோயிலுக்குக் கொடுப்பது என்றால் பச்சைக் கற்பூரம் கலந்தால் சிறப்பு.
உப்பு அடை

தேவையானவை:
பச்சரிசி மாவு (சலித்தது) - ஒரு கப்
காராமணி (சுத்தமாக்கியது) - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
தாளிக்க:
* நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
* பெருங்காயத்தூள் (விரும்பினால்) - சிறிதளவு
செய்முறை:
காராமணியை வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். பிறகு, தண்ணீர் சேர்த்துக் குழைய வேகவைக்கவும். வெந்ததும் காராமணியில் உள்ள தண்ணீரை வடிக்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின் அதோடு அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அந்த நீரில் குழைய வேகவைத்த காராமணி, வதக்கிய இஞ்சி - பச்சை மிளகாய் கலவையைச் சேர்க்கவும். இதில் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும். அப்போது இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவுக் கலவையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டவும்.
இந்த வடைகளை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான நோன்பு உப்பு அடை பூஜைக்குத் தயார்.
மாவிளக்கு

தேவையானவை:
பச்சரிசி - அரை கிலோ
ஏலக்காய் - 4
வெல்லம் - கால் கிலோ
நெய் - தேவையான அளவு
திரி - 2
செய்முறை:
பச்சரிசியைக் கழுவிக் களைந்து துணியில் பரப்பிக் காய வைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது மிக்ஸியில் சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.மாவு அரைக்கும்போதே ஏலக்காயைச் சேர்த்து அரைக்கவும். பின் வெல்லத்தைத் தூளாக்கி, அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். பின்னர் அந்த மாவை நன்றாகப் பிசைந்து உருண்டையாக உருட்டவும். உருண்டையின் மேல் எலுமிச்சைப் பழத்தை அழுத்தி குழி போலச் செய்துகொள்ளவும். குழியின் ஓரத்தில் மூன்று இடங்களில் குங்குமப்பொட்டு வைத்து, குழியில் நெய்விட்டுத் திரிபோட்டு விளக்குகேற்றி வைக்கவும். இந்த விளக்கைக் குளிர வைத்தபிறகு பிரசாதமாக அனைவரும் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரார்த்தனை நிறைவேறும் என்பதும் ஐதிகம்.
துள்ளு மாவு

தேவையானவை:
வெல்லம் - ஒரு கப்
பச்சரிசி - 2 கப்
வறுத்த பாசிப் பயறு (பச்சைப் பயறு) மாவு - அரை கப்
வடித்த சோறு - 2 கப்
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து பச்சரிசி மாவுடன் சேர்த்துக் கலக்கிக் கிளறவும். இதோடு வறுத்த பாசிப் பயறு மாவையும் சில ஊர்களில் சேர்த்துக்கொள்வார்கள். இதுதான் துள்ளு மாவு. அழுத்திக் கொழுக்கட்டைபோல பிடிக்கப்பட்ட சோற்று உருண்டையை, இந்தத் துள்ளு மாவில் ஒருமுறை புரட்டியெடுக்கவும். ஒரு முறத்தில் வேப்பிலைகளை வைத்து, அதன் மீது இந்த உருண்டைகளை வைத்து அம்மனுக்குப் படைக்க வேண்டும்.
ஆடி கொழுக்கட்டை தீபம்!
தேவையானவை:
பச்சரிசி - அரை கிலோ
வெந்நீர் - தேவையான அளவு
செய்முறை: பச்சரிசியைக் கழுவி களைந்து நிழலில் உலரவைத்து மிக்ஸியில் அரைத்து நைஸான மாவாக்கிக்கொள்ளவும். இந்த மாவில் வெந்நீரைச் சேர்த்து சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். அவற்றை இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துப் படைக்கலாம். மேலும், கொழுக்கட்டை மாவில் ஒரு விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றியும் வழிபடலாம்.
- உமா முத்து, சென்னை - 41