Published:Updated:

ஆடிக்கேட்டை நடவு உற்சவம்; கோட்புலிநாயனார் குருபூஜை விழா... நாளை தொடங்குகிறது!

சைலபதி

திருநாட்டியத்தான்குடியில் ஆடிக்கேட்டை நடவு உற்சவம் மற்றும் கோட்புலிநாயனார் குருபூஜை விழா... நாளை தொடங்குகிறது!

சிவபெருமான்
சிவபெருமான்

சிவத்தலங்களில் மிகவும் முக்கியமானது திருநாட்டியத்தான்குடி. இங்குதான் கோட்புலிநாயனார் ஒரு வேளாண்மரபில் அவதரித்தார். அதே போன்று இந்தத் தலத்தில் ஈசன் உமையம்மையோடு விவசாயியாக மாறி வயலில் நாற்றுநட்டார். இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆடிக் கேட்டை நடவு உற்சவமும் கோட்புலிநாயனாரின் குருபூஜை நிகழ்வு விழாவும் நாளை தொடங்கவிருக்கிறது.

ஆடிக்கேட்டை
ஆடிக்கேட்டை

கோட்புலிநாயனார் ஈசனிடத்தில் பெரும்பக்தி செய்துவந்தார். சோழமன்னன் படையில் தளபதியாகப் பணியாற்றிய கோட்புலி நாயனார் ஈசனுக்கு அமுதுபடைக்கும் திருப்பணியை மனமுவந்து செய்துவந்தார். ஒருமுறை போருக்குப் புறப்படும்போது, இறைவனுக்கு அமுதுபடைக்கும் திருப்பணி தடைபடக் கூடாதென்று நெல்மணிகளைத் திரட்டி ஓரிடத்தில் வைத்துவிட்டு இறைவனுக்கு அமுதுபடைப்பதைத் தவிர வேறெதற்காகவும் அந்த நெல்லைத் தொடக்கூடது என்று சொல்லிச் சென்றார்.

சில நாள்களில் பஞ்சம் தலைதூக்க, நாயனாரின் உறவினர்கள், வேறுவழியின்றி அந்த நெல்லை எடுத்துப் பயன்படுத்தினர். போர் முடிந்து திரும்பிய கோட்புலி நாயனார் இதை அறிந்து கோபம்கொண்டு, நெல்லை எடுத்துப் பயன்படுத்திய அனைவரையும் வெட்டிவீழ்த்தினார். சிவ அபராதத்தில் குழந்தை என்றும் பெரியவர் என்றும் பேதமில்லை என்று சொல்லி சிறு குழந்தையைக் கொல்ல முயன்றபோது ஈசன் அவரைத் தடுத்தாட்கொண்டு அவருக்கும் இறந்த அவர் சுற்றத்துக்கும் நற்கதி அளித்தார்.

திருநாட்டியத்தான்குடி
திருநாட்டியத்தான்குடி

இப்போதும் திருநாட்டியத்தான்குடியில் ஆடிக் கேட்டை நடவு உற்சவத்தின்போது கோட்புலிநாயனார் சிவபெருமானோடு இணைந்த ஐக்கியக்காட்சி நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடிக்கேட்டை நடவு உற்சவம் நாளை திருநாட்டியத்தான்குடியில் தொடங்குகிறது. நாளைக் காலை 7.30 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கும் இத்திருவிழா 16.8.2019 வரை நடைபெற உள்ளது.

பத்துநாள் உற்சவத்தின் அனைத்து நாள்களிலும் காலையில் பஞ்சமூர்த்திகளின் புறப்பாடும், மாலையில் சிவபெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வைபவமும் நடைபெற உள்ளன. நிகழ்வின் 5-ம் திருநாள் காலையில் இறைவன் நாற்றுநடும் வைபவம் நடைபெறும்

விநாயகர்
விநாயகர்

சுந்தரமூர்த்தி நாயனார் ஒருமுறை திருநாட்டியத்தான்குடிக் கோயிலுக்குச் சென்றபோது ஆலயத்தில் இறைவனைக் காணவில்லை. தன்னோடு விளையாடுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஈசனைத் தேடிக்கொண்டு சுந்தரர் வெளியே வந்தார். அப்போது குளக்கரையில் இருந்த விநாயகரிடம், 'ஈசன் எங்கே?' எனக் கேட்டார். விநாயகரும் பதில் கூறாது வயல்வெளியை சுட்டிக்காட்டினார். அங்கே ஈசனும் அம்மையும் அங்கே விவசாயிகளாக நாற்றுநட்டுக்கொண்டிருந்தனர். உடனே சுந்தரர் ஒரு பதிகம் பாடி ஈசனை கோயிலுக்குள் எழுந்தருள வேண்டினார்.

இந்த நிகழ்வு 10.8.2019 அன்று காலை 10.30 மணிமுதல் நிகழ்த்தப்படும். அன்று இரவு 8.30-க்கு கோர்புலிநாயனார் ஐக்கியக் காட்சி நடைபெறும். நிகழ்வின் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களும் ஆராதனைகளும் நடைபெறும். இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு இறைவனை தரிசிக்க எல்லா வளமும் கிட்டும் என்பது ஐதிகம்.