Published:Updated:

வெள்ளை நிறத்தில் அதிசய லிங்கம்!

ஆலயம் தேடுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்! - ஒரே ஆலயத்தில் 10 அற்புதங்கள்!

வெள்ளை நிறத்தில் அதிசய லிங்கம்!

ஆலயம் தேடுவோம்! - ஒரே ஆலயத்தில் 10 அற்புதங்கள்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்!

`பழைமையான சிவாலயம்; பத்து அதிசயங்களை ஒருங்கே கொண்டது. திருப்பணிக்காகக் காத்திருக்கும் அந்த ஆலயத்தை தரிசித்து வருவோமா' எனக் கேட்டார் அன்பர் ஒருவர். அது நம் கொடுப்பினை அல்லவா? உடனே புறப்பட்டுவிட்டோம். திருப்போரூருக்கு அருகில் ஆமூரில் அமைந்திருந்தது அந்த ஆலயம்.

இறையாயிரமுடையார்
இறையாயிரமுடையார்

தெய்வ சாந்நித்தியத்துடன் திகழ்ந்த ஆலயமும் சுற்றுப் பகுதியும் ஆளரவ மற்றுத் திகழ்ந்தன. ஆமூர் - பசுக்களுக்குரிய தலம். ஊரின் பெயருக்கேற்ப நிறைய பசுக்கள் மேய்ந்துகொண்டிருந்ததைக் காண முடிந்தது. ரிஷிகளும் சித்தர்களும் பசு வடிவில் வந்து ஈசனை தரிசித்த தலமாம். இன்றும் பசுமை யாகவும் அற்புத அதிர்வுகளோடும் விளங்கிவருகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியாய் தாமரைக் குளம் ஒன்றும் உள்ளது.

குளத்தைச் சுற்றிச் சென்று கோயிலுக்குள் நுழைந்தோம். எங்கிருந்தோ வந்த பசு ஒன்று மகிழ்ச்சியோடு குரல் எழுப்பியது. அதே தருணம் எங்களை வரவேற்பதுபோல் பாய்ந்து வந்த பைரவ வாகனம் ஒன்று, எங்களையும் முந்திக்கொண்டு ஆலயத்துக்குள் நுழைந்தது. இப்படியான காட்சிகள் ஏதோ தெய்வ சகுனங்களாக மனதில் பட உள்ளுக்குள் இனம்புரியாத பரவசம். `அடியார்க்கும் அடியேன் போற்றி' என்று குருமார் களையும் மகான்களையும் சித்த பெருமக்களையும் மனதுக்குள் தியானித்தபடியே உள்நுழைந்தோம்.

விநாயகர்
விநாயகர்
ஆமூர்
ஆமூர்
திரிபுரசுந்தரி
திரிபுரசுந்தரி


கணேச குருக்களும் கவுதம் குருக்களும் இன்முகத்தோடு வரவேற்று தரிசனம் செய்துவைத்தார்கள்.

ஈராயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் ஆலயம் பெரிதும் சிதிலமுற்றுப் போனதாம். 2006-ம் ஆண்டு மெள்ள திருப் பணிகள் தொடங்கப்பட்டு, 2019-ல் கும்பாபி ஷேகம் நடைபெற்றதாம். தற்போது தினமும் ஒருவேளை பூஜையுடன் கோயில் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டுவருகிறது.

ஆனாலும் நிலமட்டத்தைவிட தாழ்ந்து போயிருக்கும் சந்நிதிகளையும் ஆலயம் சுற்றுச் சுவர் இல்லாமல் திகழும் நிலையையும் கண்டு, இன்னும் பல திருப்பணிகள் செய்யவேண்டி யுள்ளதை அறிய முடிந்தது.

இந்தத் திருக்கோயிலில் 10 அதிசயங்கள் உண்டு என்று அன்பர் சொன்னார் அல்லவா? அதுபற்றி சிவாசார்யர்கள் விவரிக்க, நாம் வியந்துபோனோம். அவை உங்களுக்காகவும்...

ஈசன்
ஈசன்
முருகப்பெருமான்
முருகப்பெருமான்


1. ஈசனின் திருநாமம் இறையாயிரமுடையார். ஆயிரம் பசுக்களால் தொழப்பட்டவர் என்று பொருள். சப்த ரிஷிகள் கூடி, இங்கு ஈசனை வெண்ணெயால் வடிவமைத்து வழிபட் டார்கள் என்கிறது தலவரலாறு. இங்குள்ள ஈசன் வெண்மை நிறத்துடன் அடுக்கடுக்காக ஏழுவித நவநீத ரேகைகளுடன் காட்சிதருகிறார்.

இந்த ஸ்வாமியை நாளெல்லாம் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு-கம்பீரம்! இவரை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்


2. இங்கு தெற்கு நோக்கி அருளும் அம்பிகை திரிபுரசுந்தரி, வரப்பிரசாதியானவள். இவளை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். கல்யாண வரம் வேண்டுவோருக்கு விரைவில் நல்ல வரன் அமையும்.

3. இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் பிரம்மன். இவரிடம் நம் ஜாதகத்தை வைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், நம் தலையெழுத்து நல்லபடியாக மாறும்; நன்மைகள் விளையும்.

4. கோயிலில் அருளும் சிவசூரியன் விசேஷ மானவர். இவரே மற்ற எட்டு கிரகங்களின் சாந்நித்தியத்தையும் தன்னிடத்தில் கொண்டு, சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாராம். கிரக தோஷங்களை நீக்கும் மூர்த்தி இவர்.

5. ஈசனுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஜேஷ்டாதேவி மிக மிகப் பழைமையானவள். மாந்தி, குளிகன் சூழ எழுந்தருளியுள்ளாள். இந்த மூத்ததேவியை வணங்கிட, சகல துக்கங் களும் நீங்கி, மன அமைதி உண்டாகும்.

கணேச குருக்கள்,  கவுதம் குருக்கள்
கணேச குருக்கள், கவுதம் குருக்கள்


6. இங்குள்ள காலபைரவ மூர்த்தம் வளர்ந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை. மேல் தளத்தைத் திருமுடி தொடும்படி அருளும் இந்தக் காலபைரவரைத் தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது விசேஷம். அதன் பலனாக வீண் விரயங்களும் ஆபத்துகளும் விலகும்.

7. பெரும்பாலும் சிவ தியானத்தில் ஆலயங் களில் அருளும் சண்டிகேஸ்வரர், இங்கே விசேஷமாக - ஜடாமுடியுடன் ஆனந்த நிலை யில் அமர்ந்துள்ளார். இவரை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

8. வெகுகாலமாகப் பட்டுப்போயிருந்த ஆலயத்தின் தலவிருட்சமான சரக்கொன்றை, இங்கு வழிபாடுகள் தொடங்கியதும் மீண்டும் செழித்து வளர்கிறது. ஈசனின் முன்பு வளர்ந்து வரும் இரு சரக்கொன்றை விருட்சங்களும் சித்தர்களின் அம்சம்; பிரம்மனின் ஓம்கார ஜபத்தால் உருவானவை என்பது நம்பிக்கை.

9. சூரனுடனான போரின்போது, சமராபுரி யாகிய திருப்போரூருக்குச் செல்லுமுன் முருகன் வழிபட்ட தலங்களில் ஆமூரும் ஒன்று. இத்தலத்தில் முருகன் தமது திருவடியை ஊன்றிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவரின் திருவடித் தடம் ஒன்று வழிபாட்டில் உள்ளது.

பிரம்ம தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்


10. இங்குள்ள பிரம்ம தீர்த்தம் சகல தோஷ - பாவங்களையும் தீர்க்கவல்லது.

இத்தனை அதிசயங்களையும் தரிசித்து வியந்த நமக்குள், `இவ்வளவு பெருமைமிக்க இந்த ஆலயத்துக்கு ஏன் கூட்டமே வருவ தில்லை' என்ற கேள்வியும் எழாமலில்லை. `பிரபலமான கோயில்களுக்கு மட்டுமே செல் வது என்ற மனநிலை மக்களுக்கு மாறினால் ஒழிய, இதுபோன்ற கோயில்கள் பிரபலமாகாது' என்கிறார்கள் கோயில் குருக்கள் இருவரும்.

அற்புதமான இந்த ஆலயத்தை இவர்கள் இருவர் மட்டுமே சொந்த முயற்சியால் கவனித்துவருகிறார்கள். இவர்களின் இறைப் பணி மேன்மேலும் சிறக்க, இறைவனை வேண்டி வணங்கி விடைபெற்றோம்.

நீங்களும் ஒருமுறை இந்த ஆலயத்துக்குச் சென்று வாருங்கள்; வேறெங்கும் காண்பதற்கு அரிய நவநீத வெண்மைநிற லிங்கத் திருமேனி யரை வணங்கி வாருங்கள். ஆலயத்தின் மேம்பாட்டுக்கு இயன்ற பங்களிப்பைச் செய்யுங்கள். சிவனருள் உங்களை வாழ்வாங்கு வாழவைக்கும்.

எப்படிச் செல்வது?: திருப்போரூர் - திருக்கழுக் குன்றம் சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவில், சிறுதாவூர் தாண்டியதும் ஆமூர் வரும். அங்கிருந்து இடதுபுறமாக ஊருக்குள் சென்றால் சிவாலயத்தை தரிசிக்கலாம் (தொடர்புக்கு: கவுதம் சிவாசார்யர் - 87541 10281).