திருப்பெருந்துறை கோயிலில், ஆனித் திருமஞ்சன நாளின் அதிகாலைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் 5-7-2022 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மிதுன லக்னத்தில், திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி, மாணிக்க வாசகப் பெருமானுக்கு உபதேசம் அருள இருக்கிறார்.

உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் மாலைப்பொழுது எனப்படுகிறது. தமிழ் மாதங்களில் நீளமானது ஆனி. இது 32 நாள்களைக் கொண்டது. ஆனி மாதத்தின் சிறப்புகளில் முக்கியமானது ஆனி அபிஷேகமும் (ஜூலை 5) ஆனி உத்திர தரிசனமும் (ஜூலை 6).
இந்த ஆனி அபிஷேக நாளில்தான் திருப்பெருந்துறை வள்ளலாம் ஈசன், திருவாசகம் ஈந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் குருவாக அமர்ந்து உபதேசம் செய்தார். ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசிக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதனால் இன்றும் திருப்பெருந்துறை கோயிலில், ஆனித் திருமஞ்சன நாளின் அதிகாலைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது. பிறகு வெள்ளித் தேரில் மாட வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். இந்த ஆண்டும் 5-7-2022 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மிதுன லக்னத்தில், திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி, தென்னவன் பிரம்மராயன் எனும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு உபதேசம் அருள இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது இங்கு பூஜை செய்யும் சிவநம்பியார் சிவ வேடமணிந்து, அவர் அருகே மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து உபதேச ஐதிக விழாவை நடத்துவர். இங்குள்ள திருவாசகக் கோயிலில் திருவாசக ஓலைச்சுவடி வணங்கப்படுவது விஷேசம்.
இதே மாதத்தில் தான் மக நட்சத்திரத்தில் (3-7-2022) மாணிக்கவாசகப் பெருமான் குரு பூஜையும் கொண்டாடப்படுகிறது. ஈசனே, தான் தனித்திருக்கும் ஊழிக் காலத்தில் விரும்பிப் படிக்க, திருவாசகத்தை தன் கையால் எழுதி கைச்சாத்து இட்டு அருளினார் (ஆனி ஆயில்யம்). அடுத்த நாள் தில்லை அம்பலத்தில் தன்னோடு மாணிக்க வாசகரையும் தன்னோடு இணைத்துக் கொண்டார்.
மாணிக்கவாசகரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது ஆனியிலும் ஆவணியிலும் தான். மாணிக்கவாசகரும் ஈசனும் வேறுவேறானவர்கள் என்று கருதுவதே சிவ அபராதம் என்கின்றன சைவ நூல்கள். வேறெந்த அடியாருக்கும் இல்லாத வகையில் திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகருக்கே திருவிழாக்கள், பூஜைகள் யாவும் நடைபெறுகின்றன. விடையேறும் விமலனாம் ஈசன், தன் ரிஷபத்தையே அளித்ததும் திருப்பெருந்துறையில் தான். இங்கு மாணிக்க வாசகரே எல்லா வாகனத்திலும் சென்று அருள்பாலிப்பார்.
இங்கு ஈசனுக்கு விழா எடுக்காமல், மாணிக்கவாசகருக்கே விழா எடுப்பதால் அது பக்த உற்சவம் என்று எண்ணிக் கொள்ளாமல், அது ஈசனுக்கான உற்சவம் என்றும், சிவமும் மாணிக்க வாசகரும் வேறு வேறு இல்லை என்று கருதியும் பிரம்மோற்சவமாகவே விழா கொண்டாடப்படுவதும் இங்கு மட்டுமே.
மீமிசல் கடற்கரைக்கு குதிரை வாங்கச் சென்ற பாண்டிய நாட்டின் பிரதான மந்திரி தென்னவன் பிரம்மராயன், பூர்வ ஜன்ம வாசனையால் கவரப்பட்டு திருப்பெருந்துறை குருந்த வனத்துக்குள் நுழைந்தார். அங்கே இளவயது யோகியின் திருப்பாதங்களை தரிசித்தவரே குதிரையில் நுழைந்தார் அமைச்சர். காலைக் காண்பித்து அவரை ஆட்கொண்ட குருபரன், அவருக்கு மௌனத்தால் பாடம் கற்பித்தார்.

'சிவம், ஞானம், போதம் என்றால் என்னவென்று அமைச்சருக்கு போதித்துத் திருவடி தீட்சையும் கொடுத்தார் குருபரன் வடிவத்தில் வந்த ஈசன். ஆம், அந்த சராசரங்களின் தலைவன், ஞானத்தின் அடையாளமாக ஒருவனை உருவாக்க அருபரத்து ஈசன் குருபரனாக வந்தார். அவரைக் கண்டதுமே கலங்கி, கண்ணீர் வடித்து 'நமசிவாய வாழ்க...' என திருவாசகம் பாடத் தொடங்கிவிட்டார் அமைச்சர்.
பட்டும் பீதாம்பரமும் அணிகளும் மணிகளும் சுமந்து சென்ற அமைச்சர், நீறும் ருத்திராட்சமும் அணிந்து கோவணம் பூண்டு, குருவின் முன் வாய்பொத்தி இருந்து சகல ஞானங்களும் பெற்றார். அப்போது மாணிக்க வாசகரின் வயது 22. குருவான ஈசனின் வயதோ 18. மாணிக்கவாசகருக்கு ஞானம் அளித்து கரை சேர்த்த தலம் என்பதாலும், பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் துறை என்பதாலும் இது பெருந்துறை எனப்பட்டது. இன்று ஆவுடையார் கோயில் எனப்படுகிறது.
மாணிக்கவாசகர் கொடுத்த பணத்தால் பூத கணங்கள் எழுப்பிய கோயில் திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோயில் எனப்படுகிறது. அதனாலேயே இங்கு எவராலும் உருவாக்க முடியாத பல அற்புத சிற்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்கிறார்கள். மேலும் இந்த கோயிலில் மட்டுமே கொடிமரம், பலிபீடம், நந்தி, சண்டேஸ்வரர், மூலவர், அம்பிகை, உற்சவர் என எதுவுமே இல்லை.

மேலும் இங்கு மட்டுமே மாணிக்கவாசக பெருமானை முதலில் வழிபட்ட பிறகு தான் மூலஸ்தானத்தில் அரூபமாக இருக்கும் ஆத்மநாதரை வழிபட வேண்டும். ஆத்மநாதரின் கருவறைக்கு பின்புற திருச்சுற்றில், ஆத்மநாதர் குருவாக யோகத்திலும், அவருக்கு எதிரே மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும் சிற்பம் உள்ளது. இங்குதான் உபதேசம் பெற்றார் எனப்படுகிறது. இங்குள்ள குருந்தமரம் ஈசனின் அம்சமாக விளங்குகிறது. அதனால் கார்த்திகை சோம வாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே சங்காபிஷேகம் நடைபெறும்.
ஈசனின் திருநடனத்தை தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பல முனிவர்கள் இந்த குருந்தவனத்தில் தவம் இயற்றினர். அவர்களின் விருப்படி தில்லையில் நடனத்தை அருளினார் என திருப்பெருந்துறை தலவரலாறு கூறும். அதனால் தில்லையில் ஐந்து சபைகள் என்றால் இங்கு ஆறு சபைகள். கனகசபை, நர்த்தனசபை, தேவசபை, சத்சபை, சித்சபை, ஆநந்தசபை என்பன.
ஆத்மநாதர் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ளது. இங்குதான் மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசம் நடைபெற்றது என்ற கூற்றும் உண்டு. வேறெங்கும் இல்லாத வகையில் ஆத்மநாதருக்கு ஆறு காலங்களிலும் புழுங்கலரிசி நிவேதனம் நடைபெறுகிறது. அரிசியை பொங்கி வடித்து, கருவறைக்கு எதிரே அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் கொட்டி, ஆவியோடு சுவாமிக்கு படைப்பர். இதோடு பாகற்காய், முளைக்கீரை நைவேத்தியம் இங்கு விசேஷம்.

இந்த நைவேத்தியம் ஆனி மகத்திலும் மார்கழித் திருவாதிரையிலும் நடைபெறும் 20 நாள்கள் உற்சவ காலங்களில் மாணிக்வாசகருக்கும் படைப்பது உண்டு.
ஆன்மாவுக்குத் தலைவனான ஆத்மநாதரையும் அவர்தம், திருச்சாயலான மாணிக்க வாசகப்பெருமானையும் இந்த ஆனி திருமஞ்சன, அபிஷேக நாளில் தரிசித்து நலமும் வளமும் பெறுவோம். மானிடராகப் பிறப்பெடுத்தவர் தன் வாழ்நாளில் காண வேண்டிய அற்புதக் கோயிலாம், ஆவுடையார் கோயிலையும் தரிசித்து இன்புறுவோம்!