Published:Updated:

`ஆனித் திருமஞ்சனம்!' -சக்தி விகடனின் நேரடி ஒளிபரப்பில் நடராஜர் தரிசனம்

ஆனித் திருமஞ்சனம்
ஆனித் திருமஞ்சனம்

கோமுத்தீஸ்வரர் கோயிலில் நாளை ஜூன் 28-ம் தேதி ஞாயிறன்று காலை 7.30 மணிக்கு நடைபெறும் ஸ்ரீ நடராஜர் திருமஞ்சன அபிஷேக ஆராதனை காட்சிகளை சக்தி விகடன் நேரடியாக ஒளிபரப்புகிறது.

திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் திருத்தலத்தில் நாளை நடைபெறவுள்ள ஆனித் திருமஞ்சன ஸ்ரீ நடராஜர் அபிஷேக ஆராதனை நிகழச்சிகளை வீட்டிலிருந்தபடியே தரிசிக்க சக்தி விகடன் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதை சக்தி விகடன் முகநூல் பக்கம் மூலம் கண்டு ஸ்ரீநடராஜரை தரிசித்து அருள்பெறலாம்.

திருவாவடுதுறை
திருவாவடுதுறை

பொதுவாக சிவாலயங்களுள், லிங்கம் (மூலவர்) தக்ஷிணாமூர்த்தி, நடராஜர், கல்யாணசுந்தரர், பைரவர் ஆகிய ஐந்து திருக்கோலங்களில் இறைவன் காட்சி அளிக்கின்றார். இவற்றுள் ஆடற்கலையின் நாயகனாக காட்சியளிக்கும் திருக்கோலமே `நடராஜர்' வடிவமாகும்.

உயிர்களைப் பற்றி இருக்கும் ஆணவ மலம் அழிந்து அவை திருவருளைப் பெறுவதற்காக ஞானாக்கினியின் நடுவே சிவபெருமான் நடனம் புரிகின்றார். புலித்தோல் இடையிலசைய, திருக்கரங்களில் உடுக்கை, அனல், மான், மழு, நாகம் அசைய ஒரு கரத்தால் அபயமளித்தவாறு, சடைமுடிகள் எட்டு திசைகளிலும் சுழன்றசைய, தூக்கிய திருவடி உடையவராய் நமக்கு ஆடல்காட்சி அருளிக்கொண்டு இருப்பவர்தான் நடராஜப் பெருமான்.

ஆனித் திருமஞ்சனம்
ஆனித் திருமஞ்சனம்

அபிஷேகப் பிரியரான ஆடல்வல்ல நாயகனுக்கு வருடத்தில் மொத்தம் 6 அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும். இவற்றுள் 3 அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய 3 அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு 6 கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு 6 அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.

பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' எனச் சிறப்பிக்கப்படுகின்றது.

`சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் எப்போது?' - விளக்கும் தீட்சிதர்

தக்ஷிணாயன காலத்தில் வரும் கடைசி மாதமான இந்த ஆனி மாதத்தில் அமையும் உத்திர நட்சத்திரத்தில் செய்யப்பெறும் இந்த அபிஷேகம், `மார்கழித் திருவாதிரை அபிஷேகம்' போன்றே மிக முக்கியமானதாக சைவர்களால் போற்றப்படுகின்றது.

கோயில் என்றாலே சிதம்பரம். ராஜா என்றாலே நடராஜர் என்பது ஆன்றோர் வாக்கு. ஆயினும் பஞ்ச சபைகள் எனப்பெறும் ஐந்து தலங்களில் பெருமானது காட்சி சிறப்பாகப் போற்றப் பெறுகின்றது. இத்தகைய நடராஜர் திருமஞ்சனக் காட்சியை இந்தப் பஞ்ச சபைகளில் கண்டு தரிசிப்பது விசேஷம். இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் நடைபெறும் நடராஜர் திருமஞ்சனக் காட்சியை தரிசித்து புண்ணிய பலன்களை அடையலாம்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீன மடத்திலுள்ள கோமுத்தீஸ்வரர் கோயிலில் நாளை ஜூன் 28-ம் தேதி ஞாயிறன்று காலை 7.30 மணிக்கு நடைபெறும் ஸ்ரீ நடராஜர் திருமஞ்சன அபிஷேக ஆராதனை காட்சிகளை சக்தி விகடன் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதை சக்தி விகடன் முகநூல் பக்கம் மூலம் பக்தர்கள் கண்டு தரிசித்து ஸ்ரீ நடராஜர் அருளைப் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு