Published:Updated:

பிரம்மனுக்கு அருளிய பிரம்மபுரீஸ்வரர்!

ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்

பிரம்மனுக்கு அருளிய பிரம்மபுரீஸ்வரர்!

ஆலயம் தேடுவோம்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்

திருச்சிக்கு அருகிலுள்ள பிரசித்திபெற்ற திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை நாமறிவோம். இதேபோல் பிரம்மனுக்கு அருள்புரிந்த பிரம்ம புரீஸ்வரரின் ஆலயம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாற்றின் கரையில் இருப்பதாக அறிந்து அங்கு நேரில் சென்றோம்.

பிரம்மபுரீஸ்வரர்  ஆலயம்
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்


திருவண்ணாமலை மாவட்டம்- சேத்பட் தாலுகாவில், ஆரணிக்கும் தேவிகா புரத்துக்கும் இடையில் உள்ளது ஓதல்வாடி எனும் கிராமம். இங்குதான் பிரம்மபுரீஸ்வரரின் ஆலயம் உள்ளது. பிரம்ம தேவருக்கும் முருகனுக்கும் சிவனார் அருள்பாலித்த தலம். ஆனால், ஆலயம் சிதிலமுற்றுத் திகழ்கிறது.

ஒருகாலத்தில் சேயாற்றங்கரையில் பிரமாண்ட கற்றளியாக இருந்த ஆலயம் இடிந்து போக, பின்னர் சிறிய கோயிலாக மாற்றிக் கட்டப்பட்டது. பிறகு அதுவும் களை யிழந்து பூஜையின்றி போனது. கற்றளி இருந்த கோயில் இடம் பள்ளிக் கூடமாக மாறி விட்டது. தற்போது குறுகிய இடத்தில் சிறிய கூடாரத்தின் கீழ் சுவாமி அமர்ந்திருக்கிறார். அம்பிகையின் திருநாமம் அபீதகுஜாம்பிகை. ஆனால் அன்னையின் திருமேனி சென்ற இடம் தெரியவில்லை!

ஓதல்வாடி ஆலயம்
ஓதல்வாடி ஆலயம்
பரிவார தெய்வங்கள்
பரிவார தெய்வங்கள்


பல்லவர்களும் பிற்காலச் சோழர்களும் கொண்டாடிய ஆலயம் இது என்கிறார்கள் ஊர் மக்கள். பரிவார தெய்வங்கள், பழங்கால சிலைகள் பலவும் உடைந்த நிலையில் கோயிலைச் சுற்றிக் காணப்படுகின்றன. மனம் வலிக்க ஊரைச் சுற்றி வந்த நமக்கு ஆறுதலாக இருந்தவர்கள் அந்த ஊர் அடியார்களே.

``எப்படியும் பழையபடி எங்கள் ஐயனை புதிய ஆலயத்தில் அமரவைத்து விடுவோம் ஐயா. கடந்த மூன்று ஆண்டுகளாக பூஜை களையும் பிரதோஷ வழிபாடுகளையும் எங்களால் இயன்றவரை செய்து வருகிறோம். நிச்சயம் சிவம் எங்களுக்கு வழி காட்டுவார். எங்கள் ஊர் கோயிலை கட்டி முடித்து விடுவோம், இங்கு இடம் கிடைக்காவிட்டாலும் வேறோர் இடத்தில் ஆலயத்துக்கென இடம் வாங்கி வைத்துள்ளோம். அங்கேனும் நிச்சயம் ஐயனுக்கான ஆலயத்தைக் கட்டு வோம்'' என்று நம்பிக்கையோடு பேசினார்கள்.

இந்த நம்பிக்கைதான் நமது தர்மத்தின் அடிப்படை. நமக்கும் அந்தச் சிவனாருக் கான ஆலயம் நிச்சயம் எழும் என்றே தோன்றியது. பிரணவ உபதேசத்தின்போது ஈசனை சிஷ்யனாக பாவித்தார் அல்லவா முருகப்பெருமான்?! அதற்குப் பிராயச்சித்த மாக இங்கு வந்து சிவபூஜை செய்து அருள் பெற்றார் என்று கூறப்படுகிறது.

ஈசனே முருகப்பெருமானுக்கு இங்கு காட்சி தந்து ``நீ செய்ததில் எந்தத் தவறும் இல்லை. எங்கு ஞானம் இருக்கிறதோ, அதுவே உயர்ந்தது. ஞானம் கொண் டவருக்கு வயது பொருட்டு இல்லை என்பதை உணர்த்தவே அந்தத் திருவிளையாடல் நிகழ்வுற்றது!'' என்று ஆறுதல் தெரிவித்தாராம் அந்த பரம்பொருள்.

அதேபோல் ஆணவத்துடன் பொய் கூறிய பிரம்மன், தொண்டை நாடெங்கும் பல ஆலயங் களில் வழிபாடு செய்துவந்தபோது, இங்கும் வந்து ஈசனை வழிபட்டு அருள் பெற்றார் என்று கூறுகிறார்கள். அதனால்தான் இந்த ஊருக்கு `பிரம்மபுரி' என்றும் ஈசனுக்கு `பிரம்மபுரீஸ்வரர்' என்றும் திருநாமம் வந்ததாம். பிரம்மன் சிவாய மந்திரம் ஓதியும் பாடியும் தங்கிய தலம் என்பதால் `ஓதல் பாடி' என்று பெயர் ஏற்பட்டது. அதுவே தற்போது `ஓதல்வாடி' என்று மாறிவிட்டது என் கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

உறவுகளில் உயர்ந்ததான குரு-சிஷ்ய உறவின் பெருமையைக் கூற இங்கே ஈசன் தோன்றியதால், தகுந்த குருவைத் தேடும் அன்பர்கள் இங்கு வந்து வழிபடுவது விசேஷம். அதன் பலனாக குருவே நம்மைத் தேடி வருவார் என்கிறார்கள். மேலும் ஞானமும் மோட்சமும் அருளும் தேவனாகவும் இங்கே பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்!

சிதிலமான இந்த ஆலயத்தைப் புனரமைக்க சித்திரை மாதம் கட்டடப்பணிகள் தொடங்க உள்ளார்கள்.

`கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமானே!'

என்று பெரியோர்கள் சிறப்பித்துள்ளதற்கு ஏற்ப, நாமும் அந்த ஈசனை வழிபட்டோம். `அடியார்களின் நெஞ்சில் எப்போதும் நிலைத்திருக்கும் பரம் பொருளே, நீயே இங்கு வெகு அழகாக நேர்த்தியாக ஆலயம் எழும்ப அருள்செய்ய வேண்டும்' எனப் பிரார்த்தித்து விடைபெற்றோம். இறையருள் கைகூடட்டும்; நாமும் இந்த ஆலயத்தின் திருப் பணிக்கு இயன்ற பங்களிப்பை வழங்கி, பரமனின் அருளைப் பெறுவோம்.

A/c.Name: RAJASEKAR . K

A/c.No: 1108155000155433

Bank Name: KARUR VYSYA BANK

Branch: ARNI

IFSC No: KVBL0001108

தொடர்புக்கு: ராஜசேகர் - 81240 89062

பரமனுக்குப் பிடித்த பூக்கள்!

பரமனுக்குப் பக்தியோடு பூக்களைச் சமர்ப்பித்து வழிபடுவது விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும் என்கின்றன ஞான நூல்கள். அந்த வகையில் சிவ ராத்திரி, பிரதோஷம், சோமவாரம் போன்ற விசேஷ தினங்களில் சிவபெருமானுக்கு வில்வம் அர்ப்பணித்து, வில்வாஷ்டகம் படித்து வழிபடுவதால், விசேஷ பலன்கள் கைகூடும்; நாம் நினைத்தது நிறைவேறும்.

`சிவபிரானுக்கு மிகவும் பிரியமானவை எருக்கம்பூ, தும்பைப்பூ, ஊமத்தம்பூ. இவை மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய புஷ்பங்கள். தம்மை வழிபடும் பக்தர்களுக்குச் சிரமமின்றி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே ஈஸ்வரன் இந்தப் பூக்களின் மீது பிரியம் வைத்து அவற்றைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்!' என்பது காஞ்சி முனிவரின் வாக்கு. நாமும் பூஜையில் இந்த எளிய பூக்களில் ஒன்றையேனும் இறைவர்க்குச் சமர்ப்பித்து வழிபடுவோம்.

- சி.ராமு, திண்டிவனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism