Published:Updated:

ஆறு மனமே ஆறு - 41

ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு - 41

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று விவாதித்தோம். பின்னர் பக்தி என்றால் என்னவென்றும் பார்த்தோம். இதெல்லாம் சரி... பக்தனையும் பகவானையும் இணைக்கும் இன்னொரு பாலமும் உண்டு. சிலர் அதனை `மதம்' என்பர், வேறு சிலரோ `தர்மம்' என்பர்.

எது எப்படி இருந்தாலும், அவரவர்க்கு எனத் திருமறைகள் உண்டு. திருமறைகளை விளக்கி ஆன்மிகத்தின் வாயிலாக நம்மை இறைவனுடன் இணைக்கும் பாலங்களே மதமும் ஆசார்யர்களும். சர்வ வல்லமை பொருந்தியவன் இறைவன் என அனுபவபூர்வ மாக அறிந்துகொள்ளும் ஒரு வழிகாட்டலே மதம் எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி


நம்மைப் பொறுத்தமட்டில், இவ்வுலகில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதனை நமக்குப் படிப்பிக்கும் வாழ்வியல் தர்மமான சனாதன தர்மத்தைப் பின்பற்றி வாழ்கிறோம். இந்த தர்மத்தின் சிந்தனைகளைத்தான் பெரும்பாலானோர் ‘இந்து மதம்’ என்கிறார்கள்.

பெயரா முக்கியம்... தர்ம சிந்தனைகள் போதாதா...

வாழவே முடியாதா?

மதங்கள் தேவைதானா? மதங்கள் இல்லை என்றால் மனிதன் மனிதனாக வாழ முடியாதா? திசைக்கு ஒரு மதம், இனத்துக்கு ஒரு மதம், நாட்டுக்கு ஒரு மதம் என்றெல்லாம் உலகம் முழுவதும் ஏறத்தாழ 4,500 மதங்கள் பரவிக் கிடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன, இவை தேவைதானா?

இப்படிப் பலரும் கேள்விகள் கேட்கின்றனர்.

மதமும் நம்பிக்கையும் இல்லாவிட்டால், பிரேதத்துக்குப் பட்டுப் பீதாம்பரம், நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்டது போல வாழ்க்கை ஒரு சூனியமாகவே ஆகிவிடும். சிறிதளவாவது ஆன்மிகத்தையும் மதத்தையும் ஏற்றுக்கொண்டிருப்பதால் மட்டுமே நம் வாழ்வில் இனிமையும், இசைவும், உயிரும் நிறைந்துள்ளன என்று சொல்லலாம் மக்களே!

நீயா நானா?

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.ஒரு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் வெவ்வேறு பகுதியில் இருந்தனர். அவர்கள் இருவரும் நீண்ட நாள்களாக நோய்வயப்பட்டு அங்கு சிகிச்சை எடுத்து வந்தனர். ஒரு நாள், அவ்விருவரின் உறவினர்களும் மருந்து வாங்கச் சென்றனர்.

இருவரும் குறுகலான தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். அதில் ஓருவர் ஒருவராக மட்டுமே செல்ல முடியும். இருவருக்கும் ‘நீ முந்தி செல்வதா, நான் முந்தி செல்வதா’ என்ற தகராறு ஏற்பட்டது. இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துச் சென்றிருந்தால், சில நொடிகளில் இருவரும் தங்கள் இலக்கை அடைந்திருக்கலாம். சண்டையிட்டு நேரத்தை வீணடித்தனர். நோயாளிகளில் ஒருவருக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது!

அது போல, ‘என்னுடைய மதம்தான் சிறந்தது’ என்கிறார் ஒருவர். இன்னொருவரோ, ‘இல்லை இல்லை என் மதம்தான் மிகச் சிறந்தது’ என்கிறார். இது ஒரு குறுகிய மனக் கண்ணோட்டம் ஆகும்.

இப்படிச் சண்டை போட்டுக் கொள்வதால் நம் செவிகளுக்கு நல்லது ஏதும் எட்டுவதில்லை. நல்லது செவிகளுக்கு எட்டினாலே செயல்படத் தயங்கும் மக்களுக்கு, இப்படிப்பட்ட சூழல் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என் செல்லங்களே..!

மதத்தின் இன்றைய நிலை, பெரும்பாலும் இயல்பற்ற முரட்டுத்தனமான ‘நீயா நானா’ போட்டியாக மாறிவிட்டது. மக்கள் அன்பு, சகிப்புத்தன்மை அனைத்தையும் இழந்து, மகிழ்ச்சியின்றி விவேகமற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். அனைவரும் நல்வழிக்கு மாறவேண்டும் மக்களே.

மதத்துக்கும் மதம் பிடிக்குமா?

கட்டாயமாக மதத்துக்கும் மதம் பிடிக்கும். உதாரணமாக ஒரு யானை இருக்கிறது. அது பாகனின் பிடியில் அவன் சொற்படி நடக்கும். யானையின் மனநிலை அந்த பாகனின் செயலில்தான் இருக்கிறது மக்களே. ‘வளர்த்த கடா மார்பில் பாயும்’ என்பது போல, பாகனின் செயல்களினால் கோபம் கொள்ளும் சூழலில், அந்த யானைக்கு மனநிலை மாறி மதம் பிடித்து, செல்லும் பாதையில் இருக்கும் அனைத்தையும் துவம்சம் செய்துவிடும். சிலவேளைகளில் பாகனும் பலியாக நேரிடும்.

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி


மதத் தலைவர்கள், மற்றவரைப் புண்படுத்தாமல் வாழ்ந்திட மக்களுக்குக் கற்றுக்கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும். இல்லையேல் மதமும் மதம் பிடித்து, அழிவுப் பாதையில் செல்ல நேரிடும் என் செல்லங்களே.

எளிமையாகச் சொன்னால், மதக் கோட்பாடுகள் என்ற பெயரில் மற்றவர்களை இழிவுபடுத்திச் செயல்படும் ஒரு சிலராலோ அல்லது மதத்தின் பெயரில் மதத் தலைவர்கள் எல்லை மீறுவதாலோதான் மனிதம் மறந்து மனிதனுக்கும், மதத்திற்கும் மதம் பிடிக் கிறது... புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

- மலரும்...

"எனது குரல் கேட்கவில்லையா!"

பாலக்காட்டிலில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் இராமகிருஷ்ணன். கல்லூரி நாட்களில் ஏற்பட்ட கூடா சேர்க்கையின் காரணமாகக் கெட்ட பழக்கங்களுக்கு ஆட்பட்டு முரடனாக வளர்ந்தார்.

1978-ல் ஹரிப்பாடி கிராமத்தில் அரசு வங்கி ஒன்றில் பணியாற்றியபோது, நண்பர் ஒருவருடன் வந்து அம்மாவை தரிசித்தார். பின்னர், தேவி பாவ தரிசனத்திற்கு தவறாமல் வந்தார். மதுரை மீனாட்சி அன்னையே இராமகிருஷ்ணனின் இஷ்ட தெய்வம். தேவியின் பிரத்யக்ஷமான தரிசனம் கிடைக்கவில்லை என பல நாள்கள் உண்ணாவிரதம் இருப்பார்.

ஒரு முறை “என் குரல் உங்களுக்குக் கேட்க வில்லையா... எப்போது எனக்குள் வந்து அமரப் போகிறீர்கள்? தங்களின் பாதச் சிலம்பின் சத்தமாவது என் காதுகளில் ஒலிக்கச் செய்யுங்கள்” என அம்மாவிடம் கதறினார். மனமிறங்கிய அம்மாவும் இராமகிருஷ்ணனுக்கு அவரின் இஷ்ட தெய்வத்தின் வடிவில் பல காட்சிகளை அருளினார்.

ஒரு நாள், அனல் அதிகமாக இருந்ததால் சாமரம் வீசும்படி இராமகிருஷ்ணனிடம் சொன்னார். ஆனால், வங்கிப் பணி செய்யும் அந்த நாகரீக இளைஞர், அங்கிருக்கும் பெண்கள் கூட்டம் தன்னை ஏளனமாகப் பார்க்குமே எனக் கருதி அம்மா சொன்னதைச் செய்யவில்லை.

தரிசனம் முடிந்து வெளியே செல்லும்போது நிலைப்படியில் மண்டை இடித்துக்கொண்டார். அங்கிருந்த பெண்கள் அனைவரும் பரிகசித்தனர். அம்மா “நீ சாமரம் வீசவில்லை. எனினும் பெண்கள் உன்னைப் பார்த்து சிரித்தார்களா...” என்றார் வேடிக்கையாக. யார் சிரித்தால் என்ன? `நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கூடாது' எனும் உண்மை உறைத்தது இராமகிருஷ்ணனுக்கு. அது முதல் அனுபவம் அவருக்கு.

ஒரு முறை அம்மாவின் உத்தரவு பெறாமல் இடமாற்றலுக்கு விண்ணப்பித்துவிட்டார். சில தினங்களில் எண்ணத்தையும், விண்ணப்பதையும் மாற்றிக்கொண்டார் இராமகிருஷ்ணன். அம்மாவுக்குத் தெரியாமல் போகுமா என்ன!

ஒரு நாள் “நீ அனுப்பிய `மாற்றல் வேண்டாம்' எனும் விண்ணப்பக் கடிதம் சென்றுவிட்டதா என உறுதிப்படுத்திக்கொள்'' என்றார். இராமகிருஷ்ணனோ “ எல்லாம் போய்ச் சேரும், தேவையான அனுமதியும் கிடைக்கும்” என்றார் அசட்டையாக.

ஆனால் அவர் அனுப்பிய இரண்டாவது மனு கிடைக்காததால், முதல் விண்ணப்பத்தின்படி இட மாற்றம் உத்தரவாகியது. பின்னர் மிகவும் போராடி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. குருவின் வார்த்தைகளைத் மீறக்கூடாது எனும் செய்தியை இரண்டாவது அனுபவமாகப் பெற்றார்.

அம்மாவின் மந்திர தீக்ஷை கிடைத்தபோது ஏதோவோர் இனம் தெரியாத சக்தி உள்ளே ஊடுருவியது போன்ற உணர்வு வாய்த்தது இராமகிருஷ்ணனுக்கு. 1982 முதல் ஆசிரமத்திலேயே தங்கினார். 1984-ம் ஆண்டு வங்கிப் பணியிலிருந்து நிரந்தரமாக விலகினார். உலக வாழ்வைத் துறந்து அம்மாவின் காலடிப் பாதையில் தொடங்கிய அவரின் பயணம், ராமகிருஷ்ணானந்தபுரி என்ற சந்நியாச நாமத்துடன் இன்றளவும் தொடர்கிறது.