திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ஆறு மனமே ஆறு - 31 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறு மனமே ஆறு

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

லகுக்காக பிரார்த்திப்போம்!
சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது
சர்வேஷாம் சாந்திர் பவது
சர்வேஷாம் பூர்ணம் பவது
சர்வேஷாம் மங்கலம் பவது
ஓம் சாந்தி சாந்தி:


இந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா? எங்கும் எதிலும் நன்மை உண்டாகட்டும். எதிலும் திருப்தியும் மன நிறைவும் உண்டாகட்டும். எல்லாவற்றிலும் முழுமையும் நிறைவும் கிட்டட்டும். அன்பும் அமைதியும் பிரபஞ்சம் முழுவதும் நிலவட்டும் என்கிறது.

இதுதான் சனாதன தர்மம். அதுவே மனித குலத்துக்கான அடிப்படை தத்துவம். என்ன, நான் சொல்வது சரிதானே! ஒரு நிலையான தத்துவத்தை இதைவிட எளிமையாக எப்படிச் சொல்ல முடியும்?

சனாதன தர்மத்தின் அடிப்படையே... வாழும் அனைத்து ஜீவன்கள், பூமி, ஆகாயம், காற்று, நீர், மற்றும் இயற்கையின் பூரணத்துவம் இவை அனைத்திலும் உடனுறையாக பரந்துவிரிந்து கிடக்கும் உண்மை நிலையை அறிந்துணர்ந்து வழிபட்டு வாழும் நோக்கைக் கொண்டதாகும்.

இதைத்தான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும், இன்னின்ன மதக் கோட்பாடுகள்படிதான் நடக்கவேண்டும், குறிப்பிட்ட கொள்கைகளையே கடைப்பிடிக்கவேண்டும் என்றெல்லாம் சனாதன தர்மம் எப்போதும் சொன்னதும் இல்லை; கட்டாயப்படுத்துவதும் இல்லை மக்களே!

அவரவர் குல வழக்கப்படி முன்னோர் காட்டிய வழியை, எப்போதும் தவறாமல் கடைப்பிடிக்கும் அறவழியே சனாதன தர்மம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு வயிற்று வலி என்று வைத்துக்கொள்வோம். அதற்கு அஜீரணம் காரணமாகலாம்; வயிற்றுப் புண் காரணமாகலாம் அல்லது தீவிரமான வேறு பாதிப்புகள்கூட காரணமாகலாம். உரிய மருத்துவரை அணுகி, அந்த நோயின் நிலைக்கேற்ப அவர் அளிக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டால்தான் குணமடைய முடியும்.

காரணம் காரியம் தெரியாமல் எதையும் செய்யமுடியாது. அப்படித்தான் அவரவர் குல வழக்கப்படி சம்ஸ்காரங்களை மேற்கொள்ளவேண்டும். அத்தகைய குல வழக்கமே அவர்களை வழிநடத்திச் செல்லும். பல்வேறு ஆன்மிக பழக்கவழக்கங்கள் நடைமுறைக்கு வந்தது இப்படித்தான்.

சனதான தர்மம் என்பது குறிப்பிட்ட ஒரு தனி மனித வரையறைக்குள் அடங்கிய ஒன்றல்ல. அதாவது, எந்தவொரு சாதி மத பேதத்துக்குள்ளும் அடங்காமல், குலவழக்கம் என்ற கட்டமைப்பில் அமைந்துள்ளது.உலகத்துக்கும் இது தெரியும். அதுவே, மனித குலத்துக்கான துணையாகவும் உத்வேகமாகவும் அமைந்துள்ளது. சனாதனத்தைப் பின்பற்றும் அனைவரும் உலகத்தின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட வேண்டும். அப்படிச் செய்தால்தான் ரிஷிகளின் சங்கல்பம் நிறைவேறும்.

அமிர்தானந்த மயி
அமிர்தானந்த மயி


ஆதாவது ரிஷிகளும் தபஸ்விகளும் துறவிகளும் தனிப்பட்ட ஒரு மதத்தை, சாம்ராஜ்ஜியத்தை, கொள்கைகளை, நடைமுறைகளை, உருவாக்கவில்லை. அவர்களுடைய வழிபாடும் பிரார்த்தனையும் ஒட்டுமொத்த உலகின் மனிதர்களின் நன்மைக்காகவும் அவர்களுடைய ஆன்மிகப் பாதைக்கானவையாகவுமே இருந்தன.

அதுவொரு கிராமம். மனைவியை இழந்த ஒருவன் தன் வீட்டுக்கு சந்நியாசி ஒருவரை வரவேற்று அழைத்து வந்தான். வீட்டுக்கு வந்த சந்நியாசி, “அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். துக்கம் என்பது யாருக்கும் கூடாது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சுபம் வியாபித்து இருக்கட்டும். அனைவரும் நிறைநிலை வாழ்க்கையை அனுபவிக்கட்டும்” என்று பிரார்த்தனை செய்தார்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த வீட்டுக்காரனுக்கு மன வருத்தம். “சுவாமி! என் மனைவியின் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டு வீர்கள் என்று நினைத்தேன். ஆனால், நீங்கள் அவளுடைய பெயரை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லையே’’ என்றான் ஆதங்கத்துடன்.

அதற்கு அந்தத் துறவி “மன்னிக்கவேண்டும் மகனே! என் தர்மமும் குரு தீக்ஷையும் அனைவருக்குமாக பிரார்த்தனை செய்வதையே வலியுறுத்துகின்றன. உண்மையைச் சொல்லப்போனால், அனைத்து ஜீவராசிகளுக்காகவும் பிரார்த்தனை செய்தால்தான், அது ஒவ்வொரு மனிதனையும் - உயிரையும் சென்றடையும்’’ என்றார்.

மேலும், “ஒரு செடிக்கோ, மரத்திற்கோ தண்ணீர் ஊற்றவேண்டும் எனில், தண்ணீரை வேரில் ஊற்றுவோம். வேரில் ஊற்றும் நீர் அந்த மரத்துக்கு முழுமையாகப் போய் சேர்ந்துவிடும். மரத்தின் கிளை, இலை அனைத்தும் செழிப்புடன் இருக்கும். அப்படித்தான் என்னுடைய இந்தப் பிரார்த்தனையும் உன் மனைவியின் ஆத்மாவுக்கும் சேர்த்துதான். ஆகையால் தனியே பெயரைக் குறிப்பிடவேண்டும் என்று அவசியம் இல்லை” என்றார். இதுதான் சனாதன தர்மத்தின் நிலைப்பாடு!

ஆனால், அந்த மனிதன் அரை மனதுடனேயே அவர் சொன்னதை ஒப்புக்கொண்டான். அத்துடன், “சரி சாமி! என் மனைவியின் பெயரை சேர்க்கவிடினும் பரவாயில்லை; அடுத்த வீட்டுக்காரரின் பெயரைச் சேர்த்துவிடாதீர்கள்’’ என்றான். நம்மில் சிலர் இப்படித்தான்!

ஆனால், இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று சொல்வதுதான் சனாதர்மம் ஆகும் என் செல்லங்களே!

மனிதக் குலத்தின் துக்கங்களை அகற்றிட, கால, தேச வேறுபாடின்றி நாம் அனைவரும் சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்தை அமைதியும் மகிழ்ச்சியும் ததும்பும் வசிப்பிடமாக மாற்றவேண்டும் என்பதே ரிஷிகளின் சங்கல்பம்.

அந்த வகையில் நம் சனாதன தர்மம், மெய்மை தத்துவத்தைச் சொல்வது. இந்தத் தத்துவத்தையும், வாழ்வுக்குத் தேவையான கொள்கை களையும், நம் ரிஷிகளும் முனிவர்களும் அனுபவித்து அளித்த வழிகாட் டல்கள் அனைத்தையும், நாம் நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுச் சங்கல்பம் செய்வோம்.

மனிதனுக்கு, சனாதன தர்மம் என்பது குலம் மற்றும் உள்ளுணர்வு சார்ந்த அனுபவம் ஆகும். அனைவருமே இந்த உண்மையின் உருவகம் ஆவர். தர்மம் சொல்வதை நாம் பின்பற்றுவது உசிதமாகும் மக்களே!

- மலரும்...

******

தேவியின் தரிசனம்!

சுதாமணிக்கு நாளுக்கு நாள் கிருஷ்ண பக்தியின் தீவிரம் அதிகமானது. வீட்டில் உள்ளவர்கள், `சுதாமணிக்குப் பித்து பிடித்துவிட்டதோ’ என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தனர்.

சுதாமணி, கிருஷ்ண பக்தியில் அடங்காத தாகம் கொண்டிருந்தார். கிருஷ்ணனிடம் ஐக்கியமாகிவிட்டார் என்றே சொல்லலாம். அதேநேரம், பக்தியில் `கிருஷ்ண பாவம்’ மூலம் அத்வைத அனுபூதி நிலையை அடைந்துவிட்டதாகவும் உணர்ந்தார்.

ஒரு நாள் அறையில் தனிமையில் இருந்தார். கண்கள் திறந்த நிலையில் இருந்தன. அவரின் மனமோ உள்முகப்பட்ட ஆனந்தத்தில் திளைத் திருந்தது; ஆத்மானந்தத்தில் மூழ்கிக் காத்திருந்தது.

அந்த வேளையில் ஒரு ஒளி வட்டம் தோன்றியது. மஞ்சளும் குங்குமமும் கலந்த வண்ணத்தில் பெளர்ணமி நிலவு போல கண்களுக்குக் காட்சியளித்தது அந்த வட்டம். மெள்ள மெள்ள சுழன்றுகொண்டிருந்த அந்தப் பிரகாசமான ஒளி வட்டத்தைக் கண்ட சுதாமணியின் மனதில் பரமானந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஒளி வட்டத்துள் வைர-வைடூரியம் கோத்த அற்புத ஆபரணங்களை அணிந்தவளாக, ஒளி மின்னும் கிரீடத்தைத் தரித்தவளாக, பிரபஞ்சத்தையே மயக்கவைக்கும் புன்னகையுடன் தோன்றினாள் அம்பிகை. ஜகதாம்பிகையைக் கண்டதும் சுதாமணியின் மனதில் ஒரு துள்ளல்... ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்படியே... அக்கணமே... அம்பிகையுடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற துடிப்பு எழுந்தது.

ஆனால் நிகழ்வது கனவா, நனவா... அம்பிகையைச் சென்றடைய முடியுமா, யாரை உதவிக்கு அழைப்பது... மருகினார் அம்மா!