Published:Updated:

ஆறு மனமே ஆறு - 43

ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு - 43

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

இறைவனைப் பேதங்கள் இல்லாதவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன், குற்றம்குறை காணாதவன், தவறுகளை மன்னித்து ஆசீர்வாதிக்கும் கருணாமூர்த்தி, அடியவர் உள்ளத்தில் குடியிருப்பவன் என்றெல்லாம் மகான்கள் பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். `நீயே அவனென்றாகிறாய்' என்றும் சொல்வது உண்டு. இது என்ன தத்துவம்? ஒரு கதையைக் கேளுங்கள்...

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி


அது ஒரு சிறிய கிராமம். அங்கு ஆன்மிக குரு ஒருவரின் சிலை அமைந்திருந்தது. இரண்டு கைகளையும் விரித்த நிலையில் வைத்து நின்றிருந்தது அந்தச் சிலை. கழுத்திலிருந்த பதக்கத்தில் `என் அரவணைப்புக்குள் வாருங் கள்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

காலப்போக்கில் இயற்கையால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக சிலையின் கரங்கள் இரண்டும் உடைந்து விழுந்துவிட்டன. கைகள் இல்லாமல் இருந்த சிலை குறித்து ஊர் மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அதன் பொருட்டு முடிவெடுக்க அனைவரும் ஒன்றுகூடினர். `பழைய சிலைக்குப் பதிலாக புதிய சிலையை வைக்கலாம்' என்று பலரும் கருத்து கூறினர். வேறு சிலரோ `கைகளை மட்டும் புதிதாக வடிவமைத்துப் பொருத்தலாம்' என்றனர்.

அங்கிருந்த முதியவர் ஒருவர் எழுந்து தனது கருத்தைச் சொன்னார். ``சிலையையோ அல்லது கரங்களையோ மாற்ற வேண்டியதே இல்லை. சிலையின் பீடத்தில் `என் கரங்கள் உங்கள் மூலமாக இயங்குகின்றன' என்ற வாக்கியத்தை மட்டும் பதித்துவிடுங்கள்'' என்றார்.

ஏனெனில் ஆத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறல்ல என்கிறது அத்வைதம். இதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்கிறேன். நாமே கடவுளின் கண்களாக, கரங்களாக, காதுகளாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

நமது ஊக்கம், ஆற்றல், துணிவு அனைத்துமே கடவுளிடமிருந்துதான் வருகின்றன. அதனால் அச்சமோ, சந்தேகமோ அல்லது பாவமோ நம்மை அண்டாது என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள். சூரியனுக்கு மெழுகுவர்த்தியின் ஒளி தேவையா? அப்படித்தான் நம்மிடமிருந்து கடவுளுக்கு எதுவும் தேவையில்லை.

நம் உடல் அழியக்கூடியது. வாழும் காலத்தில், அது துருபிடித்து போவதைவிட மற்றவருக்கு சேவை செய்வது எவ்வளவோ மேல்! இல்லையேல் புழு பூச்சிகளுக்கும் நமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் போய் விடும். மற்றவர்க்கு செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை எனும் நல்ல சிந்தனையுடன் வாழுங்கள் மக்களே!

பூஜை - புனஸ்காரம், தியானம்!

கடவுளை எப்படியெல்லாம் வழிபட முடியும் என்று சிலர் கேட்கின்றனர்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? கடவுளை மாடிப்படிக்கு அடியில் ஒதுக்கி வைக்கவோ அல்லது அழகுப் பொருளாகக் காட்சியில் வைக்கவோ வேண்டாம். வீட்டில் பூஜை, தபம், தியானம் போன்றவற்றுக்குச் சிறிய இடமாவது ஒதுக்கிடல் வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் கடவுள் வழிபாட்டிற்கு ஒதுக்கவேண்டும்.

காலைக் கடன்களை முடித்து, குடும்பம் முழுவதும் பூஜையறையில் ஒன்றுசேர வேண்டும். தெரிந்தவரையிலும் பூஜை-புனஸ்காரங்களை மேற்கொள்ள வேண்டும்,

பூக்களைக் கொண்டோ அல்லது மானசீக மாகவோ ஆண்டவனின் திவ்ய நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். குடும்பமாக இணைந்து செய்ய முடியவில்லை எனில், குடும்பத்தில் ஒருவராவது தங்கள் வீட்டு நலனைக் கருத்தில் கொண்டு, இப்படியான வழிபாட்டைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். மட்டுமன்றி கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் உத்தமம்.

தியானம் ஏன்?

கூவும் புறாவின் வாழ் நாள் மிகக் குறைவு. அதேநேரம் ஆமையை எடுத்துக்கொள்வோம். அது கூவாது; குறைக்காது ஆனால் நீண்ட காலம் வாழ்கிறது.

மெளனம் என்றுமே கடவுள் வழிபாட்டுக்கு இடையூறாக இருந்ததில்லை. அது கெட்ட வற்றை உங்களிடமிருந்து அகற்றி, அன்புடனும் நிம்மதியுடனும் வாழவைக்கும் மாமருந்தாகும். நானும் அதையே உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன். மெளனத்தை நேசியுங்கள். தியானம் கடைப்பிடியுங்கள்.

நீங்கள் அனைவரும் தினமும் முடிந்தளவு தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானம் மனிதனின் உயிர்த்துடிப்பை தக்கவைத்து, அறிவாற்றலை வலுப்படுத்தி, அழகை மெருகூட்டி, தெளிவான மனம், ஆரோக்கிய வாழ்க்கை போன்ற அனைத்தையும் அளிக்க வல்லது. அது மட்டுமா? சகிப்புத்தன்மையும் சவால்களை எதிர்கொண்டு துணிவுடன் செயல்படும் வலிமையையும் கொடுக்கும்.

ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்கள் எனத் தொடங்கி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகப்படுத்தி தியானம் பழகுங்கள். அப்போது நீங்கள் மன மகிழ்ச்சியுடன் வாழலாம்.

யக்ஞங்கள் தேவையா?

என்னிடம் ஒருவர் கேட்டார்... ``அந்தக் காலத்தில் இருந்ததுபோன்ற யக்ஞங்களை தற்காலத்திலும் நடைமுறைப்படுத்த முடியுமா; தற்போது அவை தேவையா?'' என்று.

செங்கல்களை அடுக்கி மணலைப் பரப்பி குண்டம் அமைத்துச் செய்யப்படுபவை மட்டுமே யக்ஞங்கள் அல்ல.

இயற்கையிடம் பெறப்பட்டதில் ஒரு பங்கை யாவது இயற்கைக்குக் கொடுக்க நாம் கடமைப் பட்டவர்கள் ஆவோம் மக்களே. யக்ஞம் அதற்கு உதவும். யக்ஞம், பஞ்ச யக்ஞம் குறித்தெல்லாம் நாம் விவரமாக அறியவேண்டும்.

- மலரும்...

`தெய்வ வாக்கு அவசியமா?'


ரமேஷ் ராவ். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் இதுதான். பணத்திற்குப் பஞ்சம் இல்லை. இளமையில் சுக போகங்களில் மூழ்கி வாழ்வதையே லட்சியமாகக் கொண்டிருந்தார். பணம், வாய்ப்பு இருந்ததால் வெளி நாட்டுப் பயணத்தில் விருப்பம். ஆனால், பயண ஏற்பாடுகளில் சிக்கல் மேல் சிக்கல்.

நண்பன் ஒருவன் “தடைகள் நீங்கி வெளிநாடு போக முடியுமா, அதற்கான வாய்ப்பு இருக்கிறதா... இவற்றுக்குப் பதில் வேண்டும் எனில் அம்மாவை தரிசிக்க வள்ளிக்காவு வா!” என்று அழைத் தான். ரமேஷ் ராவ் எதிர்காலத்தை அறியும் ஆவலுடன் ஒப்புக்கொண்டார். நண்பனுடன் வள்ளிக்காவு பயணித்தார்.

பெரிய ஆசிரமமாக இருக்கும் என்ற கற்பனையோடு வந்தவரை, தேங்காய் மட்டைக் குவியல்களும் கொட்டிக் கிடக்கும் மீன்களின் துர்நாற்றமுமே வரவேற்றன எனலாம். ரமேஷ்ராவுக்கு ஏமாற்றம். விரைவில் அங்கிருந்து புறப்பட்டுவிட துடித்தார்.

தரிசன நேரம் வந்தது. ரமேஷ்ராவ் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் பார்க்க முடிந்தது. நடப்பதெல்லாம் கண்கட்டு வித்தையோ என எண்ணினார். அத்துடன், `முதியவர், இளைஞர், யுவ யுவதிகள் அனைவரையும் அரவணைப்பதில் மனம் தடுமாறாதா” என்றும் சந்தேகம் எழுந்தது.

தனது முறை வந்ததும் அம்மாவின் முன் சென்று அமர்ந்தார். ``என் செல்லமே... உனக்கு வெளி நாடு செல்ல விருப்பம்... அப்படித்தானே? ஆனால், உனக்கு அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை” என்றார் அம்மா!

ரமேஷுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தான் எதுவும் சொல்லாமல் தனது விருப்பம் எப்படி இவருக்குத் தெரிந்தது... இதுவும் கண்கட்டி வித்தையா... என எண்ணிக் குழம்பினார்.

தொடர்ந்து தேவி பாவ தரிசனம்! அப்போது தத்தன் எனும் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வந்தார். அவரை பார்க்கவே ரமேஷுக்கு அருவருப்பாக இருந்தது. அங்கிருந்து வெளியேற விரும்பினார். ஆனால் முடியவில்லை. சூழல் இடம்கொடுக்க வில்லை.

தத்தன் தரிசிக்கும் நேரம் வந்தது. அம்மா எவ்வித முகச் சுழிப்பும் இல்லாமல், ஒரு தாயின் பரிபூரண உள்ளன்போடு தத்தனின் சீழ் வடியும் புண்களைச் சுத்தம் செய்தார். அன்புடன் அவரை ஆசீர்வதித்தார்.

ரமேஷ் ராவ் வியந்துபோனார். அவர் தனக்குள் கொண்டிருந்த கர்வமும் அகங்காரமும் தற்பெருமையும் அக்கணத்திலேயே தகர்ந்தன. அதற்குமேலும் அம்மாவின் சாந்நித்தியத்தை உணர வேறு ஏதேனும் தெய்வ வாக்கு தேவையா என்ன? அக்கணமே சரணடைந்தார்.

பின்னர், ஸ்வாமி அம்ருதாத்மானந்த புரி எனும் சந்நியாஸ தீக்ஷை பெற்றவர், இன்றும் தொண்டாற்றி வருகிறார்!