திருத்தலங்கள்
Published:Updated:

ஆறு மனமே ஆறு!

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

இலக்கே இல்லாத ஒருவன் முச்சந்தியில் நின்றுகொண்டு, அங்கு வந்த வழிப்போக்கனிடம் `இந்த வழி எதுவரை செல்கிறது?’ என்று கேட்டான். வழிப்போக்கனோ `நீ எங்கு செல்ல வேண்டும்... சொல்’ எனக் கேட்டபோது, இவன் `தெரியாது’ என்றான். உடன், `தெரியாத ஊருக்கு எதற்கு வழி கேட்கிறாய்?’ என்றானாம் அந்த வழிப்போக்கன்.

ஆறு மனமே ஆறு!
ஆறு மனமே ஆறு!


இப்படித்தான் நம்மில் பெரும்பாலானோர் இலக்கு இல்லாமல் வாழ்கிறோம். குறிப்பிட்ட இலக்கு இல்லை, போகும் வழியைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல், இதுபற்றி எவரேனும் தெளிவுபடுத்தினாலும் புரிந்துகொள்ளாதத் தன்மை - தான் எனும் அகங்காரம், கடன் தொல்லை, குடும்பச் சிக்கல்கள்... எனப் பிரச்னைகள் நீள்கின்றன.

இதுபோன்ற காரணங்கள் சம்பந்தப்பட்டவரைத் தற்கொலைக்கே தூண்டுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது. இதிலிருந்து நாம் மீள வேண்டும்!

என்னுடைய கவலை - வேதனை - வருத்தம் - எல்லாம் என்ன தெரியுமா மக்களே? நம் குழந்தைகளின் வருங்காலம் பற்றித்தான்!

பிள்ளைகளும் எதிர்காலமும்!

நான் பன்னாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த காலம் அது. ஆடம்பர வாழ்க்கைக்குப் பேர்போன ஒரு நாட்டுக்குச் சென்றிருந் தேன். அங்கேயும் வீடு-வாசல் இல்லாமல் சுரங்கப் பாதைகளில் காலம் கழிக்கும் மக்கள் உண்டு. அப்படியான சூழலிலிருந்து வந்த சிறுவர்கள் சிலர், தாங்கள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு வந்திருந்தனர். அவை பெரும்பாலும் ஏழ்மை, கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவற்றைப் பிரதிபலிப்பனவாகவே இருந்தன.

அவர்களின் ஒருவன் இயேசுகிறிஸ்து, அன்னை மேரி இருவரும் துப்பாக்கி ஏந்தியிருப்பது போன்ற ஓவியத்தை என்னிடம் சமர்ப்பித் தான். அம்மா அதிர்ந்துபோனேன். `ஏன் இப்படி?’ எனக் கேட்டேன்.

அதற்கு அவன் ``துப்பாக்கி இருந்தால் மக்களிடம் பணம் பறித்து வாழ பயன்படும் அல்லவா?” என்றதுடன், வேறுசில விவரங்களையும் பகிர்ந்துகொண்டான்.

“என் தந்தைக்கு வேலைக்குப் போக திடமான உடலமைப்பும், வேலைக்குச் செல்லும் எண்ணமும் உண்டு என்றாலும் எவரும் வேலை கொடுக்கவில்லை. நாங்கள் எப்படி வாழ்வது. எங்களுக்குச் சுரங்கப் பாதைதான் வீடு. கல்வியும் வாழ்க்கையும் கேள்விக்குறி! ஆக நான் சொன்னதுபோலவே என் தந்தை வாழ்க்கையை நடத்துகிறார்’’ என்றான். அம்மாவின் மனம் துடித்தது; இந்த நிலை மாற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது!

சிறுவர்-சிறுமியரின் மனம் விரக்தியின் உச்சத்தில் இருப்பது நல்லதல்லவே. சிறு வயதிலிருந்தே ஏழ்மை, தாழ்வு மனப்பான்மை ஆகியவை மனத் தடுமாற்றத்திற்குல் காரணமாகிவிட, படிப்பை விடுவதும் இயல்பாகிவிடுகிறது. இவர்கள் இப்படியெனில், வாழ்வு வசதி மிகுந்த தரப்பிலோ கூடாத நட்பு, போதை மருந்து உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்து விடு கிறார்கள் பிள்ளைகள்.

நல்வழி காட்ட வேண்டிய மக்களும் அரசும் அதைச் செய்யத் தவறினால் இளைய தலைமுறையின் எதிர்காலம் என்னாவது? நாம் விழித்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் மக்களே.

கல்வியா, தண்டனையா?

பக்தர் ஒருவர் என்னிடம் கேட்டார்: ``கல்வி என்றதும் இன்ஜினீ யர் ஆகவேண்டும் டாக்டர் ஆகவேண்டும் என்று பெற்றோர் தங்களின் கனவைப் பிள்ளைகளிடம் திணிக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் இதைப் படி, அதைப் படி என அழுத்தம் கொடுக் கிறார்கள். இந்நிலையில் பிள்ளைகளுக்குக் கல்வி சுமையாகவே தெரிகிறது. அவர்கள் விரும்புவது கிடைக்கவில்லை. கிடைப்பதை ஏற்றுக்கொள்வதில் திருப்தியும், மகிழ்ச்சியும், விருப்பமும் இல்லை. இதற்கு என்னதான் வழி?”

பெற்றோர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வகுப்பில் அனைவரும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற முடியாது; அனைவரும் டாக்டர் அல்லது இன்ஜீனியர் ஆகிவிட முடியாது. இதைப் பெற்றோரும் பிள்ளைகளும் ஏற்கவேண்டும். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய முயற்சிக்கான படி என்பதையும் உணரவேண்டும்.

என் செல்லங்களே, பிள்ளைகளுக்கு வழிகாட்ட விரும்பும் நீங்கள், அவர்களிடம் அக்கறை காட்டுங்கள், கருணையுடன் அன்பையும் சேர்த்து ஊட்டுங்கள். அவர்கள் சோர்ந்துபோகும் போது உற்சாகம் ஊட்டுங்கள். நல்ல வாழ்க்கைத் தத்துவத்தை அவர்களின் மனதில் விதைத்திடுங்கள். மேலும், கடவுள் பக்தியுடன் செயல்பட்டால் அவர்களின் மனதில் எப்போதும் தற்கொலை முதலான விபரீத எண்ணங்கள் ஏற்படாது.

வருங்காலம் சிறக்கட்டும்!

அதேபோல் சமூகம், அரசியல் என சகல தரப்பிலும் ஆதாயம் தேடும் மனோநிலை மாறியாக வேண்டும். தர்மத்தின் வழியில் செயல்பாடுகள், தர்மத்தின் வழியிலேயே வாழ்க்கை மிக அவசியம். இதை இந்தச் சமூகத்துக்கும் தலைவர்களுக்கும் அம்மா வேண்டு கோளாகவே சமர்ப்பிக்கிறேன்.

இளைய தலைமுறையை நல்வழியில் இட்டுச் சென்றால், வாழ்க்கைச் சுரங்கத்தில் ஒளி துலங்கும். அப்போது மட்டுமே செழுமையான இளைய தலைமுறையையும் வளமான உலகையும் காண முடியும்! செய்வீர்களா ?

என் பிரார்த்தனை... `எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்பதுதான். `ஸ்வஸ்திப் பிரஜாப்யாம்... சுபமஸ்து நித்யம்; லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என்கிறது வேதம். பஜனையின் நிறைவில் உச்சரிக்கப்படும் தாரக மந்திரமும் இதுவே. ஒவ்வொரு நாளும் புவியில் வாழும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அனைவரையும் நேசியுங்கள். அனைவருக்கும் உதவுங்கள். அனைவரும் மகிழ்ச்சியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழட்டும். அதற்கு எல்லாம்வல்ல இறைவனின் ஆசீர்வாதத்தை வேண்டி பூரணமாகப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இது முற்றுப்புள்ளி அல்ல மக்களே! இன்றும் என்றும் இறைவனின் பரிபூரண ஆசியுடன், உங்கள் ஆன்மிகப் பயணம் தொடர வேண்டும் என வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து!

(நிறைவுற்றது)

அம்மாவின் பதில்!

? மனிதனின் வெவ்வேறு மனப்பான்மை என்பது முரண்பாடு அல்லவா?

`ஒரே நிகழ்வுதான்... ஆனால் அதுபற்றிய எண்ணம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மனநிலை அல்லது உணர்வு என்பது மனிதருக்கு மனிதர் வெவ்வேறாகவே இருக்கும். ஒரு புறம் பார்த்தால் யதார்த்தமாகவும்; மறு புறம் சூழலின் வெளிப் பாடாகவும் தோன்றும்.

9/11 இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவத்தின்போது, அனைவரும் அச்சத்தின் உச்சத்தில், அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவரிடம் “உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நிமிடத்தில் உங்கள் மனதில் தோன்றியது என்ன’’ எனக் கேட்டார் நிருபர் ஒருவர். அதற்கு அந்த நபர் என்ன சொன்னார் தெரியுமா?

`தீவிரவாதத் தாக்குதலில் டாலர் மதிப்பு சரியும். அதற்குள் என்னிடம் இருப்பதைக் காப்பாற்ற வேறுநாட்டு வங்கிகளுக்கு மாற்றி விடலாமா என்றுதான் தோன்றியது’ என்றாராம். மற்றவர்கள் இதைக் கேட்டுப் பரிகசிப்பார்கள் என்பதால், அந்த நபரின் மனநிலை முரண்பாடானது எனக் கருத முடியுமா? அவர் நிலையில் அது சரி எனத் தோன்றும். இன்னொன்றையும் கேளுங்கள். சாலையில் கார் விபத்து. ஒருவர் இறந்து விட்டார். உறவினர் கதறி அழுதவண்ணம் இருந்தனர். கூட்டம் கூடியது. அந்தச் சூழலிலும் அருகில் ஒருவர் எலுமிச்சைச் சாறு விற்றுக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒருசிலர் வாங்கிப் பருகி, தாக சாந்தி அடைந்தனர். இது எப்படி முரண்பாடு ஆகும். ஆக, எல்லாம் அதன் விதிப்படிதான் நடக்கிறது!