புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சின்னங்களை அதிகம் கொண்ட பகுதி என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். பல்லவ, சோழ மன்னர்களின் காலத்துக்கும் முந்தைய பல வரலாற்றுச் சுவடுகளை இன்னமும் தாங்கிக் கொண்டிருக்கும் தொன்மையான பூமி புதுக்கோட்டை. இங்கு குளத்தூர் தாலுகா, நமணராயச் சத்திரம் எனும் களமாவூர் கிராமத்தில் ஒரு பழைமையான பெருமாள் கோயில் திருப்பணிக்குக் காத்திருக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.
ரகுநாதராய தொண்டைமான் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த போது, குளத்தூர் எனும் பகுதியை நமணத்தொண்டைமான் நிர்வகித்து வந்தார். பெரும் கொடைவள்ளலான இவர், 1728-ல் நமணராயச் சத்திரம் எனும் இந்த ஊரைச் சீராக்கி, இங்கு இந்தப் பெருமாள் கோயிலைக் கட்டி வழிபட்டு வந்துள்ளார். இந்தக் கோயிலுக்கு இவர் அளித்த நன்கொடைகள், செய்த திருப்பணிகள், வைகுண்ட ஏகாதசி திருவிழா குறித்த செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாக இங்கு பொறித்து வைத்துள்ளார்.
இந்தப் பெருமாள் கோயில் 18-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு இருந்தாலும், ராமாயண காலத்திலேயே இந்த ஊர் பிரசித்தி பெற்று விளங்கியதாகத் தெரியவருகிறது. இலங்கையில் இருந்து திரும்பிச் செல்லும் வழியில் ராமரும் சீதாதேவியும் இங்குள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு வந்து வணங்கியதாக மகாவம்ச புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன்பிறகு குன்றன் அடிகள் என்ற மகான், இங்கு பாயும் அக்னி ஆற்றின் பெயரையே சுவாமிக்குச் சூட்டி, சிறியளவிலான ஆலயத்தையும் எழுப்பி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
ராமர் வழிபட்ட இந்த ஊரில் சிவாலயத்தோடு திருமால் ஆலயம் ஒன்றும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு அமைக்கப்பட்டது என்றும், அது காலப்போக்கில் சிதைந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.
பிறகு நமணத் தொண்டைமான் காலத்தில் உருவான பெருமாள் கோயிலும் சிதைந்துபோக, தற்போது சில பக்தர்களின் முயற்சியால் இந்த ஆலயத் திருப்பணிகள் தொடங்கி உள்ளன. இங்கே தேவி-பூதேவி சமேத ராக சயனக் கோலத்தில் அருள்கிறார் ஆதிகேசவப் பெருமாள்.
பள்ளிகொண்ட பெருமாளுக்கு முன்னால், தேவியர் சமேதராக நின்ற கோலத்தில் வேறொரு பெருமாளும் அருள்கிறார். ஆஹா... அற்புதம்... ஒரே கருவறையில் நின்றான், கிடந்தான் என இரண்டு திருக்கோலங்கள்! ஆதியந்தம் இல்லாத பரம்பொருளின் திவ்ய தரிசனத்தில் மெய்ம்மறந்து நின்றோம்.
`பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்வும்
மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்
அடியரோர்க்கு அகலல்ஆமே?'
என்று ஆழ்வார்கள் வழியில் உள்ளம் பாசுரம் பாடி உருக, கண்கள் ஆனந்த நீரைப் பெருக்கின!
`ஆதிகேசவா... ஆபத்பாந்தவா... எல்லாம் உன் லீலை! நீயே விரும்பி உறையும் இந்தத் தலத்தை நீ நினைத்தால் சடுதியில் சீர்செய்துவிட முடியாதா என்ன... நின் திருக்கோயிலின் திருப்பணிக்கான புண்ணியத்தை பக்தர்கள் எல்லோருக்கும் அளிக்க திருவுளம் கொண்டு விட்டாய் போலும். அதை மாற்ற எவரால் முடியும்?! நின்னருளால் நிச்சயம் இந்த ஆலயம் எழும்பும்; நீள் பள்ளி கொண்ட நின் கருணையும் பரவும்' என்று மனம் கசிந்துருக வேண்டிக்கொண்டோம்.
சக்கரத்தாழ்வார், ஆண்டாள் போன்ற விக்கிரகத் திருமேனிகளும் இங்குள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயம் பொலிவு பெற்று வழிபாட்டில் இருக்க, தற்போது இந்த பெருமாள் கோயிலைப் புனரமைக்கும் திருப்பணியில் ஈடுபட்டு உள்ளார்கள் இந்த ஊர் அன்பர்கள்.
ஆதிகாலத்தில் இருந்ததைப் போலவே மகா லட்சுமி, ராமர்-சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஹயக்ரீவர் உள்ளிட்ட 11 சந்நிதிகளை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளார்கள். தற்போது மூலவர் கருவறை, கருடன் சந்நிதி தவிர வேறு எதுவும் எழுப்பப்படவில்லை.
``பெருமாள் பக்தர்களும் அன்பர்களும் ஆதரவும் பங்களிப்பும் செய்தால், விரைவில் எங்கள் ஊர் பெருமாள் கோயில் பொலிவுபெற்றுவிடும். அதற்கு ஆதிகேசவர் அருள்பாலிப்பார்'' என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
நம் மனம் என்ற கொடி பற்றிக்கொள்ள கொழுக் கொம்பாய் விளங்குபவர் ஆதிகேசவன். அவரைச் சிந்தித்தாலே பாவமும் தோஷமும் விலகும்; அவர் உறையும் ஆலயப் பணியில் பங்கேற்பதோ பெரும் புண்ணியம் என்பது பெரியோர்கள் திருவாக்கு. நாமும் இந்த ஆலயத்தின் திருப்பணிக்குத் தோள்கொடுப்போம்; இயன்ற பங்களிப்பைச் செய்வோம். பெருமாளின் திருவருள் நம் சந்ததியை வாழ்வாங்கு வாழவைக்கும்!
வங்கிக் கணக்கு விவரம்:
A/c.Name: Sri Agneeswarar Trust
A/c.No: 607305018821
Branch: Keeranur
Bank : ICIC
IFSC : ICIC0006073
தொடர்புக்கு: விக்னேஷ் கந்தசாமி (93607 79163)
நீர் சுருக்கி மோர் பெருக்கி...
தினசரி உணவில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், வெந்தயம், ஓமம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, சுக்கு முதலானவை நம் உடலுக்கு அருமருந்தாகும்.
காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலைக் கடுக்காய்
மண்டலம் ஒன்று சாப்பிட
கோலை ஊன்றி
குறுகி நடப்பவர்
கோலை விட்டு
குலாவி நடப்பரே'
என்கிறது சித்தர் பாடல். இதேபோல் பழமொழி ஒன்றும் உண்டு: `நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் சுருக்கி உண்பவர்தம் பேர் உரைக்கிற் போமே பிணி!'
தண்ணீரை நன்கு காய்ச்சியும், தயிரை நன்கு கடைந்து மோராக்கியும், நெய்யைக் குறைவாகச் சேர்த்தும் உண்பவர்களை நோய் அண்டாது என்பது பொருள்.
- ஹ.தாயம்மாள், சேலம்