Published:Updated:

ஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாசத்தில் சப்த அலைகள் நிரந்தரமாகப் பரவியிருக்கின்றன.

ஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாசத்தில் சப்த அலைகள் நிரந்தரமாகப் பரவியிருக்கின்றன.

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

அந்தச் சப்த அலைகளைக் கண்டறிந்து, வாய்மொழியாய் வெளியிட்டவர்கள் மகரிஷிகள். அவற்றின் தொகுப்பே வேதங்கள். வேத ஒலியிலிருந்துதான் மனிதர்களின் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய தத்துவங்கள் ஏற்பட்டு, படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கிறோம்.

ஒலி, ஒளி... இவற்றில் `ஒலி' என்பது சப்தம் - காதால் கேட்பது. `ஒளி' என்பது கண்களால் பார்ப்பது. `எங்களுக்குக் கண்கள் நன்றாகத் தெரியவேண்டும்' எனும் பிரார்த்தனை ஸ்லோகம் வேதத்தில் உண்டு. அதேபோல், `என் காதுகளையும் நன்றாகக் கேட்கும்படிச் செய்யவேண்டும்' என்றும் வேதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு.

ஒலிதான் உயிருக்கே ஆதாரம். ஒருவன் இறந்துவிட்டான். ஆனால், வெளியில் காற்று இருக்கத்தானே செய்கிறது. அந்தக் காற்று அவன் நாசியின் வழியாகப் போய் அவனை உயிருடன் எழச் செய்யலாமே! ஏன் முடிவதில்லை? காரணம், அவனுடைய உடலில் ஒலி இல்லாமல் போய்விட்டது. மனித உடலுக்குள் ஒலி இருக்கும் வரைதான் காற்று அவன் நாசியின் வழியாக உள்ளே போகவும் வரவுமாக இருந்து, அவனை உயிருடன் இருக்கச் செய்யும். அந்த ஒலி மறைந்து விட்டால், வெளியிலிருக்கும் காற்றால் எந்த ஒரு பயனும் இல்லை.

எனவே, ஒலி என்பதுதான் அனைத்துக்கும் அடிப்படை. ஆகாசத்தில் சப்த அலைகளாகப் பரவியிருந்த ஒலியிலிருந்தே வேதங்களும், தொடர்ந்து... மொழி, கலாசாரம், நடைமுறைகள் அனைத்துமே தோன்றின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒலியின் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும், அதன் எழுத்து வடிவம் ஒவ்வொரு மொழிக்கும் மாறுபட்டிருக்கும். ஒரு தேசத்தில் பேசப்படும் ஒரு வார்த்தை(மொழி)யின் ஒலி வடிவமும், மற்றொரு தேசத்தில் பேசப்படும் வார்த்தையின் ஒலி வடிவமும் ஒன்றாக இருந்தாலும், எழுத்து வடிவமும், அந்த வார்த்தையின் பொருளும் மாறுபடும். சில மொழிகளில் எழுத்து வடிவம் ஒன்றாக இருந்தாலும்கூட உச்சரிக்கும் ஒலியில் மாறுபடும். உதாரணமாகத் தமிழில் ‘வ’ என்று உச்சரிக்கப்படும் எழுத்து வடிவம் மலையாளத்தில் ‘க்கா’ என்று உச்சரிக்கப்படுகிறது.

ஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்

மனிதர்களால் சிருஷ்டிக்கப்பட்ட எழுத்து வடிவங்களும் மனிதர்களைப் போலவே ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. ஆனால், பிரபஞ்சத்தில்... ஏற்கெனவே, ஆகாசத்தில் பரவியிருந்த ஒலியின் உச்சரிப்பில் மாறுபாடு இல்லை. ஒருவர் எங்கேயோ பேசுவதை நாம் இங்கே கேட்கிறோமே... அது சாத்தியமா, அதற்கான ஃபார்முலாக்கள் நம் வேதங்களில் உள்ளனவா என்று பலரும் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன்...

ஆகாசத்தில் சூட்சுமமாக, சப்த அலைகளாகப் பரவியிருக்கும் ஒலியை நம் மூளையின் ஆற்றலினால் ஆகர்ஷணம் செய்து - இழுத்துச் சேகரித்து, தேவைப்படும்போது வாயினால் வார்த்தை வழியாக ஒலி வடிவத்தில் வெளியிடும்போது, அந்த ஒலி வடிவங்களுக்கு உரிய தேவதைகள் எல்லாரும் சாந்நித்யத்துக்கு வருகிறார்களே!

இன்றைக்குத் தொலைக்காட்சி, வானொலி என்றெல்லாம் சொல்கிறோமே, இவை எதுவும் இல்லாமலேயே எங்கோ நடப்பதையும் பேசுவதையும் அன்றைய மனிதர்களால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. காரணம், அவர்களுடைய புத்திவிகாசம்தான். மகாபாரதத்தில், எங்கோ குருக்ஷேத்திரத்தில் நடக்கும் யுத்தக்காட்சிகள், அரண்மனையில் இருக்கும் சஞ்சயனுக்கு அப்படியே தொலைக்காட்சியில் தெரிவதுபோல் தெரிந்தன. அதை அவன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல்லவும் முடிந்ததே. இத்தனைக்கும் சஞ்சயனுக்குத் தொலைக்காட்சி போன்ற சாதனம் எதுவும் தேவையாக இருக்கவில்லை. சஞ்சயன் தன்னுடைய புத்திவிகாசத்தினாலும், பரம்பொருளின் அருளாலும் அத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தான். அந்தக் கால மனிதர்கள் வேத தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்கள். அதனால், வேதங்களில் சொல்லப்பட்டிருந்த அனைத்தும் அவர்களுக்குச் சாத்தியமானது.

செயற்கைச் சந்திரனை ஆகாசத்தில் மிதக்க விடப் போவதாகச் சொல்கிறார்கள். அதனால் ஒரு பயனும் விளையப்போவதில்லை. அப்படியே ஏதேனும் பலன் கிடைக்குமானால், அதுவும் அற்பகாலத்துக்கே நீடிக்கும். இயற்கை விதிகளுக்கு மாறாக நாம் எதுவும் செய்யக்கூடாது.

திரிசங்கு என்று ஒருத்தன் இருந்தான். அவனுக்கு தன் உடலுடனே சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஓர் ஆசை. விசுவாமித்திரரிடம் தன்னுடைய ஆசையைச் சொன்னான். அவரும் தன் தவ வலிமையால் அவனைச் சொர்க்கத்துக்கு அனுப்பினார். ஒரு நரன் சொர்க்கத்துக்கு உடலுடன் வருவதைக் கண்ட தேவேந்திரன் என்ன செய்தான் தெரியுமோ? அவனைச் சொர்க்கத்துக்குள் நுழையவிடாமல் கீழே தள்ளிவிட்டான். கதறியபடியே பூமிக்கு வந்துகொண்டிருந்த திரிசங்குவைப் பார்த்த விசுவாமித்திரர், சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையில் ஒரு சொர்க்கத்தை திரிசங்குவுக்காக உருவாக்கினார். ஆனால், அந்தச் சொர்க்கம் நிலைக்கவில்லையே. அப்படித்தான் செயற்கைச் சந்திரன் கதையும். அதனால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை!

இன்னொன்றும் சொல்கிறேன். இன்றைக்குச் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் செயற்கைக்கோள் விட்டு ஆராய்ச்சியெல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள். அதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது. அங்கே மனிதர்கள்தான் வசிக்க முடியுமா. இந்தப் பிரபஞ்சத்தில் நம் பூமியைப் போல் எத்தனையோ கிரகங்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்றில் ஜலம் இருக்கும்; மற்றொன்றில் வாயு இருக்கும்; வேறொன்றில் அக்னி இருக்கும். ஆனால், பஞ்சபூதங்களும் ஒரு கிரகத்தில் இருந்தால்தான் உயிரினங்கள் தோன்றவும் வாழவும் முடியும். அந்த வகையில் பூமியில்தான் பஞ்சபூதங்களும் இருக்கின்றன.

அதேபோல் மற்ற கிரகங்களிலும் பஞ்ச பூதங்களும் தோன்றினால், அங்கேயும் உயிரினங்கள் தோன்றி வாழமுடியும். ஆனால், அப்படிப் பஞ்சபூதங்கள் அங்கே தோன்றுவதற்கான சாத்தியமே கிடையாது. சந்திரனில் ஜலம் இருக்கிறது என்பது, ஏதோ இன்றைக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமல்ல. சந்திரனைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ? ‘ஜலமயமான சந்திரன் - தண்ணீர்மயமான சந்திரன்’ என்று சொல்கிறது. ஆக, ஏற்கெனவே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் மகத்தான உண்மைகளில், சிலவற்றை மட்டும்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். மொத்தத்தையும் கண்டுபிடிப்பது என்பது யாராலும் முடியாத காரியம்.

இந்தப் பிரபஞ்சம் இருக்கிறதே, இதில் எத்தனை கோளங்கள் இருக்கின்றன என்பதோ, எத்தனை கோளங்கள் அழிகின்றன என்பதோ நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை கோளங்கள் புதிதாக உற்பத்தியாகின்றன என்பதும் நமக்குத் தெரியாது. நம் கண்களுக்குப் புலனாகும் விஷயங்களை மட்டுமே கருத்தில்கொண்டு, `ஒரு பொருள் இருக்கிறது' என்று முடிவுக்கு வருவது சரியானதல்ல. நம் பிறப்பின் மூலம் நமக்கே தெரியாது. அதிகபட்சம் நம் தாத்தா வரை தெரிந்துவைத்திருப்போம். தாத்தாவின் அப்பா நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக அவர் இல்லையென்று சொல்லிவிட முடியுமா?

ஆக, நம்முடைய சாமான்ய புத்தி இருக்கிறது பாருங்கள், அந்தப் புத்தியின் அடையாளம் என்ன தெரியுமா? எதையெல்லாம் நாம் பார்க் கிறோமோ, எதையெல்லாம் நாம் கேட்கிறோமோ, எதையெல்லாம் நாம் அனுபவிக்கிறோமோ, அவற்றை மட்டுமே நாம் அடிப்படையாக வைத்துக் கொண்டு, அதற்குமேலும் நம் சிந்தனைகளை வளரவிட்டுப் பல விதமான ஊகங்களைச் சொல்கிறோம். இது எப்படிச் சரியாக வரும்?

நாம் பார்த்தது, நாம் கேட்டது இவற்றோடு மட்டும் இந்த லோகம் முடிந்துவிடுவதில்லையே. வராத அனுபவங்களும், நாம் பார்க்காத விஷயங்களும், கேட்காத தகவல்களும் நிறைய இருக்கின்றன. இந்த உண்மையை மனிதர்கள் மறந்துவிட்டார்கள். இது எப்படிச் சரியாகும்? இப்படியான மனிதர்களின் சிந்தனையிலிருந்து தோன்றும் எண்ணங்கள் எப்படித் தரமானவையாக இருக்கும்?

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் நமக்குக் கிடைக்கக்கூடிய முடிவு என்ன தெரியுமோ... பூர்வஜன்ம வாசனைதான்.

நாம் பிறப்பதற்கு முன்பே நம் மனதில் ஏதோ ஒரு வாசனை ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த வாசனையின் சம்வர்க்கத்தில்தான் இந்த புத்தி வேலை செய்கிறது. இப்படி ஒரு குறை மனிதனிடம் இருப்பதால்தான் உண்மையை அவனால் உடனே தெரிந்துகொள்ள முடிவதில்லை.

- தொடரும்...