Published:Updated:

ஆதியும் அந்தமும் - 9 - மறை சொல்லும் மகிமைகள்

தசாவதாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தசாவதாரங்கள்

தசாவதாரங்கள் உணர்த்தும் தத்துவம்...

ஆதியும் அந்தமும் - 9 - மறை சொல்லும் மகிமைகள்

தசாவதாரங்கள் உணர்த்தும் தத்துவம்...

Published:Updated:
தசாவதாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
தசாவதாரங்கள்

னிதர்கள் தாங்கள் பார்த்தது, கேட்டது, அவர்களுடைய அனுபவங்கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டு, இது இப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவது எப்படி சரியாகும்? மனிதர்கள் இப்படியான முடிவுக்கு வருவதற்கு பூர்வஜன்ம வாசனைதான் காரணம்.

இப்படி ஒரு குறை மனிதனிடம் தொடர்ந்து வருவதால்தான், உண்மையை அவனால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் அவன் கஷ்டப்படுகிறான். அவனுடைய மனம் சலசலப்பிலேயே இருக்கிறது; ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கிறான். பட்சபாதம் இல்லாத ஒரு சித்தாந்தத்தை வாங்கிக்கொள்வதற்கு அவன் மனம் தயாராக இல்லை.

அதனால்தான் அந்தக் காலத்தில் தர்சனங்கள் எழுதிய மகரிஷிகள், ‘மனிதனே, நீ உண்மையை நேரடியாகப் புரிந்துகொள்வதற்கு உன்னுடைய அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லாதே. அது சத்தியமாவதற்குச் சாத்தியம் இல்லை. காரணம் உன்னுடைய அனுபவம் ஒரு சின்ன வட்டத்துக்குள் அடங்கியது. அதைவிடப் பெரியதாக ஒரு வட்டம் இருக்கிறது. அந்த அனுபவத்தை நீ எட்டிப் பிடிக்கவில்லை. அது, உன் மூளைக்கும் எட்டவில்லை, உன் காதுகளுக்கும் கேட்கவில்லை. கண்ணாலும் நீ அதைப் பார்க்க வில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் பெரிய வட்டத்தில் இருக்கக்கூடிய பேருண்மையை புறக்கணித்துவிட்டு, நீ எடுக்கும் முடிவு இரண்டும்கெட்டான் முடிவாகத்தான் இருக்கும். ஆகையால் முன்னோர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் ஒருமுறை கேள். அவர்கள் நீ பார்க்காததையும், கேட்கா ததையும், அனுபவிக்காத தையும் சொல்லியிருக்கிறார்கள். `அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என்று நீயாக உன் அனுபவத்தில் நினைத்துக்கொண்டு பின்வாங்காதே. அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளும்போது உனக்கு எல்லாமே தெரிய வரும். மகரிஷிகளாகிய நம் முன்னோர்கள் வேதங் களின் அடிப்படையில்தான் அனைத்து உண்மை களையும் கூறியிருக்கிறார்கள். வேதங்களில் உள்ளவைதான் சத்தியம். வேதங்களில் இல்லாதது எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. இங்கே ஒன்றைச் சொல்கிறேன்.

எல்லோரும் டார்வினின் பரிணாம வளர்ச் சியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவருடைய ஆய்வின்படி, மனிதர்களின் ஆரம்பம் நீரிலிருந்து தான் தொடங்குகிறது என்கிறார். அந்த விஞ்ஞானி தோன்றியது சமீப காலத்தில்தான். ஆனால், நம்முடைய புராணங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டன. அதற்கும் முன்னால் அனாதி காலத்திலிருந்து உள்ளவை வேதங்கள். வேதங்களில் ஏற்கெனவே இந்த விஷயம் உள்ளது. வேதங்களில் ஏற்கெனவே சொல்லப் பட்டிருக்கும் இப்படியான விஷயங்களில் பொதிந்து கிடக்கும் தத்துவத்தை வெளிப்படுத்தும் விளக்கங்களும் புராண வடிவத்தில் உள்ளன.

பகவானின் பத்து அவதாரங்களைப் பற்றி கவனிப்போம்.

மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி. பிரபலமான இந்த அவதாரங்களின் அடிப்படைத் தத்துவம் என்ன?

மச்சாவதாரத்தை எடுத்துக்கொள்வோம். மீன் என்ற ஜீவராசி நீரில் தோன்றுவது முதல் அவதார மாகக் கருதப்படுகிறது. நீரில் தோன்றுவதன் அடிப்படைத் தத்துவத்தைப் புராணங்களில் காணும்போது, படைப்புகளிலேயே முதன்மையானது நீர்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றிச் சொல்லும் ஆயுர்வேதமும் இதைத்தான் சொல்கிறது. அதுபற்றி பிறகு பார்ப்போம்.

வேதங்களில் உள்ள கருத்துகளை மிக எளிமையாக விளக்குபவையே புராணங்கள். விஞ்ஞானத் தத்துவங்களுக்குப் பலதரப்பட்ட செய்முறை, அணுகுமுறை இருப்பதைப் போல், புராணங்களில் வரும் கதைகள் வேதங்களைப் புரிந்துகொள்வதற்கான அணுகுமுறைகள்.

ஆதியும் அந்தமும் - 9 - மறை சொல்லும் மகிமைகள்

தசாவதாரத்தைக் கூர்ந்து கவனிக்கும்போது, மத்ஸ்யாவதாரம் - நீரில் மட்டும் இருக்கும் உயிர்நிலை. அடுத்து கூர்ம அவதாரத்தில் நீரிலும் நிலத்திலும் இருக்கும் வடிவம். மூன்றாவது வராகம். பன்றியின் வடிவில் நீரை ஒட்டி இருக்கும். ஆனால், நீரில் வசிக்காது; நிலத்தில் மட்டுமே வசிக்கும். நரசிம்ம அவதாரத்தில் மனிதன் பாதி மிருகம் பாதி. இதில் மிருகத்தனம் முழுவதுமாக விடுபடவில்லை. செயல்படும் கர்மேந்திரிய பாகமான உடல் மனித வடிவிலும், சிந்தித்துச் செயலில் ஈடுபடச் செய்யும் ஞானேந்திரியமான மூளை இருக்கக்கூடிய தலைப் பகுதி மிருகத்தனமாகவும் இருக்கிறது.

இந்தச் சிறிய மிருகபாகம் வாமன் அவதாரத்தில் மறைந்து, சிறிய பாலகன் வடிவத்தில் இருக்கிறது. குழந்தைக்கே உரித்தான வெகுளித்தனம். ஆனால், குழந்தையின் வடிவத்தில் முழுவதுமான மானிட வடிவம். அடுத்து வரும் பரசுராம அவதாரம் ஞானேந்திரியங்கள் முழுமை பெறாமல், சிந்திக்கும் திறனும் இல்லாமல், கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படியும் நிலையில் உள்ளது. அதனால்தான் தாயின் தலையை வெட்டும்படி ஜகதக்னி கட்டளையிட்டதுமே எந்தக் கேள்வியும் கேட்காமல் தாயின் தலையைக் கொய்து வருகிறான்.

ராமாவதாரத்தில் நினைப்பதைச் செயல் படுத்தும் நிலையிலிருக்கிறார். மனிதனின் முழு வடிவமும், எண்ணமும், செயலும் ஒருங்கிணைந்து செயல்படும் நிலை. பலராம அவதாரத்தில் அவரால் சுயமாகச் சிந்தித்துச் செயல்படக்கூடிய திறன் இல்லாத நிலை.

பூர்ணாவதாரமான கிருஷ்ணாவதாரம் சிந்தனா சக்தியைப் பரிபூரணமாகப் பெற்ற நிலை. ஆன்ம சிந்தனைக்குச் சென்று, பரிபூரண நிலைக்கு வந்துவிட்ட அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம். பிறருக்கு உபதேசம் செய்யுமளவுக்கு முதிர்ச்சி அடைந்த முழுமையான நிலை.

சின்னஞ்சிறிய ஜீவராசியிலிருந்து மிருகமாகி, பின்பு மனிதனாகி, கடைசியாக தெய்வநிலைக்கு ஏற்றம் பெறும் இந்த தசாவதாரத் தத்துவம், தெய்வ நிலைக்கு ஏற்றம் பெறக்கூடிய சக்தியை - வலிமையை எடுத்துக் காட்டுகிறது.

சரி, இந்தத் தசாவதாரத் தத்துவம் ஒருபுறம் இருக்கட்டும். நிதர்சனத்தில் பார்க்கும்போதும், ஒரு மனிதனின் கர்ப்பவாசமே அவனுடைய உய்வு பெறும் மாசக்தியை விளக்கும் வகையில் உள்ளது. கர்ப்பம் தரித்த முதல் மாதத்திலிருந்து ஐயிரண்டு திங்கள் காலம் முடிவதற்குள், இந்த தசாவதாரத் தில் நாம் காணும் நிலைகள் அனைத்தையும் காணலாம்.

கர்ப்பவாசத்தில் கர்ப்பம் தரிப்பதே நீரில்தான். புழுபோல் ஒரு ஜீவராசியாக முதல் நிலையிலும், பின்பு தயிர் போன்ற கலவையாகவும், அதன்பின் பிரம்பு போன்ற உருவாகவும், தொடர்ந்து சின்னச் சின்னதாக மனித உறுப்புகளும் தோன்றுகின்றன. எட்டாவது மாதத்தில் முழுமையான மனித உருவுடன் எல்லா இந்திரிய அமைப்புகளுடன் உருப்பெறுகிறது. ஆக, ‘மனிதன் உருவாகிறான்’ என்ற தத்துவத்தை டார்வின் போன்ற விஞ்ஞானிகள் எடுத்துக்கூறுவதற்கு முன்பே, வேதங்கள் ‘கர்ப்பவாசம்’ என்ற செயலில் எடுத்து விளக்கியுள்ளன.

வேதங்களில் கூறப்பட்டுள்ளவற்றைப் புராணக் கதைகளின் வாயிலாக நாம் கேட்கும்போது, அதனுள் அடங்கியுள்ள மாபெரும் தத்துவங்கள் என்னவென்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டுமே தவிர, கதைகளை வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாகக் கருதக்கூடாது.

ஏற்கெனவே இருக்கும் ஒன்றைக் ‘கண்டுபிடித்து’ வெளியுலகுக்குப் பல விஞ்ஞானிகள் எடுத்துக் கூறியுள்ளவற்றை, மிக எளிய முறையில், தகுந்த உதாரணங்களுடன் நம்முடைய வேதங்கள் புராணங்கள் வாயிலாகக் கூறியுள்ளன.

பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ?

- தொடரும்...