Published:Updated:

ஆதியும் அந்தமும் - 14 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

மனிதர்கள், தங்களுடைய வாழ்க்கையைத் தங்களுக்கு மட்டுமே பயனுள்ள தாகச் செய்துகொள்ளாமல், தன் சந்ததிக்கும் தான் வாழும் தேசத்துக்கும் பயன்தரத்தக்கதாக இருக்கும்படி வாழ வேண்டும்.

ஆதியும் அந்தமும் - 14 - மறை சொல்லும் மகிமைகள்

மனிதர்கள், தங்களுடைய வாழ்க்கையைத் தங்களுக்கு மட்டுமே பயனுள்ள தாகச் செய்துகொள்ளாமல், தன் சந்ததிக்கும் தான் வாழும் தேசத்துக்கும் பயன்தரத்தக்கதாக இருக்கும்படி வாழ வேண்டும்.

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் ரிஷி பரம்பரை பற்றிய விவரங்கள் நிறையவே இருக்கின்றன. ரிஷிகளைப் பற்றிய தகவல் களைச் சொல்லவேண்டிய அவசியம் அவற்றுக்கு ஏன் ஏற்பட்டது? அவர் களுடைய உபதேசங்கள், நல்லுரைகள் அனைத்தும் உலகத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

மனிதர்கள், தங்களுடைய வாழ்க்கையைத் தங்களுக்கு மட்டுமே பயனுள்ள தாகச் செய்துகொள்ளாமல், தன் சந்ததிக்கும் தான் வாழும் தேசத்துக்கும் பயன்தரத்தக்கதாக இருக்கும்படி வாழ வேண்டும். அப்படியான சிந்தனை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். உதாரணமாக ஒன்று சொல்கிறேன்.

புராணத்தில் கபில ரிஷியைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர், இந்தப் பூமியில் தான் தோன்றியதற்கான காரண காரியங்கள் முடிந்துவிட்ட படியால், ஓய்வுவெடுத்துக்கொள்வதற்காக பாதாளத்துக்குச் சென்றார். அங்கே, தன்னை எவரும் சீண்டக் கூடாது என்பதற்காக ஓர் ஏற்பாடு செய்துகொண்டார். எவரேனும் அவரைச் சீண்டினால், அதன் விளைவாக அவர் கண் திறந்து பார்த்தால், சீண்டுபவர் பஸ்பமாகிவிடுவார்கள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வேளையில், பூலோகத்தில் சகர மகாராஜா அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். அந்தக் காலத்தில் தன்னுடைய தேவைகளை யாகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதே வழக்கம். யாகத்துக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணர் தம்முடைய கீதோபதேசத்தில் யாகத்தின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியிருக்கிறார்.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

‘இந்த பிரபஞ்சத்தையும், நீரையும், உயிரினங்களையும், மனிதர்களையும் சிருஷ்டித்து, யாகத்தையும் சிருஷ்டித்து, அந்த யாகத்தின் மூலம் உங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

யாகம் செய்தால் மழை பொழியும். மழை பொழிந்தால் செடிகொடிகள் செழித்து வளரும். பயிர்களின் விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் மனிதர்களுக்கு உணவு குறைவில்லாமல் கிடைக்கும். உணவு கிடைத்தால் சிந்தனை வளரும். சிந்திக்கும்போது வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வழி பிறக்கும். நாம், நம்முடைய பிறப்பை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அது பயன்படும். அதேநேரத்தில் நம்முடைய தேவைகளும் பூர்த்தியாகிவிடும்.

அப்படி, ஒரு மன்னன் யாகம் தொடங்குவதற்கு முன்பு ஒரு குதிரையை அவிழ்த்துவிட வேண்டும். தேசமெங்கும் சுற்றிவரும் அந்தக் குதிரையை யாரேனும் ஒரு ராஜா பிடித்து வைத்துக்கொண்டால், அந்த ராஜாவுடன் இவன் யுத்தம் செய்து வெற்றிபெற வேண்டும். இப்படி, தேசம் முழுவதும் அந்தக் குதிரை சுற்றிவந்த பிறகே யாகத்தைத் தொடங்க வேண்டும். இப்படி ஒரு சட்டம் - ஒரு நிபந்தனை அந்த யாகத்துக்கு உண்டு. எல்லா அரசர்களுக்கும் மேலானவனாக இருக்கும் ஒரு மகாராஜாதான் அந்த யாகத்தை நடத்த முடியும்.

அப்படி, சகர மகாராஜா அனுப்பிய குதிரை காணாமல் போய்விட்டது. உடனே சகர குமாரர்கள் குதிரையைத் தேடி எல்லா இடங்களுக்கும் சென்றனர். பூமியில் எங்கு தேடியும் குதிரை கிடைக்கவில்லை. அப்போது ஒருவர் சொல்லியதன் பேரில், பாதாளத்துக்குச் சென்றனர். அங்கே ஒரு குகையில் குதிரை கட்டப்பட்டிருந்ததை சகர குமாரர்கள் பார்த்தனர். சகர குமாரர்கள் ஆறாயிரம் பேர் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

அவர்கள் கண்ட குகை, கபிலர் இருக்கும் இடம். அங்கே, குதிரையைக் கட்டிவிட்டுச் சென்றவன் இந்திரன். காரணம் என்ன தெரியுமோ? சகர ராஜா யாகத்தைப் பூர்த்திசெய்துவிட்டால், தன்னுடைய இந்திர பதவிக்கு ஆபத்து வந்துவிடுமே என்று இந்திரனுக்கு ஏற்பட்ட அச்சம்தான். ஆனால் சகர குமாரர்கள், குதிரையைக் கபில முனிவர்தான் பிடித்துவந்துள்ளார் என்று நினைத்துக் கொண்டனர்.

எனவே, அவர்கள் கபில முனிவரைத் தட்டி எழுப்பினர். அவர் கண்களைத் திறந்ததுதான் தாமதம், ஆறாயிரம் பேரும் எரிந்து சாம்பலாகி விட்டனர். இவர்களுக்கெல்லாம் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்றால், கங்கை தீர்த்தத்தைக் கொண்டு வந்து தர்ப்பணம் செய்தால்தான் கிடைக்கும். அந்த அரச பரம்பரையில் வந்த ஒவ்வொருவரும் முயற்சி செய்து பார்த்தார்கள். யாராலும் முடியவில்லை. பகீரதன் என்று ஒருத்தன் வந்தான். எப்படியும் தன் முன்னோர்களுக்கு நல்ல கதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டான். ஆகாச கங்கையைப் பூமிக்கு வரவழைப்பதற்குத் தவம் செய்தான்.

பகீரதனின் தவத்தைக் கண்ட ஆகாச கங்காதேவி, `‘உன் தவத்துக்கு இரங்கி, நான் ஆகாசத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருவேன். ஆனால், ஆவேசமாக வரும் என் பிரவாகத்தைத் தாங்கிக்கொள்வதற்கான வழியை நீதான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்'’ என்றாள்.

பகீரதனின் வைராக்கியத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த மகேஸ்வரன், தன்னுடைய சடையில் கங்கையைத் தாங்கிக்கொண்டு வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறினார். அதைக்கேட்ட ஆகாச கங்கை, எப்படியும் சிவபெருமானின் சடையால் ஏற்படும் தடையைத் தகர்த்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாகப் பொங்கி வந்தாள். ஆகாச கங்கையின் அகங்காரத்தை அடக்க நினைத்த சிவபெருமான், கங்கையை தன் சடாமுடிக்குள் அடக்கிவிட்டார்.

பகீரதன் மிகவும் மனம் வருந்தியவனாகச் சிவபெருமானை தியானித்து, `பெருமானே, கங்கையை வேண்டி நான் தவமிருந்தேன். ஆனால், கங்கையை நீங்கள் உங்கள் சடைக்குள் அடக்கிக்கொண்டீர்களே’ என்று கூறி, மறுபடியும் தவமியற்றத் தொடங்கினான். அவனிடம் இரக்கம் கொண்ட சிவபெருமான், கொஞ்சமாக கங்கையை வெளியில் விட்டார்.

அப்படி கொஞ்சமாக வெளிவந்த கங்கையே பன்மடங்காகப் பெருகி பூமியில் பாய்ந்தாள். வழியில், ஜாஹ்னு மகரிஷி என்பவரின் யாகசாலையை அழித்துவிட்டுச் சென்றாள்.

ஜாஹ்னு மகரிஷி, `நாம் இந்த லோக க்ஷேமத்துக்காக யாகம் செய்ய நினைத்தால், இந்த கங்கை இப்படி யாகசாலையை அழித்துவிட்டுச் செல்கிறாளே’ என்று கோபம் கொண்டார். மேற்கொண்டு கங்கை யின் போக்கைத் தொடரவிடாமல் தடுக்க எண்ணி, மொத்த கங்கை நீரையும் குடித்துவிட்டார்.

இதைக் கண்ட பகீரதன், ‘நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு கங்கையைச் சிவபெருமானிடமிருந்து பெற்று வந்தோம். அப்படி வந்த கங்கையை இந்த ஜாஹ்னு மகரிஷி இப்படிப் பருகிவிட்டாரே. கங்கை பாதாளத்துக்குச் சென்றால்தானே நம்முடைய முன்னோர்கள் நல்ல கதி அடையமுடியும். நம்முடைய முயற்சியும் வீணாகிவிடுமோ' என்று நினைத்துப் பெரிதும் வருந்தினான்.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

ஜாஹ்னு மகரிஷியிடம் சென்றவன், தனது நோக்கத்தை எடுத்துச்சொல்லி, கங்கையை விடுவிக்கும்படி பிரார்த்தித்தான். பகீரதனின் லட்சியம் நல்லதாக இருக்கவே, அவனுடைய வேண்டுதலை ஏற்று, தம் காதின் மூலமாக சிறிது கங்கையை வெளியில் விட்டார் ஜாஹ்னு மகரிஷி.

பகீரதனும், தம் முன்னோர்கள் சாம்பலாகக் கிடந்த பாதாளத்துக்குக் கங்கையை வரவழைத்து, தர்ப்பணம் செய்து அவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும்படி செய்தான். அந்தப் பாதாளம் ஒரு தீவு போல் இருந்தது. அங்கே சகர குமாரர்கள் சாம்பலாகக் கிடந்ததால், அந்தத் தீவுக்கே ‘சாம்பல் தீவு’ (Ash Dhweep) என்று பெயர் ஏற்பட்டது.

இந்தக் கதை எத்தனை தாத்பர்யங்களை உணர்த்துகிறது தெரியுமோ! ஒரு ரிஷியின் கதை பல தகவல்களைச் சிருஷ்டித்துக் கொடுக்கிறது.

தண்ணீர் பாதாளம் வரை செல்லும். ஆனால், தண்ணீர் பூமிக்கு அடியில் இல்லை. பூமிக்கு அடியில் தண்ணீர் வர வேண்டும் என்றால், அது ஆகாசத்திலிருந்துதான் வர வேண்டும். அப்படி பகீரதன் ஆகாசத்திலிருந்து கங்கையைக் கொண்டுவந்தபடியால், அதற்கு ‘உதகம்’ என்ற பெயர் ஏற்பட்டது. உதகம் என்றால் ஜலம் - தண்ணீர் என்று பொருள். ஆகாசத்திலிருந்து வரும் அந்தத் தண்ணீர்தான் பூமிக்கடியில் சென்று நிலத்தடி நீராகத் தேங்குகிறது. அது மிகவும் சுத்தமான தண்ணீர். சகலவிதமான ஜீவராசிகளுக்கும் உயிரூட்டக்கூடியது அந்த ஜலம்தான். தண்ணீர் என்பது ஆகாசத்தில் இருந்து பெறக்கூடியதுதான் என்ற பெரிய தத்துவத்தை உணர்த்துவதற்கு இந்தக் கதை பயன்பட்டது.

இப்படி ஆகாயத்திலிருந்து மழையாகப் பெய்து, அதுவே ஆறாகப் பெருகி, சமுத்திரத்தில் கலந்து, சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி, மேலே சென்று மேகங்களாக உருவெடுத்து, மறுபடியும் மழையாகப் பெய்கிறது. இது ஒரு சுழற்சி முறை. இப்படியான உண்மையை நமக்கு முதலில் உணர்த்திக்காட்டியவர்கள் ரிஷிகள். இந்தத் தத்துவத்தை நமக்கு உணர்த்தவே கபில ரிஷியின் கதை, புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

கபில ரிஷியின் கதை சொல்லும் மற்றொரு தத்துவமும் உண்டு.

- தொடரும்...