
இன்றைக்கு மனிதர்கள் தங்களுக்குள் பல விதமான ஆசைகளையும் மற்றவர்கள்மீது துவே ஷத்தையும் வளர்த்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
தங்களுக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கவேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள்!
இன்றைக்கு இருப்பவர் நாளைக்கு இல்லை; இன்றைக்குப் பயன்படும் ஒரு பொருள் நாளைக்குப் பயனில்லாமல் போய்விடும் என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாலும், மரணத்தைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.
சில உண்மைகளை உள்வாங்கிக்கொள்ள சங்கோஜப்பட்டுக்கொண்டு, ஆசையினாலும் அறியாமையினாலும் தப்பான வழியில் போவது என்பதையே பழக்கத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால், ரிஷிகள் அப்படியா வாழ்ந்தார்கள்? அவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது அவர்களுக்குத் துன்பத்தைத் தரவில்லை. நமக்கோ, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்பதை நினைத்தாலே துக்கம் மிகுந்து விடுகிறது.
நாம் பிறக்கும்போதே நம்முடைய மரணமும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது. அதில் துக்கப்பட ஒன்றுமே இல்லை. மரணம் என்பது இயற்கை. அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நாம் பயப்படுகிறோமே! நமக்கு அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்குத் தெம்பு இல்லையே.
காரணம், உண்மைகளை மனத்தில் வாங்கிக் கொள்ள இயலாமல், ஆசை மற்றும் அறியாமையால் தவறான வழிகளையே தேர்ந்தெடுக்கிறோம். அதனால்தான் நமக்கு இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
கல்வி கற்காமல் இருக்கவே கூடாது என்பது தான் ரிஷிகளின் முதல் உபதேசம். கல்வி கற்றால் என்ன லாபம்? மனிதன் கல்வியறிவு பெறு வதன் மூலமாக, அவன் தன் மனத்தில் காம, குரோத, மத, மாத்சர்யங்கள் ஏற்படாதபடி தடுத்துக்கொள்ளலாம். அதனால்தான், கல்விக்கு பிரதான்யம்.
ஒரு விஷயம் சொல்கிறேன். பலர் பிறக்கிறார்கள்; பலர் இறக்கிறார்கள். நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அனுபவத்துக்கும் தெரிகிறது. சில குழந்தைகள் பிறந்த சில நாள்கள் அல்லது மாதங்களிலேயே இறந்துவிடுகின்றன. நோய் வந்து இறக்கவில்லை. ஒருநாள் லேசான காய்ச்சல் வருகிறது. மறுநாள் இறந்துவிடுகிறது. சின்ன குழந்தை திடீரென்று இறந்துவிட்டால், நமக்கு துக்கம் ஏற்படத்தானே செய்யும்.
இன்னும் சிலர் சிறிய வயதில் இறந்து போகிறார் கள். சிலர் வயது முதிர்ந்து இறக்கிறார்கள். சிறிய வயதில் மரணம் ஏற்படுவது அகால மரணம். அப்படி வரக்கூடாது. ஒருவன் தனக்குச் சிறிய வயதில் மரணம் வரும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனாலும், அவனுக்கு இறப்பு நேரிடுகிறது. சாலையில் போய்க்கொண்டிருக்கும் ஒருவன் வண்டி மோதி இறந்துவிடுகிறான். அவனாக வலியப் போய் விபத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. இன்னும் சிலர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.இப்படியெல் லாமும் மரணம் ஏற்படுகிறது. இதையெல்லாம் நாம் பார்க்கவும் கேட்கவும் செய்கிறோம். ‘இப்படி யெல்லாம் ஏன் நடக்கிறது?’ என்று நினைத்துப் பார்த்தால், நமக்குக் குழப்பமே மிஞ்சுகிறது.
இன்னும் சில உதாரணங்களும் சொல்கிறேன். மாமரத்தில் நிறைய பூக்கள் பூத்துக் குலுங்கு கின்றன. மாமரமே தெரியாதபடி பூக்களே நிறைந் திருக்கின்றன. பெரிய புயல் அடித்ததும் அத்தனை பூக்களும் கீழே விழுந்துவிடுகின்றன. அந்தப் பூக்கள் அகாலத்தில்தானே கீழே விழுந்தன.
ஒரு மான்குட்டி அப்போதுதான் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு சிங்கம் வந்து மானைக் கொன்று தின்றுவிட்டது. இதையெல்லாம் மனிதர்கள் நினைத்துப் பார்ப்பதேயில்லை. விஞ்ஞான சாதனங்களும் உயிர்களின் இறப்புக்கு ஏதேனும் ஒரு வகையில் காரணமாகி விடுகின்றன.

ரிஷீஸ்வர்கள் வகுத்துக் கொடுத்த சட்டத்திட்டங் களின்படி நாம் வாழக் கற்றுக்கொள்ளும்போது, இத்தகைய அகால மரணங்கள் ஏற்படாது. அவர்கள் வகுத்துக்கொடுத்தபடி முதலில் நாம் கல்விதான் கற்க வேண்டும். கல்வி அறிவு பெற்றுவிட்டால், நம் மனத்தில் தெளிவு ஏற்பட்டுவிடும். நல்லவை, கெட்டவை எதுவென்று பகுத்தறியும் மனத் தெளிவு நமக்குக் கிடைக்கும். அந்தக் கல்வியும்கூட அந்தக் கால ரிஷிகள் சொல்லிய முறையில் இருக்க வேண்டும். அந்தக் கல்வியே சாசுவதமானது.
மற்றபடி புதுப்புது விஞ்ஞானக் கருத்துகளும் மருத்துவம் சார்ந்த கருத்துகளும் சாசுவதம் இல்லாதவை. இன்றைக்கு இருப்பது நாளைக்கு மாறிவிடும். ரிஷிகளின் தத்துவங்கள்தாம் காலத்துக் கும் நிலைத்திருப்பவை.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், ரிஷிகள் முதல் உபதேசமாகக் கல்வி கற்கவேண்டும் என்று சொல்லியிருக் கிறார்கள்.
கல்வியைக் கற்றுக்கொண்டால் எல்லோரு டனும் சேர்ந்து வாழக்கூடிய மனப்பாங்கு மனிதனுக்கு வந்துவிடும். காம, குரோத, மத, மாத்சர்யங்கள் இல்லாத தெளிவான மனம் அவனுக்கு ஏற்பட்டுவிடும். இப்படி எல்லா மனிதர்களுக்கும் ஏற்பட்டுவிட்டால் சமுதாயமே சொர்க்கமாகிவிடும்.
- தொடரும்...