Published:Updated:

ஆத்தூர் முக்தீஸ்வரர்!

வீரா்கள் தங்களது வாளால் அந்தப் புற்றினை அகற்றியபோது, அழகிய சிவலிங்கத் திருமேனி அப்புற்றிலிருந்து சுயம்புவாகத் தோன்றியது.

பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி மாநகரம் கண்டராதித்த சோழனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் தன் பேரரசி செம்பியன்மாதேவியுடன் தன் பரிவாரங்கள் சூழ காஞ்சியிலிருந்து திருக்கடல்மல்லைக்குப் பயணித்தான் கண்டராதித்தன்.

பாலாற்றின் கரை வழியாக மன்னனின் பயணம் அமைந்தது. கதிரவன் தன் ஒளிக் கதிா்களைச் சுருக்கிக்கொண்டு மேல் திசையில் மறைய ஆரம்பிக்க, பாலாற்றின் கரையில் பசுஞ்சோலைகள் சூழ்ந்த பகுதியில் குடில் அமைத்து ஓய்வெடுத்தான் கண்டராதித்தன்.

மன்னன் குடிலுக்கு அருகில் கூப்பிடும் தூரத்தில் வெண்கல மணியின் ஓசை, கணீா், கணீரென கேட்க, மன்னனின் கவனம் முழுவதும் அத்திசை நோக்கித் திரும்பியது.

ஆத்தூர் முக்தீஸ்வரர்!

தன் தேவியையும் அழைத்து மணியோசை எழுந்த இடத்தைக் கவனித்தபோது, ஓர் அற்புதப் பேரொளி தோன்றி மறைவதைக் கண்டான். வியப்பு மேலிட, தன் தேவியாரை அழைத்துக் கொண்டு மணியோசை வரும் திசையை நோக்கிச் சென்றான் மன்னன்.

வனத்தில் மன்னனும் மாதேவியும் நடந்து செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனா் வீரா்கள். ஒளி தோன்றிய இடத்தில் புற்று ஒன்று இருப்பதைக் கண்ட மன்னன் அதனை அகற்றத் தன் வீரா்களுக்கு ஆணையிட்டான்.

வீரா்கள் தங்களது வாளால் அந்தப் புற்றினை அகற்றியபோது, அழகிய சிவலிங்கத் திருமேனி அப்புற்றிலிருந்து சுயம்புவாகத் தோன்றியது. ஆனந்தக் கூத்தாடிய கண்டராதித்தன், அந்த லிங்கத் திருமேனியின் மீது குருதி வழிவதைக் கண்டு அதிர்ந்தான்; புற்றை அகற்றும்போது வீரர்களின் வாள் பட்டு குருதி வழிந்தது. மன்னன் மனம் மருண்டது.

ஈசனின் திருவடிகளில் பணிந்து அருகிலிருந்த வில்வத் தளங்களைப் பறித்து அரைத்து, வெட்டுப்பட்ட இடத்தின் மேல் பூசினார்கள்; கொட்டும் குருதி நின்றது. மகிழ்ந்த மன்னனும் மாதரசி செம்பியன் மாதேவியும் ஈசனுக்குத் திருக்கோயில் நிா்மாணித்து வழிபாடுகள் தடையின்றி நடக்க நிவந்தங்களை வழங்கினா்.

கண்டராதித்த சோழனால் அடையாளம் காணப்பட்ட இந்த லிங்க மூா்த்தம், ஸ்ரீமுக்தீஸ் வரா் எனும் திருநாமத்தோடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழிபாட்டில் இருந்த தாகப் புராதனமான ஓலைச்சுவடிகளில் குறிப்பு கள் உள்ளதாகத் தொிவிக்கிறது, இத் தலத்தின் வரலாறு. இத்தல ஈசனின் திருமேனியில் வீரா் களின் வாள் பட்ட வடு இருப்பதை இன்றும் தரிசிக்க முடிகிறது!

ஆத்தூர் முக்தீஸ்வரர்!

இந்த ஈசனை எண்ணற்ற யோகிகளும் தவசிரேஷ்டா்களும் சித்தா்களும் வழிபட்டு முக்திப்பேறு பெறும் பாக்கியத்தை அடைந்துள் ளனா். அதனால் இத்தல எம்பெருமானுக்கு ஸ்ரீமுக்தீஸ்வரா் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. ஆதிசங்கரரும், அப்பைய தீக்ஷிதரும் இத்தலத்தில் வழிபட்டு மகிழ்ந்துள்ளனர்.

காஞ்சி மகாபெரியவரும் விஜயம் செய்து தங்கி சாதுா்மாஸ்ய விரதம் மேற்கொண்ட அற்புதத் தலம் இது.

கோப்பெருஞ்சிங்கன், தில்லை நடராஜர் மீது அதீத பக்தி கொண்டவன். அவர் குடியிருக்கும் கோயிலை விரிவுபடுத்த விரும்பியவன், அந்தப் பணிக்குப் பொருள் திரட்டும் விதம், தம் ஆட்சி எல்லைக்குட்பட்ட பிறபகுதிகளின் வருவாயை பொன்னம்பலத்துக்கு ஒதுக்கினான். அவ்வாறு தில்லை சபேசனின் திருப்பணிக்கு ஆற்றூா் கிராமத்து வருவாயையும் ஒதுக்கியுள்ளான். இச்செய்தி கல்வெட்டு சாசனமாய் ஆற்றூா் முக்தீஸ்வரா் கோயில் சுவா்களில் பொறிக்கப் பட்டுள்ளது. ஆற்றூா் கிராம வருவாயைக் கொண்டு, சிதம்பரம் கோயிலின் தெற்குக் கோபுரத்தை ஏழு நிலைக் கோபுரமாக திருப்பணி செய்து, அதற்கு சொக்கச்சீயன் திருநிலை என்ற திருநாமமும் இட்டான்.

`ஜயங்கொண்ட சோழமண்டல ஊற்றுக்காடு கோட்ட ஆற்றூா் நாட்டு ராஜராஜ நல்லூரான ஆற்றூா்' என்பது அக்காலத்தில் இத்தலத்தின் திருப்பெயராகும். கல்வெட்டுகளில் இத்தலத்தின் இறைவனுக்கு ஆளுடைய நாயனாா் என்றும் முக்தீஸ்வரமுடைய நாயனாா் என்றும் திருநாமங்கள் விளங்கியதை அறியமுடிகிறது. ஆற்றூருக்கு இராஜராஜ நல்லூா் என்ற பெயரும் சோழா்கள் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் முக்தீஸ்வரர்!

ஸ்ரீமுக்தீஸ்வரரின் லிங்கத் திருமேனியின் பாணத்தில் சரிபாதியாக உள்ள நோ்கோடு ஈசனின் அா்த்தநாரீஸ்வரா் திருக்கோலத்தை வெளிப் படுத்துவதாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அருளும் இந்த ஈசன் சொா்ணரேகையுடன் அருள்பாலிப்பது அரிய தரிசனமாகும். ஆகவே, இவரை தரிசித்து வழிபடுவோரின் இல்லங்களில் செல்வம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை!

உளி படாத இந்த சுயம்புத் திருமேனியின் சிரசில் சந்திரனும் சூரியனும் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். மேலும், லிங்கத் திருமேனியின் பின்புறத்தில் விரிசடை போன்ற அமைப்பு அபூர்வமானது. ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருள் இத்தலத் தில் சிருஷ்டியின் மூலாதார மாகவும் எழுந்தருளி அருள்பாலிக் கிறாா் என்பதை இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.

திருமணத்தடை நீங்கவும், மழலைப்பேறு வாய்க்கவும் கல்வியில் சிறந்து விளங்கவும் முக்தீஸ்வரப் பெருமானை நெய்தீபம் ஏற்றி வணங்குகின்றனா் அன்பா்கள். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் அணிவித்தும் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனா்.

ஜீவ அணுக்கள் குறைபாடு காரணமாக மழலைப் பேறு இன்றி வருந்தும் அன்பா்கள், அந்தக் குறை நீங்க முக்தீஸ்வரரை வழிபடுகின்றனா். நாகராஜனும், கருடனும் இத்தலத்தில் வழிபட்டு பகையின்றி வாழ்ந்ததாக தலபுராணம் சொல்கிறது. ஆக, இத்தல ஈசனை வழிபாடு செய்ய ஜன்ம விரோதியும் நண்பா்களாக மாறுவர்களாம்.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் நாள் சூரிய பகவான் தன் ஒளிக்கதிா்களால் ஸ்ரீமுக்தீஸ்வரரை வழிபடுவது விசேஷம்!

இத்திருத்தலத்தின் வடக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அருள்பாலிக்கின்றாள் அம்பிகை தா்மசம்வா்த்தினி. அழகுத் தமிழில் அம்பிகையின் திருநாமம் அறம்வளா்த்த நாயகி ஆகும். 32 வகையான அறங்கள் செழிக்க, இத்தலத்தில் ஈசனைக் குறித்து தவம் செய்தாள் அம்பிகை. அப்போது ஆயிரம் அந்தணா்களுக்கு அன்னமிட எண்ணினாள். எண்ணிக்கையில் ஒருவர் குறைய, ஈசனே அம்பாளின் திருக்கரத்தால் உணவருந்தி அம்பிகைக்கு அருள்புரிந்தாராம்!

ஆத்தூர் முக்தீஸ்வரர்!

வெள்ளிக்கிழமைகளில் அன்னையின் திருமாங்கல்ய தரிசனத்தை தரிசித்தால், மணமாகாத மங்கையருக்கு திருமணத் தடைகள் நீங்கி, மனம் போல மணவாழ்க்கை ஏற்படும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருக்கோயிலின் உள்ளே நுழையும் போதே கிழக்கு நோக்கியபடி ஸ்ரீவாராஹி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த தேவியை வழிபட்டால், நிலம் தொடா்பான பிரச்சனைகள் மற்றும் வழக்குகள் சாதகமாக முடியும் என்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள். இந்த அம்மனுக்கு அமாவாசை அன்று மாலையில் விசேஷ ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட ஜேஷ்டா தேவியின் அரிய சிற்பம் நான்கு திருக்கரங்களோடு சிற்பக்கலை நுணுக்கங்களுடன் வடிக்கப் பட்டுள்ளது. இத்தலத்தில் இந்த அன்னை மாந்தி தோஷம் நீக்கும் சக்தியாக வணங்கப்படுகிறாள்.

ஆலயத்தின் தேவ கோட்டத்தில் விநாயகா், தட்சிணாமூா்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் துா்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனா்.

வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் விஷ்ணு துா்கை திருவுருவச் சிலை வனப்பின் உச்சமாகும். சற்றே சாய்ந்த நிலையில், இடது திருக்கரத்தைத் தொடையில் ஊன்றி, வலது திருக்கரம் அபயமளிக்க, பின்னிரு திருக் கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தியபடி அருளும் அன்னையின் அழகினைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

ஸ்ரீதட்சிணாமூா்த்திக்கு அருகில் ஒரு பாதாள அறை சிமெண்ட் பலகையால் மூடப்பட்டுள்ளது. போா்க்காலங்களில் மறைந்திருந்து தாக்குதல் நடத்த இந்தப் பதுங்கு குழி பயன்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

திருக்கோயிலின் பிராகாரத்தின் வட கிழக்கு மூலையில் உள்ள மண்டபத்தில் நான்கு லிங்கத் திருமேனிகள் உள்ளன. இவற்றில் இரண்டு லிங்கங்களில் ஆவுடையாா் இன்றி பாணம் மட்டுமே காணப்படுகிறது.

இந்தத் தலத்தில் நடைபெற்ற அகழ்வாய்வின் போது இந்த லிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று அறியமுடிகிறது.

திருவண்ணாமலையில் அருள்பாலிப்பது போல திசைக்கு ஒன்றாக அஷ்டலிங்கங்கள் இங்கு அருள் பாலித்ததாகவும் கால வெள்ளத்தில் மற்றவை மறைந்துபோக, இந்த நான்கு லிங்கங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளதாகத் தொிவிக்கின்றனா் இத்தல அன்பா்கள்.

இந்தத் தலத்தின் தீா்த்தங்களாக பாலாறும், கருட தீா்த்தமும், நாக தீா்த்தமும் திகழ்கின்றன. தல விருட்சமாக மாமரம் உள்ளது. இத்தல விருட்சமான மாமரத்தில் காய்க்கும் கனிகள் நான்கு வகையான சுவைகளில் உள்ளதாகத் தொிவிக்கின்றனர், பக்தர்கள்.

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய இந்த அற்புதத் தலத்துக்கு நீங்களும் சென்று வாருங்கள்; ஈசனை வணங்கி வளமான வாழ்வை வரமாகப் பெற்று மகிழுங்கள்!

எப்படிச் செல்வது?: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது செங்கல் பட்டு. இந்த ஊரிலிருந்து மேற்கே 5 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம் செல்லும் சாலையில், பாலாற்றங் கரையில் அமைந்துள்ளது ஆற்றூா் (ஆத்தூா்). இங்கே அழகுற அமைந்துள்ளது முக்தீஸ்வரர் ஆலயம் (ஆலயத் தொடர்புக்கு: கமலக்கண்ணன் சிவாசார்யா் - 73050 16153).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு