Published:Updated:

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தரும் ஆயிரங்காளி அம்மன்!

ஆயிரங்காளி அம்மன்!
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரங்காளி அம்மன்!

ஆயிரங்காளி அம்மன்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தரும் ஆயிரங்காளி அம்மன்!

ஆயிரங்காளி அம்மன்!

Published:Updated:
ஆயிரங்காளி அம்மன்!
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரங்காளி அம்மன்!

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருமலைராயன் பட்டினம். இந்தப் பகுதி மக்கள் வரும் ஜூன் மாதம் நிகழவுள்ள அபூர்வமான ஓர் அற்புத தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். ஆம்! அவர்களின் கண்கண்ட தெய்வமாம் ஆயிரங்காளியம்மன் 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு தரிசனம் தரப் போகிறாள்.

ஆயிரங்காளி அம்மன்!
ஆயிரங்காளி அம்மன்!


``அம்மன்பெட்டிக்குள் உறைந்திருக்கும் இந்த அன்னை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை 3 தினங்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருவாள். தங்களின் தாயைக் காணக் காத்திருக்கும் பக்தர்கள் யாவரும் `அம்மா... தாயே.. சரணம்’ என விண்ணதிர முழக்கம் செய்ய, ஊரெங்கும் அதிர்வேட்டுகள் ஒலிக்க அம்மன் பெட்டி திறக்கப்படும்.

தொடர்ந்து வெகுநேரம் அலங்காரம் நிகழும். பின்னர் ஏழு திரைகளில் முதலில் ஆறும் பின்னர் ஒன்றுமாய் விலக்கப்பட கருணை நாயகியாய் தன் பிள்ளைகளுக்குக் காட்சி தருவாள் காளியம்மன். அன்றைய தினம் பழங்கள், பதார்த்தங்கள் என நைவேத்தியங்கள் அனைத்தும் ஆயிரம் ஆயிரமாய் அம்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும். ஆகவேதான் எங்கள் அம்மாவுக்கு ஆயிரங்காளியம்மன் என்று பெயர்’’ என்று உள்ளம் சிலிர்க்கப் பகிர்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

அற்புதம்தான்! சரி, ஆயிரங்காளியம்மன் பெட்டிக்குள் உறைவது ஏன், அவளுக்குப் படைக்கும் பொருள்கள் எல்லாம் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அமைந்தது ஏன்?

காவிரியின் கிளை நதியான திருமலைராயன் ஆறு கடலோடு கலக்கும் இடம் திருமலைராயன்பட்டினம். ஒருகாலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னன் திருமலைராயன், இவ்வூரைத் தனடு தலைநகராக்கி ஆட்சி செய்தாராம். ஆகவே, அவரின் பெயராலேயெ திருமலைராயன் பட்டினம் என்று வழங்கப்படுகிறது இவ்வூர்.

முற்காலத்தில் இங்கே 108 கோயில்களும் 108 குளங்களும் இருந்ததாக வரலாறு. அவற்றில் நடுநாயகமாக ஆயிரங்காளியம்மன் கோயில் அமைந்திருந்ததாம். இந்த அம்மன் இங்கே குடிகொண்டது எப்படி?

வங்காள தேசத்தில் காளிதேவியை முழுமுதற் தெய்வமாக வழிபடும் வழக்கம் உண்டு. பலநூறு வருடங்களுக்கு முன் வங்காளப் பகுதியை ஆண்ட மன்னன் ஒருவன் காளிதேவியின் பக்தனாக விளங்கினான். அவளின் அருளை வேண்டி பன்னெடுங்காலம் தவம் செய்தான். அதன் பலனாக அன்னையின் தரிசனம் கிடைத்தது.

அவன் முன் தோன்றிய காளிதேவி, ``மகனே! தவத்தைக் கைவிடுக. நான் பெட்டி ஒன்றில் எழுந்தருள்வேன். அதனைத் திறந்து என்னை வெளியில் எடுத்து, அளவில்லாத நைவேத்தியங்கள் படைத்து வழிபடு. விரைவில் உன் வேண்டுதல்கள் நிறைவேறும்’’ என்று அருள் பாலித்தாள்.

அன்னை சொன்னபடியே பெட்டி ஒன்று தோன்றியது. அதனைத் திறந்து பார்த்தவன் சிலிர்த்துப்போனான். பிறவித் துன்பம் தீர்க்கும் திருவடிகளும், வேலனுக்கு வேல் வழங்கிய திருக்கரங்களும், உலகைக் காக்கும் கருணையுடன் கூடிய திருமுகமுமாக அம்மனின் விக்கிரகத் திருமேனி காட்சி தந்தது. பயபக்தியுடன் அம்மனை வணங்கிய மன்னன், அந்தப் பெட்டியை அரண்மனைக்குக் கொண்டு சென்றான். அம்மனின் கட்டளைப்படியே மலர்கள் ஆயிரம், மாலைகள் ஆயிரம், அர்ச்சனைப் பொருட்கள் ஆயிரம், நைவேத்தியங்கள் ஆயிரம் என அனைத்தையும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் சமர்ப்பித்து, மனமுருகி வழிபட்டான்.

அன்னை மகிழ்ந்தாள். விரைவில் மீண்டும் அவனுக்குக் காட்சி தந்தாள். அவன் வேண்டுதல்களை நிறைவேற வரம் தந்தாள். அத்துடன், ``மகனே! உன் வழிபாடு பூர்த்தியாகிவிட்டது. என் அம்சமாக விளங்கும் இந்தத் திருவுருவைப் பெட்டியில் வைத்து கடலில் விட்டுவிடு. உனக்கு விரைவில் வீடுப்பேறு வாய்க்கும்’’ என்று ஆணையிட்டு மறைந்தாள்.

அதன்படி அம்மனின் திருவுருவைப் பெட்டியில் நிலைப்படுத்தி, ஓர் ஓலைக்குறிப்பு ஒன்றையும் வைத்து, பெட்டியை நன்கு மூடி கடலில் விட்டான் மன்னன். அந்தப் பெட்டி கடலில் மிதந்தது. மெள்ள மெள்ள நகர்ந்து திருமலைராயன்பட்டினத்துக்குக் கிழக்கே வங்கக் கடலில் நிலைகொண்டது. மீனவர்கள் பலரும் அம்மன் பெட்டியைப் பொக்கிஷம் - புதையல் என்று எண்ணினார்கள்.

பொக்கிஷம்தான்... தேவாதிதேவர்களும் மகரிஷிகளும் முனிவர்களும் தவமாய் தவமிருந்து தரிசிக்கக் காத்திருக்கும் பெரும் புதையல்தான் பெட்டியில் இருப்பது என்பதை அவர்கள் அறியவில்லை. படகுடன் நெருங்கினார்கள்; வலை வீசினார்கள்... ஆனால் அம்மன் பெட்டி அகப்படவில்லை.

இந்த நிலையில் அவ்வூரில் வசித்த செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த - வயதில் மூத்த சிவத்தொண்டர் ஒருவரின் கனவில் தோன்றினாள் காளியம்மன். `நான் மூன்று நாட்கள் கடலில் இருந்துவிட்டேன். இனி என்னைக் கரைக்குக் கொண்டு வந்து ஊரில் நிலைநிறுத்தி வழிபட ஏற்பாடுகள் செய். என்னை வழிபடும் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புறுவார்கள்!’ என்று அருளினாள்.

திடுக்கிட்டு விழித்தார் சிவத்தொண்டர். விடிந்ததும் அடியார்கள் அன்பர்கள் பலரையும் அழைத்துக் கனவு விஷயத்தைப் பகிர்ந்தார். அனைவரும் நீராடி, புத்தாடை உடுத்தி, மங்கல வாத்தியங்களுடனும் அம்மனை ஊருக்குள் அழைத்துவர முத்துப்பல்லக்குடனும் கடற்கரைக்குப் புறப்பட்டனர். கடற்பரப்பில் அம்மன் பெட்டி மிதப்பதைக் கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். மெள்ள கரை சேர்ந்த பெட்டி, சிவத்தொண்டரின் கையில் வந்து சேர்ந்தது. எல்லோரும் வணங்கினார்கள்.

சங்கநாதம் முழங்க, மத்தளம் கொட்டி, வேதமுழக்கத்துடன் அம்மன் பெட்டியைப் பல்லக்கில் ஏற்றினர். மக்கள் மலர்மாரிப் பொழிந்தனர். அருள்மிகு அபிராமி சமேத ராஜ சோழீஸ்வரர் கோயிலுக்கு அருகே கீழ்வீதியில் ஈசான்ய பக்கத்தில் உள்ள மடத்துக்குக் கொண்டுவரப்பட்டது அம்மன் பெட்டி.

சிவத்தொண்டர் வேதநெறிப்படி பெட்டியிலிருந்து அம்மனை எடுத்து மணி பீடத்தில் எழுந்தருளச் செய்தார். அப்போது பெட்டியில் இருந்த ஓலைக் குறிப்பைக் கண்டார்.

`அருள்மிகு ஆயிரங்காளியம்மன் இருளை நீக்கி இன்பம் அளிப்பவள். அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும் எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும். ஆண்டுகள் ஐந்திற்கொருமுறை திண்ணமாய்ப் பூசித்து திருவெலாம் பெறுகவே’ என்று தகவல் சொன்னது ஓலைக்குறிப்பு. அதன்படியே காளியம்மனுக்கு ஆயிரம் ஆயிரமாக பலவகை பண்டங்களையும் பழங்களையும் நெய்வேத்தியமாக படைத்தனர். அன்று முதல் இன்று வரையிலும் ஆயிரங்காளியம்மனுக்கு ஆயிரம் ஆயிரமாக பொருள்களைச் சமர்ப்பித்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது!

ஆயிரங்காளி அம்மன்
ஆயிரங்காளி அம்மன்

கோயிலில் பூஜித்து வரும் நடனபாத குருக்களிடம் பேசினோம். “ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறையில், திங்கள்கிழமை நல்லோரையில், இரவு 10 மணிக்கு மேல் அம்மன் பெட்டியைத் திறப்பதற்காக காளியம்மன் மடத்துக்கு அருளாளர்கள் செல்வார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் ஒருமண்டல காலம் கடும் விரதம் கடைப்பிடிப்பார்கள்.

காளியம்மன் மடத்தில் கர்ப்பக்கிரகத்துக்குள் பயபக்தியுடன் செல்லும் அருளாளர்கள், பெட்டி இருக்கும் காளியம்மனை எடுத்து வெளியில் உள்ளோர் எவரும் காண முடியாதபடி 7 திரைகள் இட்டு மறைத்துவிடுவார்கள். அவர்கள் பெட்டியின் பூட்டைத் திறக்கும் போது அம்மனின் சிலம்பொலி கேட்குமாம். இவர்களும் பயபக்தியுடன் `தாயே... தாயே...’ என முழங்குவார்கள். அவர்களின் இந்த முழக்கத்தைச் செவிமடுத்ததும் வெளியில் உள்ளோரும் விண்ணதிர எதிர்முழக்கம் செய்வார்கள். அந்த நேரத்தில் அதிர்வேட்டுகள் தொடர்ந்து முழங்கும். அன்னையை தரிசிக்கும் ஆவலில் மக்கள் வெள்ளம் மடத்தை நோக்கி வரும்!

பெட்டிக்குள் அம்மனைச் சுற்றிலும் மஞ்சள் குவிந்திருக்கும். அவள் அருகில் ஐந்து ஆண்டுகளுக்குமுன் வைக்கப்பட்ட எலுமிச்சை வாடாமல் வதங்காமல் அப்படியே இருப்பது, கலியுக அதிசயம்தான். அம்மனை வெளியில் எடுத்தபிறகு பலமணி நேரம் அலங்காரம் நிகழும். அது நிறைவுற்றதும் 6 திரைகளை அகற்றிவிடுவார்கள். ஒரு திரை மட்டும் மூடப்பட்டிருக்கும்.

காளியம்மன்
காளியம்மன்


செவ்வாய்க்கிழமை அன்று காலையில் முதலியார் சமூகத்துப் பெண்கள், காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானை பெற்றுச் சென்று, வீட்டில் பொங்கலிட்டு எடுத்து வந்து, மடத்தில் அம்மனுக்கு விடிய விடிய தளியல் போடுவார்கள். அன்று மாலை 6 மணியளவில், திருக்கோயிலில் இருந்து காளியம்மனுக்கு வெகு விமரிசையாக வரிசைப் பொருள்கள் வரும். அவை அனைத்தும் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும். அவற்றை அம்மனுக்குப் படையலிடுவர். தொடர்ந்து, நடராஜர் சந்நிதியில் அம்பாள் திருவடிகளுக்கு அபிஷேகம் செய்வார்கள். தொடர்ந்து திரைநீங்கும் - தீபாராதனை முடிந்ததும் சகலருக்கும் அம்மன் காட்சி தருவாள்.

அந்த அற்புத தரிசனத்துக்காகவே காத்திருக்கும் மக்கள் எல்லாம் உள்ளம் உருக அன்னை வழிபட்டு மகிழ்வார்கள். அதேநேரம், `இனி ஐந்து வருடங்கள் கழித்தல்லவா அம்மையை தரிசிக்க முடியும்' எனும் தவிப்பையும் அவர்களின் முகத்தில் காணலாம். கடலில் மிதந்து வந்த காளி அல்லவா இவள்! ஆகவே சமுத்திரத்தை நம்பி வாழும் மீனவ மக்கள் இந்தக் காளியம்மனைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், ஆயிரம் எண்ணிக்கையில் பொருள்களைக் கொண்டு வந்து அம்மனுக்குச் சமர்ப்பித்து, ஆராதித்து வழிபடுகிறார்கள். வரும் ஜூன் 6-ம் தேதியன்று அன்னை வெளியே வருகிறாள். ஜூன் 8, 9-ம் தேதிகளில் அனைவரும் அம்மனை தரிசித்து அருள் பெறலாம்’’ என்றார் நடனபாத குருக்கள்.

இந்தப் பெரும்பேற்றினை நாம் எல்லோரும் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். ஆயிரங்காளியம்மனை ஒருமுறை தரிசித்தால் போதும்; நம் துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடும். நம் பிரார்த்தனைகள் எல்லாம் விரைவில் நல்லபடியே நிறைவேறும்!

கடவுளை நிரூபிக்க முடியுமா?

ஜென் துறவி ஒருவரிடம் அவரின் சீடன் ‘‘விவாதம், வாய் வார்த்தைகளால் கடவுளை நிரூபிக்க இயலுமா?'' எனக் கேட்டான்.

‘‘முடியாது! பார்வையற்ற ஒருவரிடம் நிழல் என்றால் என்னவென்று விளக்க முயற்சி செய்வது போன்ற வேலை அது’’ என்றார் குரு.

சீடரோ புரியாமல் விழித்தார். துறவி விளக்கினார்: ‘‘பார்வையற்றவர் வெளிச்சத்தையே பார்த்திராதவர். எனவே, அவருக்கு ஒளி என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியிருக்க, ஒளி உருவாக்கும் நிழலைப் பற்றி அவரிடம் எப்படி விளக்குவது?

அப்படித்தான் கடவுளின் படைப்பையே வார்த்தைகளால் விளக்கி விவரிக்க முடியாது என்றால், அதைப் படைத்த கடவுளை எப்படி விவாதத்தால், வார்த்தைகளால் அறிய முடியும்?’’

சீடன் தெளிந்தான்!

- பிருந்தா, மதுரை-20

கற்றுக் கொண்டால் தெரியும்!'

பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். `விரதங்கள் ஏன் தெரியுமா?' எனக் கேட்டார். `தெரியாது' என்றேன். அவர் அதுபற்றிய விளக்கத்தைச் சொன்னதுடன், ஓர் அறிவுரையும் சொன்னார்:

``எதையும் தெரியாது எனச் சொல்லக் கூடாது. புலவர் ஒருவர் போட்டிக்குச் சென்றபோது, ‘போட்டியின் நிபந்தனை தெரியுமா?’ என்று ஒருவர் கேட்க, ‘தெரியாது’ என்று பதிலளித்தால் அது தோற்றதாக ஆகிவிடும் எனக் கருதி, ‘சொன்னால் தெரியும்!’ என்று பதில் கூறினாராம்.

இதைப் போலவே ஒருவர் நம்மிடம் ‘ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்டால் ‘படித்தால் தெரியும்!’ என்றும் ‘கார் ஓட்டத் தெரியுமா?’ எனக் கேட்டால், ‘கற்றுக் கொண்டால் தெரியும்’ என்றும் பதிலளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இது நமக்குள் நேர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையையும் விதைக்கும்!''

- எம்.மல்லிகா, திருப்பூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism