ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ஆழிமலை ஆண்டவன் - கேரள தரிசனம்

ஆழிமலை ஆண்டவன் - கேரள தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆழிமலை ஆண்டவன் - கேரள தரிசனம்

ஆழிமலை ஆண்டவன் - கேரள தரிசனம்

அடிமுடி காண முடியாதபடி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்று பேருரு காட்டிய பரம்பொருள் சிவம். பெரும்பாலான தலங்களில் லிங்கத் திருமேனியராகவே அருளும் சிவபெருமான், சிற்சில தலங்களில் உருவத் திருமேனியராய் அருளோச்சுகிறார். அவற்றில் ஒன்றுதான், கேரள மாநிலம் - திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆழிமலை. கேரளத்துச் சிவாலயங்களில் மிகப்பெரிய சிலை அமையப்பெற்ற தலம் இது.

‘ஆழி’ என்றால் கடல். அரபிக்கடலை ஒட்டி அமைந்த மலையின் மீது அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு ‘ஆழிமலை’ என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். கடற்கரையை ஒட்டி இயற்கையாக அமைந்த 20 அடி உயர குன்றின்மீது அமைந்திருக்கிறது இந்த ஆலயம். கடல், குன்று, தென்னந்தோப்பு... என மிக ரம்மியமாகத் திகழ்கின்றன, இந்த ஆலயமும் சுற்றுப்புறமும்.

ஆழிமலை ஆண்டவர்
ஆழிமலை ஆண்டவர்

குன்றின் மீது சுமார் 58 அடி உயரத்துடன் கம்பீரமாகத் திகழ்கிறது சிவபெருமானின் சிலை. இந்தச் சிலையை வடிக்க 6 ஆண்டுகள் ஆயினவாம். சிற்பக்கலைஞர் தேவதத்தா தலைமையிலான குழுவினர், கான்கிரீட் கட்டமைப்பாக, கடலின் உப்புக்காற்றால் பாதிக்காதபடி இந்தச் சிலையை அமைத்துள்ளனர்.

சிவபெருமானின் திருமுகம் விண்ணை நோக்கியபடி வடிக்கப் பட்டிருக்கிறது. ஆகாயத்தின் நீலவண்ணம் பின்னணியில் திகழ, சிவபெருமான் இளஞ்சாம்பல் வண்ண மேனியராய் கம்பீரக் கோலம் காட்டுகிறார்.

சூலப்படை, வெண்மதி, நாகாபரணங்கள், ருத்ராட்ச ஆரங்கள், மேனியின் கட்டுறுதி, விரல்கள், நகங்கள் ஆகிய ஒவ்வொன்றும் தத்ரூபமாகத் திகழ்கின்றன. நான்கு திருக்கரங்களுடன் அருள் தரும் சிவனார், இரு கரங்களில் சூலமும் உடுக்கையும் ஏந்தியுள்ளார். மேலும் வலது தொடையின்மீது ஒரு கரத்தை வைத்து, மற்றொரு கரத்தால் சடாமுடியைக் கோதிவிடுவது போன்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஆழிமலை ஆண்டவர்
ஆழிமலை ஆண்டவர்

சிரத்தில் திகழும் கங்கை, உருவத் திருமேனியளாகவே அருள்வது சிறப்பு. இத்தலத்துச் சிவனாரை கங்காதேஸ்வரர், சடையப்பர், மகாதேவர் என்றெல்லாம் போற்றித் துதிக்கிறார்கள் பக்தர்கள். கோயில் வளாகத்தில் மகா கணபதி, மகாதேவர், பார்வதிதேவி ஆகியோரின் சந்நிதிகளும் உண்டு.

பாற்கடல் கடையும் புராணக் காட்சியும் சிற்பத் தொகுப்பாய் திகழ்கிறது. தனிச் சந்நிதியில் அருளும் சிவனாருக்கே தினப்படி அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நிகழ்கின்றன. விசேஷ காலங்களில் சங்காபிஷேகம், ருத்ராபிஷேகம், பக்தர்களின் ஆயுள் விருத்திக்காகச் செய்யப்படும் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகியவையும் நடைபெறுமாம். பக்தர்கள் துலாபாரம் செலுத்தியும் வழிபடுகின்றனர்.

ஆழிமலை ஆண்டவர்
ஆழிமலை ஆண்டவர்

தை மாதம் பெருந்திருவிழா நடைபெறுகிறது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கே எலுமிச்சை தீபங்கள் ஏற்றி வழிபடும் வைபவம் விசேஷமாக நடைபெறுமாம்!

திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். கார் அல்லது ஆட்டோவில் செல்லலாம். கேரளத்தில் பிரபலமான கடற்கரைச் சுற்றுலாத் தலமான கோவளம், இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவ தரிசனத் தோடு கடற்கரைக்கும் சென்றும் ரசிக்கலாம்.