
ஐயனின் அறுபடை வீடுகள் - 2 - அச்சன்கோவில் - வெ. அரவிந்த் சுப்ரமண்யம்
அச்சன்கோவில் கேரளக் காட்டுக்குள் அமைந்திருந்தாலும் தமிழ் நாட்டு எல்லைக்குள் உள்ள பாதைகள் வழியேதான் செல்ல முடியும். வழிநெடுக பல நூற்றாண்டுககளைக் கண்ட நெடிதுயர்ந்த மரங்கள், இடையிடையே ஓடும் சிற்றாறுகள் என அச்சன்கோவிலுக்குச் செல்வோருக்குக் காலத்தை வென்று பின்னோக்கிப் பயணப் பட்டது போன்ற பிரமை ஏற்படும்.
இந்த ஆலயத்தில் பகவானின் பெயர் மணிகண்ட முத்தய்யன். பூர்ணா, புஷ்கலா தேவியர் இருபுறமும் நின்று பணி செய்ய, நடுவே அச்சன்கோவில் அரசன் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறான். ஆதியில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூல விக்ரஹமே இன்றும் வழிபாட்டில் உள்ளது (இங்கு மட்டுமே) இத்தலத்தின் சிறப்பம்சம்.
இங்கும் ஆலயத்தை அடைவதற்குக் கல்லால் ஆன பதினெட்டுப் படிகள் உண்டு. ஆனால் சபரிமலை போல் இங்கு இருமுடி செலுத்தும் வழக்கமோ, படிபூஜை செய்யும் வழக்கமோ இல்லை. எனினும், பக்தர்கள் சிலர் இங்குள்ள 18 படிக்கட்டுகளில் விளக்கேற் றுவதும் மலர் அலங்காரம் செய்வதும் உண்டு.
இங்கே சாஸ்தா சச்சிதானந்த மூர்த்தி. அவர் முன்னே வணங்கி நிற்கும் பக்தர்களுக்கும் அந்த ஆனந்தம் வந்து விடுகிறது. மூலஸ்தானத்தின் எதிரே சுமார் 300 மீட்டர் தாண்டி, இறக்கத்தில் தனியொரு கோயிலில் பகவானின் பரிவார கணங்கள் அனைவரும் குடிகொண்டுள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவனாக கருப்பர் வீற்றிருக்கிறார்.
சாஸ்தாவின் பரிவார கணங்களில் முக்கியமானவர் கருப்ப சுவாமி. சபரிமலையிலும் பதினெட்டுப் படிகளின் காவலனாக இவரே இருக்கிறார். இந்த அச்சன்கோவில் அரசனைக் குறித்தும் கருப்பரைக் குறித்தும் ஒரு சுவையான சரிதம் உண்டு.

ஆன்மிக வாழ்வில் முன்னேறும் ஸாதகன், எப்போதும் கடவுளை ஒரு ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுதல் வேண்டும். பக்தர்களின் தவறுகளை ஆண்டவன் பொறுத்துக்கொள்வார். ஆனால் அவரின் அடியவர்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் - பாவூர்சத்திரம் என்ற ஊரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் சாஸ்தாவின் தீவிர பக்தராகத் திகழ்ந்தார். குறிப்பாக அச்சன்கோவில் அரசனிடம் சொல்ல முடியாத பக்தி அவருக்கு.
அவருக்கு நெடுநாள்களாக ஓர் ஆசை இருந்தது. தேவாதி தேவரெல்லாம் பணிசெய்ய, காந்த மலையில் பொன்னம்பலத்தில் கோயில் கொண்டுள்ள கோமகனை அங்கு சென்று தரிசிக்கவேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு அச்சன்கோவில் சாஸ்தாவிடம் மன்றாடி வந்தார் பக்தர்.
தனக்காக சாஸ்தாவிடம் பரிந்துரைக்குமாறு கருப்பரையும் வேண்டினார். தூய பக்திக்கு இரங்கும் ஐயன், அந்தணரின் ஏக்கத்தைத் தீர்க்கும் பொருட்டு கருப்பரை அவரிடம் அனுப்பினார். கருப்பர் அந்தணர் முன் தோன்றினார்.

“வேதியரே! உமது கோரிக்கை இன்று முடிவுக்கு வரப்போகிறது. உம்மை ஐயனின் சந்நிதிக்குக் கொண்டு செல்லவே வந்திருக்கிறேன். கண்ணை மூடிக்கொண்டு என்னைத் தொடுங்கள். நான் சொல்லும் வரை கண்ணைத் திறக்கக்கூடாது. நான் உம்மைக் காந்தமலைக்குக் கொண்டு செல்கிறென். ஆனால் ஒரு விஷயம்... காந்தமலையில் பகவானைத் தவிர வேறு எதிலும் உமது கவனம் செல்லக்கூடாது. இது ஓர் எச்சரிக்கை” என்று கூறி அவரது கையைப் பற்றினார் கருப்பர்.
கருப்பர் தன் கையைப் பற்றிக்கொண்டதும் அந்தணர் கண்ணை மூடிக்கொண்டார். மறுகணமே `இனி கண்ணைத் திறக்கலாம்’ என்று கருப்பரின் குரல் கேட்டது.
கண்ணைத் திறந்த அந்தணர், தாம் காந்த மலையில் இருப்பதை அறிந்து வியந்தார். கண்ணைப் பறிக்கும் ரத்ன மாடங்களும், மனத்தை மயக்கும் அலங்காரங்களும் விளங்க, நடுவே தங்கமயமான ஆலயத்தின் பேரொளி தோன்றி எங்கும் பரவியது. அமரர்கள் ஏகாந்தமாய் தொழுது வணங்கி மகிழும் பொன்னம் பலத்தில் பூர்ணா புஷ்கலா சமேதராக கம்பிரமாக வீற்றிருந்தார் ஐயன். தேஜோவதியாய் விளங்கும் - பொன்னொளி பிரகாசிக்கும் சாஸ்தாவின் சபையில், தன்னை மறந்து தொழுது நின்ற அந்தணர், சிறிது நேரம் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னிலைக்கு வந்தார். தனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அவரின் அந்த மகிழ்ச்சி கொஞ்சம் பெருமையாகி, பெருமை கர்வமாக வளர்ந்தது; எதிரில் பகவான் இருப்பதையும் மறந்தார். எனில், கருப்பரின் எச்சரிக்கையையும் மறந்துவிட்டார் என்பதில் ஆச்சர்யம் இல்லைதான்!

தான் ஐயனைக் கண்டு மகிழ்ந்ததை மற்றவர்கள் நம்பவேண்டுமே என்ற எண்ணத்தில், அங்கிருக்கும் ஏதோ ஒரு பொருளை சாட்சி யாகக் கொண்டு செல்லத் தீர்மானித்தார். அங்கிருந்த தங்க வாள் ஒன்றினைக் கையில் எடுத்தார். மறுகணம், அவர் அந்த வாளுடன் அச்சன்கோவிலில் வந்து விழுந்தார். கருப்பரின் எச்சரிக்கையை மீறிய அந்தணர் பார்வையை இழந்தார். தான் செய்த தவற்றுக்குத் தண்டனையாக அதை ஏற்றுக்கொண்டார் பின்னாளில் அவர் அந்த வாளை அச்சன்கோவில் அரசனிடமே சமர்ப்பித்து விட்டார். சொக்கத் தங்கத்தால் ஆன அந்த வாளின் எடை, இடத்துக்கு இடம் மாறுபடும் என்கிறார்கள். ஆண்டுதோறும் மண்டல பூஜை ரதோத்ஸவத்தின்போது அந்த வாள் கொண்டு வரப்பட்டு பகவானுக்குச் சார்த்தப்படுகிறது.
கேரள தேசத்தின் ஒரு பகுதியை நீதிநெறி தவறாமல் மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சாஸ்தாவின் பாதக் கமலங்களில் பெரும் பக்தி கொண்டு வாழ்ந்த அந்த மன்னன் ஒருமுறை அச்சன்கோவிலுக்கு வந்தான். பயணத்தில் அடர்ந்த கானகத்தில் வழிதவறிப்போனான்.
அப்போது வனத்திலிருந்த யக்ஷிதேவி அவனைத் துரத்த ஆரம்பித்தாள். செய்வதறியாது திகைத்த மன்னன், அச்சன்கோவில் சாஸ்தாவை எண்ணிச் சரண் புகுந்தான். மன்னனின் திட பக்தியால் கவரப்பட்ட ஐயனும், மறுகணமே அங்கே தோன்றினார்.
யக்ஷிதேவியின் முன் சென்று நின்று புன்முறுவல் பூத்தார். அந்தக் கணமே தங்க விலங்கொன்று தோன்றி, யக்ஷியின் காலைக் கட்டிப் போட்டது. அவளும் கொலைவெறி நீங்கி சாந்தம் அடைந்தாள். பகவானிடம் மன்னிப்பு வேண்டினாள்.

“தேவி! இனி நீ என் பரிவாரங்களில் முக்கிய ஸ்தானம் பெற்று விளங்குவாயாக. உன்னை வணங்குவோர் வளமும் நலமும் அடைவர்” என்று வரம் அருளினார் ஐயன். அந்த யக்ஷியை அச்சன்கோவிலின் பின்புறம் தரிசனம் செய்யலாம்.
அற்புதமான ஐயனின் இந்த க்ஷேத்திரம், தமிழகத்தின் செங்கோட்டையிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. காலை 5 முதல் 11:45 மணி வரையும்; மாலையில் 5 முதல் 8 மணி வரையிலும் அச்சன்கோவில் ஐயனை தரிசித்து வழிபடலாம்.
- தரிசிப்போம்`
எங்கள் அச்சன்கோவில் அரசே’
சாஸ்தாவின் ஸ்வரூபம் ஞான ஸ்வரூபம். தெள்ளறிவு, பூரண ஞானமாகப் பிரகாசித்து அரசனாக மிளிரும் தலம் அச்சன்கோவில். ஓர் அரசன் குடிகளின் குறைகளைத் தீர்ப்பது போன்று, தன் பக்தர் கள் எல்லோருக்கும் அருள்பாலிக்கிறார், அச்சன்கோவில் ஐயன்.
அவரை நினைத்தாலே போதும் ஐயனின் அனுக்கிரகம் நம்மை எப்போதும் காத்து நிற்கும். அந்த அச்சன்கோவில் ஐயனைப் போற்றும் அற்புதத் துதிப்பாடல் இது:
பணிகின்றவர்க்கு உயிர்த்துணை என்ற விருதுடன்
பாலிக்கும் ஸுகுண சீலன் - பக்தபரிபாலன் என்று
எத்திசையும் புகழ்கின்ற பூர்ண சிந்தாமணிக்கு இணையான
மாணிக்க மணிமார்பனாம் - எனது இஷ்ட குலதெய்வமாகி
வந்த இவர் இருக்கும்போது கவலை ஏனோ? மனமிரங்கி
எமக்கின்று கண்காட்சி தருவார்
கணிகண்டு கொண்டு கண்மணி என்றிவர் பாதக் கமலத்தை
இடைவிடாமல் காத்திருந்தால் நமக்கு ஏற்ற
வரமும் தருவார் - கைவல்ய மூர்த்தி என்ற
அணிவேலவர்க்கு இளைய மணிதாஸர் ஹ்ருதயத்தில்
அருள் தத்வ போதனென்று ஆதி சதுர்வேதங்கள்
ஓதும் பரஞ்ஜோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!
விஷம் நீங்கும் அதிசயம்!
அச்சன்கோவிலில் மற்றோர் அதிசயமும் உண்டு. இங்கே பாம்புக் கடிக்கு ஆளானவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது இல்லை. நாட்டுவைத்தியரையும் பார்ப்பது இல்லை. மகா வைத்தியரான அச்சன்கோவில் அரசனிடமே கொண்டு வருகிறார்கள். பாம்பு தீண்டியவர்களை எந்த நேரத்தில் கொண்டு வந்தாலும் கோயிலைத் திறக்கிறார்கள். எப்படிப்பட்ட அரவம் தீணடியிருந்தாலும், பகவானின் சந்தனப் பிரசாதமும் சங்கு தீர்த்த மும் விஷக்கடியை முறித்து விடுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் ஐயனின் அருளால் நல்லபடியாக வீடு திரும்பும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
`சித்த கணங்கள் எல்லாம் இத்தலத்தில் அரூபிகளாக வந்திருந்து, இரவில் பகவானை ஸர்ப்ப ஸூக்தம் என்ற மந்திரத்தினால் ஆராதிக்கிறார்கள். அதன் காரணமாகவே இங்கே பாம்பு விஷத் துக்கு எதிர்வினை சாத்தியமாகிறது’ என்று பெரியோர் கூறுவர்.