திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

என் வேண்டுதல் என்ன தெரியுமா?

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து

நகைச்சுவை நடிகராக தமிழகத்துக்கு நன்கு பரிச்சயமானவர் சிங்கமுத்து. ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். இவரின் ஆன்மிக முகம் வியப்பூட்டுவது. தற்போது `ஆன்மிக நந்தவனம்' என்கிற தலைப்பில் பல்வேறு கோயில் களுக்குச் சென்று சொற்பொழிவாற்றி வருகிறார் சிங்கமுத்து.

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து


அருணகிரிநாதர், நாயன்மார் ஆகியோரின் சரிதத்தை உள்ளம் உருகச் செய்யும் வகையில் உரையாற்றுகிறார். திருப்புகழும் தேவாரமும் மடைதிறந்த வெள்ளம்போல் அவர் பேச்சில் வெளிப் படுகின்றன. இப்படி ஆன்மிகத்தில் தன்னைத் தோய்த்துக் கொண்டிருக்கும் சிங்கமுத்துவை சக்தி விகடனுக்காக சந்தித்தோம். அவரின் குல தெய்வம், இஷ்ட தெய்வம், வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் எனப் பல்வேறு விஷயங்களைக் குறித்து சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

``சிவகங்கை மாவட்டத்திலுள்ள மேலூருக்குப் பின்னால் ஜெயங் கொண்ட நிலை என்று ஓர் ஊர் உள்ளது. அங்குதான் எங்கள் குலதெய்வம் சிங்கமுத்து ஐயனாரின் கோயில் இருக்கிறது. அவருடைய பெயரைத்தான் `சிங்கமுத்து' என எனக்கு வைத்திருக் கிறார்கள். அந்தக் கோயிலைக் கிட்டத்தட்ட 500 குடும்பங்கள் வழிபட்டு இன்றைக்கு மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள். கேட்டதெல்லாம் அந்த சாமியின் சந்நிதியில் கிடைக்கிறது என்று தெரிந்ததும் பல குடும்பங்கள் இன்றைக்கு அந்த சிங்கமுத்து ஐயனாரைக் கும்பிடத் தொடங்கிவிட்டார்கள்.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால், ஒருத்தர் கோயில் பக்கத்தில் கிடந்த பனம்பழத்தை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டார். அவருடைய கனவில் சிங்கமுத்து ஐயனார் தோன்றி, `அந்தப் பனம் பழத்தை நீ தின்னாதே. உன் மனைவிக்குக் கொடு!' எனச் சொல்லியிருக்கிறார். அவரும் அதன்படியே அந்தப் பழத்தைத் தன் மனைவிக்குக் கொடுக்க அதை உண்ட அவர் மனைவி, சீக்கிரமே கர்ப்பம் தரித்திருக்கிறார். பனம்பழம் எடுத்த அன்றைக்கு அவர்கள் கோயிலுக்கு வந்ததே பிள்ளை வரம் கேட்டுதான். அது நிறைவேறினதும் உடனே கோயிலுக்கு வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செய்தார்கள். இது ஒரு உதாரணம்தான். இப்படிப் பல அற்புதங்கள் தினமும் அங்கு நடக்கின்றன.

குலதெய்வம் ஐயனாரா இருந்தாலும் என் மனம் முழுவதும் சிவனே இருக்கிறார். நால்வர்கள் பாடிய தலங்கள் அனைத்துக்கும் போய் சிவ தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஆசை. பஞ்சபூதத் தலங்கள் என்றால் கட்டாயம் போய் தரிசிப்பேன். சிவபெருமான் மன்னர்களின் கனவில் வந்து சொல்லிக் கட்டிய கோயில்கள் என்றால் அங்கு தவறாமல் போவேன். தீர்க்கதரிசிகள், அருணகிரிநாதர் போன்ற மகான்கள் வழிபட்ட கோயில் என்றால் ரொம்ப விருப்பம். ஆசை ஆசையாகப் போய் தரிசனம் செய்வேன்.

திருவண்ணாமலை மனதுக்கு ரொம்ப நெருக்கமான தலம். பஞ்சபூதங்களில் அது அக்னித் தலம். எவ்வளவு பெரிய தீவினைகள் செய்தாலும் அதனை அக்னியிலே போட்டு எரித்துவிடுவது போல நமக்கு நேரும் கொடுமை களை, வஞ்சகங்களை, சூழ்ச்சிகளை எல்லாம் அண்ணாமலையாரிடம் சொல்லிவிட்டால் போதும்... அவையெல்லாமும் பொசுங்கிப் போய்விடும். அதனால் அங்கு போய் வழிபடுவது ரொம்ப நிறைவாக இருக்கிறது.

திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன்

அடுத்தது திருச்செந்தூர். அது எதிரிகளை வீழ்த்தக் கூடிய இடம். சூரர்களோடு போர் செய்து தேவர்களை முருகன் விடுவித்த தலம். அங்கே சென்று முருகனை வழிபட்டால் துன்பத்திலிருந்தும், எதிரிகளிடமிருந்தும், நம்மை `வேண்டாம்' என ஒதுக்கும் நபர்களிட மிருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும்.

பிறகென்ன, சிவபெருமானும் முருகப் பெருமானும் மட்டுமே நம் மனதில் குடிகொள் வார்கள்.

என் வாழ்க்கையில் எனக்கு அனைத்தும் சிவன்தான். குருவும் சிவன்தான். எப்போதும் `சிவாயநம' என்னும் மந்திரம் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். என் மீது தவறான பழிகள் சுமத்தப்பட்ட போதெல் லாம், நடக்கக்கூடாதவை நடந்த பொழுதெல்லாம் அந்த சிவன் என்னுடன் இருந்திருக் கிறார். என் மீது விழுகின்ற பழிகளுக் கெல்லாம் சிவனே பொறுப்பு என்று இருந்து விடுவேன்.

நல்லவர்களுக்கெல்லாம் சோதனை வரும். அதிலே பயந்து விடக்கூடாது. நம்பிக்கையோடு இருததால்தான் என் வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அப்படித்தான் எனக்கும் கிடைத்தது.

நான் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது சிவனை வழிபட்டு விட்டுத்தான் செல்வேன். என் வாழ்க்கையில் பணம் வரவில்லையே என்று என்றுமே வருத்தப் படவில்லை; `சிவன் என்னுடன் இருக்கிறார்' அதுவே போதும் என மகிழ்ச்சி அடைவேன்.

சிலநேரம் அவரிடம் பிரார்த்திக்கும்போது `எனக்கு நீ பணம் கொடுத்தால் பத்து பேரை நான் வாழவைப்பேன்; அவர்கள் வாழ்வது உனக்குப் பிடிக்கவில்லை எனில் நீ கொடுக்க வேண்டாம்' என்று விளையாட்டாக உரிமை யோடு சண்டை போடுவேன்.

வாழ்வில் நன்மைகள் தீமைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. இந்த நிலையில் நான் கடவுளிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

நான் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் படித்து சிவனை வழிபட்டதெல்லாம் உண்மை எனில், என் மரணப்படுக்கையில் ஒரே ஒருமுறை சிவனை தரிசித்துவிடவேண்டும்.

சிவபெருமானைப் பார்த்து, `ஐயா! உன் தரிசனத்தால் வாழ்க்கையில் தப்பித்து விட்டேன். உன்னை மறுத்துப் பேசாமல் உன் புகழ்பாடி வந்தேனே... அதற்குக் கிடைத்து விட்டதையா சொர்க்கம்!' எனக் கூற வேண்டும். அத்துடன் என் ஆன்மா அவரிடம் ஐக்கியமாக வேண்டும். இதுதான் வேண்டுதல்'' என உணர்வுபொங்கக் கூறினார்.

அவர் கண்கள் கலங்கியிருந்தன. சில கணங்கள் அவர் ஆசுவாசமாகக் காத்திருந் தோம். அவர் மீண்டும் தொடர்ந்தார்.

`` `சிவாயநம' எனும் ஒரு மந்திரத்தை உச்சரித்தால் போதும். அத்தனை மந்திரங்களையும், வேதங்களையும் படித்ததாக அர்த்தம். `சிவாயநம' என்பது பொது மந்திரம். சிவனுடைய உடல்பகுதிகளைக் குறிக்கக் கூடிய மந்திரம். அதை ஒரு முறை சொன்னால் கூட போதும் அது நிச்சயம் பலனளிக்கக் கூடியது. எனவே அனைவரும் அந்த மந்திரத்தைச் சொல்லி, `மந்திரமாவது நீறு' என்று நீறணிந்து அந்த மகா தேவனைக் காலமெல்லாம் போற்றுவோம். அது நம் கடமை'' என்று சொல்லி முடித்தார்.