திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

"எல்லாமே கடவுள் அருளால் நடந்தது!" - கே.ஆர்.விஜயா

கே.ஆர்.விஜயா
பிரீமியம் ஸ்டோரி
News
கே.ஆர்.விஜயா

அம்மனா நான் நடித்த முதல் படம் நம்ம வீட்டு தெய்வம். அதுவே புராணமில்லாத முதல் சமூக பக்திப் படம்னு நினைக்கிறேன். முதலில் அந்த கதை பழையனூர் நீலி கதை போன்ற ஒரு கதையாக உருவா னது

கே.ஆர்.விஜயா தென்னிந்தியாவின் பெருமைக்குரிய நடிகையாக இன்றும் விளங்கி வருபவர். 1963-ம் ஆண்டு கற்பகமாய் தமிழ் சினிமாவில் நுழைந்து, கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்றும் தொடர்ந்து நடித்து வரும் இவர், நீண்ட காலம் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர். தன்னுடைய ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தவை உங்களுக்காக...

கே.ஆர்.விஜயா
கே.ஆர்.விஜயா


? உங்களின் பக்தி படங்கள் குறித்து...

நான் முதலில் நடித்த புராணப் படம் தெலுங்கில் வெளியான `ருக்மிணி கல்யாணம்'.என்.டி.ராமாராவுக்கு ஜோடியா நடிச்சேன்; ருக்மிணி வேடம். தமிழில் முதல் புராணப்படம் கந்தன் கருணை. இதில் ஒரு விசேஷம் உண்டு. என்ன தெரியுமா? என் நிஜப்பெயர் தெய்வநாயகி. தமிழில் எனக்குக் கிடைத்த முதல் புராணக் கேரக்டர் தெய்வயானை. என் கணவர் பெயர் வேலாயுதம்!

அதேபோல் எனது சினிமாப் பயணம் தொடங்கிய இடம் பழநி. பழநி பஞ்சாமிர்தம் தின்றே வளர்ந்தவள் நான். பழநி முருகனும் அம்மனும் எப்போதும் என் இஷ்ட தெய்வங்கள்.

பழநி
பழநி


? உங்களை நெகிழவைத்த விஷயங்கள் ஏதேனும்...

முதல் படம் கற்பகம், நூறாவது படம் நத்தையில் முத்து, இருநூறாவது படம் படிக்காத பண்ணையார், இருநூத்து ஐம்பதாவது படம், முந்நூறாவது படம் எல்லாமே கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சார் இயக்கிய படங்கள்தான். என்னைப் பொறுத்தவரை அது பெரிய அதிர்ஷ்டம். வேறு யாருக்கும் இப்படி நடந்திருக்குமா என்றும் தெரியவில்லை. அதேபோல் எனது நூறாவது படத்துக்குப் பாராட்டு விழா நடந்தது. எம்.ஜி.யார், என்.டி.ஆர் உள்ளிட்ட பல வி.ஐ.பிக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். இதெல்லாம் கடவுளின் அருளால்தான் நடந்தது என்றே சொல்வேன்.

அம்மன்
அம்மன்


? அம்மன் வேடத்தில் நடித்த முதல் படம்...

கந்தன் கருணைக்குப் பிறகு `சரஸ்வதி சபதம்' படம் பண்ணேன். அம்மனா நான் நடித்த முதல் படம் நம்ம வீட்டு தெய்வம். அதுவே புராணமில்லாத முதல் சமூக பக்திப் படம்னு நினைக்கிறேன். முதலில் அந்த கதை பழையனூர் நீலி கதை போன்ற ஒரு கதையாக உருவா னது. தீய சக்தியை அம்மன் சக்தி அழிப்பதுபோல இருந்தது. ஆனால் அப்போது அப்படி எடுத்தால் சரியாக வராது என்று வியட்நாம் வீடு சுந்தரம், மா.லட்சுமணன், வீரப்பன், தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி இவங்கள்லாம் கதையை மாற்றி உருவாக் கினாங்க. ஆனாலும் அந்தப் படம் சரியா வருமான்னு பயந்துகிட்டேதான் நடிச்சேன். நிறைய கோயில்களுக்குப் போய்விட்டு வந்துதான் இந்த படத்தையே ஒத்துக்கிட்டேன். படம் முடியும் வரை விரதம், கோயில் தரிசனம்னு தொடர்ந்தது. படம் நல்ல வெற்றி. தொடர்ந்து பக்திப் படங்கள் வர ஆரம்பிச்சது. ஒரு கட்டத்திலே அம்மன் கேரக்டர்னாலே விஜயாதான்னு பேசவும் ஆரம்பிச்சாங்க.

? அம்மன் வேடம் போடும்போது விரத நியதிகள்...

அம்மன் வேடம் போட்டாலே பயமும் பக்தியும் தானாக வந்துவிடும். விரதமிருந்தே நடிப்பேன். கோயில் களில் ஷூட்டிங் இருக்கும். கருவறை அருகே போய் நடிக்க வேண்டியிருக்கும் இல்லையா! சோட்டாணிக்கரை கோயில் கருவறைப் படியிலிருந்து இறங்கி வர்ற மாதிரிகூட நடிச்சிருக் கேன். தெய்வங்கள் துடியோடு இருக்கும் கோயில்களில் நடிக்கும்போது நாம் பயபக்தியோடு இருக்கணும்தானே. அப்படியே இருந்தேன்.

கோயில்களில் அதிகம் நடிச்சதைப் பெரிய பாக்கியமாவே நினைக்கிறேன். பக்தி படங்களில் நடித்தபோதுதான் பெண் ரசிகை களிடம் அதிகம் பேசப்பட்டேன்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி படத்துல நடிக்கும்போது, மேல் மருவத்தூர் கோயிலுக்கு போய் அந்த பராசக்தியை வணங்கிவிட்டே நடிக்க ஆரம்பிச்சேன். அதற்கு பிறகும் பல படங்களில் அம்மனாக நடித்தேன். பொட்டு அம்மன் வரை தமிழில் பக்திப் படங்களில் நடித்தேன்.

2011-ம் ஆண்டு ராம ராஜ்ஜியம் படத்தில் கௌசல்யாவா பண்ணேன். எல்லாம் கடவுள் அனுக்கிரஹம். இன்னமும் நடிச்சுக்கிட்டே இருக்கேன்னா அதுக்கு பழநி முருகனும் அம்மனும்தான் காரணம். என் மனசுக்கு கொஞ்சம் கவலையோ குழப்பமோ வந்தால், உடனே அவங்ககிட்ட மனம் விட்டுப் பேசுவேன்; பிரார்த்திப்பேன்; பிரச்னையை அவங்ககிட்ட விட்டுடுவேன். அவங்க பார்த்துப்பாங்க.

ஆன்மிகப் படங்கள்
ஆன்மிகப் படங்கள்


? அடிக்கடி சொல்லும் ஸ்லோகம்...

சுலோகம் சொல்ற பழக்கம் இல்லை. நேரடியா கடவுள்கிட்ட பேசும்போதே திருப்தி வந்துடும். என்னைப் பொறுத்தவரையிலும் ஸ்லோகங்கள் சொல்லும்போது வார்த்தைகள் மேலதான் கவனம் போகும். அதனால கடவுள்கிட்ட நெருக்கமாக சாதாரண வார்த்தைகளே போதும்னும் தோணும்.

ஆனால் ஸ்லோகங்கள் சொல்வது நல்ல விஷயம்தான். எனக்கு வரல அவ்வளவுதான். அன்புதானே வேண்டுதலின் முக்கியம். விரதங்கள்கூட தொடர்ந்து இருப்பதில்லை. அதேநேரம் தினமும் பூஜிப்பதை இயன்றவரை தொடர்கிறேன்.

பக்தி
பக்தி

? மனதுக்குப் பிடித்த தெய்வத் தலம்; வழிநடத்தும் மகான்...

நிறைய கோயிலுக்குப் போய் இருக்கேன். மனசுக்கு நெருக்கமான கோயில் என்றால் பழநிதான். பழநி முருகனைப் பார்த்தாலே மனதில் நிம்மதி தோன்றிவிடும். எல்லா கடவுள்களையும் கும்பிடுவேன். எந்த பேதமும் எப்போதும் நான் பார்த்ததில்லை. மகான், குரு போன்ற வர்கள் யாரும் என் வாழ்க்கையில் இல்லை. நேரடியாக தெய்வத்துக்கிட்ட முறையிடுவதால், யாரும் எனக்குத் தேவைப்படவில்லையோ என்னவோ.

? இப்போது ஆன்மிகப் படங்கள் அதிகம் வருவதில்லையே... மக்களிடம் பக்தி குறைந்துவிட்டதோ. உங்கள் கருத்து...

இப்போதெல்லாம் பேய்க் கதைகள் தொடர்பான படங்கள்தான் நிறைய வருகின்றன. அதேநேரம், பக்தி படங்கள் வராததால் ஆன்மிக நம்பிக்கை, பக்தி எண்ணங்கள் மக்களுக்குக் குறைஞ்சுப் போச்சுன்னு சொல்ல முடியாது. சொல்லப்போனால் இப்போதான் கோயில்களில் நிறைய கூட்டம் வருது.

முன்பெல்லாம் பழநியில் அவ்வளவு கூட்டம் இருக்காது. சந்நிதிக்குப் போற வழியிலெல்லாம் மலைக்காற்று அப்படி வீசும். அந்த இடமே தெய்வீகமா இருக்கும். இப்போ நிறைய கட்டடங்கள் வந்துடுச்சு. கோயில் என்றாலே வணிக இடம் மாதிரி மாறிப் போச்சு. மனசு ஈடுபாட்டோட சாமி கும்பிட முடியல. ஆனாலும் எப்போவுமே பக்தி குறைஞ்சு போய்விடாது. பல ஊர்கள்ல - கோயில்களில் நடக்கும் திருவிழாக்களே அதற்குச் சாட்சி

என்றபடி சிரிப்புடன் விடைகொடுத்தார் புன்னகை அரசி. அந்த இடமே தெய்விகமாக மலர்ந்தது!