திருக்கதைகள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்-31

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

இந்தத் தொடரில் என்னவெல்லாம் ‘லட்சுமி கடாட்சம்’ என்று எனக்குத் தெரிந்தவரையில், என் அனுபவங்களை வைத்தும், நான் படித்து அறிந்தவை - கேட்டு அறிந்தவற்றை வைத்தும் உங்களுக்குச் சொல்லி வருகிறேன். சுத்தம், சுகாதாரம், உண்மை, நேர்மை, நன்றி உணர்வு, தானம், அர்ப்பணிப்பு – எல்லாமே என்னைப் பொறுத்தவரை லட்சுமி கடாட்சம்தான். லட்சுமியின் கடாட்சம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்று கொள்ளலாமா?

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


நான் கேட்கிறேன்... `கடவுள் எங்கே இருக்கிறார்?'

பலர் சொல்வார்கள் – கடவுள் நமக்குள்தான் இருக்கி றார் என்று. அப்படியா? உண்மையாகவா? கடவுள் நமக்குள்தான் இருக்கிறாரா?

`இல்லை' என்றுதான் நான் சொல்வேன். ‘கடவுள் நமக்குள் இல்லை’ என்பதை, இத்தனை வருடங்கள் கழித்து இந்த வயதில்தான் உணர ஆரம்பித்திருக்கிறேன்.

‘என்னடா.. இந்த அம்மா இத்தனை அத்தியாயங்கள் எழுதிட்டு, இப்போ திடீர்னு இப்படிக் கடவுள் மறுப்புக் கொள்கை மாதிரி பேசுறாங்க!’ என்று குழப்பமாக இருக்கிறதா?

இல்லைங்க... நிச்சயமாகச் சொல்றேங்க... கடவுள் நமக்குள் இல்லை. நாம்தான் கடவுளுக்குள் இருக்கிறோம்!

ஆனால், இதை நாம் உணர்வதற்கு நீண்டகாலம் பிடிக்கிறது. நாம் கடவுளுக்குள் இருக்கிறோம் என்பதை எப்போது நாம் உணர்கிறோம் என்றால், நம் தாய் அல்லது தந்தையை இழக்கும் போது, நம்முடைய குருவையோ கடவுளையோ நம் தாயாக, தந்தையாக நினைக்கிறோம் அல்லவா... அந்த நேரம் நமக்கு ஓர் அரவணைப்பு கிடைப்பது போல உணர்வோம்.

நம்மை அரவணைத்துக் கூட்டிச் சென்றவர்கள் திடீரென நம்மை விட்டுப் பிரியும்போது, `நம்மை அரவணைத்து அழைத்துச் செல்ல இனி கடவுள்தானே இருக்கிறார்' என்று நினைக்கும்போதுதான் அந்த உண்மையை உணரவும் ஆரம் பிக்கிறோம். இவ்வளவு வருடங்களாக அவர்தானே கூட்டி வந்திருக்கிறார்... நாம் உணர்ந்தோமா?!

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்

கர்மா, விதி... போன்ற ஆழமான விஷயங்களை அறிய, கர்மயோகம் போன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். சொல்லப்போனால் என்னுடைய 22-வது வயதிலிருந்து அதுபோன்ற புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அதில் சம்பந்தப்பட்டு, அது வழியாகப் பயணப்படக் கூடியவர்களுடன் மட்டுமே எனக்கு நல்ல நட்பு உண்டானது.

அவர்களுடன் இந்த மாதிரி விஷயங்களை செல்போன் இல்லாத காலத்திலேயே மணிக்கணக்காகப் பேசுவோம். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்.

இதை எழுதும்போது எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 80-களில் ஊட்டியில் படப்பிடிப்பு முடித்துவிட்டு, கோவையிலிருந்து விமானத்தில் வந்துகொண்டிருந்தேன். பாடகர் ஏசுதாஸ் சாரும் என்னுடன் பயணித்தார். நான் வாசிக்கும் புத்தகத்தைக் கவனித்ததும், என்னை ஒரு நிமிஷம் அப்படியே பார்த்தார்.

நான் அவரிடம், “சார்... நான் உங்க பரம விசிறி. உங்க கையெழுத்து வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. எனக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்கோ சார்” என்றதும், அவர் ஒரு நிமிடம் யோசித்தார்.

“என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு. அதில் கையெழுத்துப் போட்டுத் தரேன். சரியாக இருக்கும். நீங்க நல்லா வாசிப்பீங்கன்னு தெரியும்” என்றவர், ‘சித்த வேதாந்தம்’ என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

பெரிய பொக்கிஷம்தான் அது. அந்த நேரத்தில் அவர் ஏதாவது ஒரு காகிதத்திலோ, அல்லது வேறு ஏதேனும் பத்திரிகையிலோ போட்டுக் கொடுத் திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் மனதில் தோன்றியிருக்கிறதே... அதைத் தூண்டியது யார்? அது என்னிடம் வந்து சேர வேண்டும் என்பதை யார் நிச்சயித்தார்கள்?

இப்படியான சின்னச் சின்ன விஷயங் களைத் தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். நானும் என் கணவரும் இதைப் பற்றியெல்லாம் அடிக்கடி பேசுவோம்.

லட்சுமி-சிவ சந்திரன்
லட்சுமி-சிவ சந்திரன்

அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். அவரும் நிறைய வாசிப்பார். கர்மா என்றால் என்ன, இதெல்லாம் ஏன் நடக்கிறது, யாரால் நடக்கிறது... இப்படியெல்லாம் விவாதிப்போம்.

முன்பெல்லாம் சாதாரண விஷயங்களுக்கு அவர் கோபப்பட்டு டென்ஷன் ஆகும் போது, நான் சமாதானப்படுத்துவதும், நான் உணர்ச்சிவசப்படும்போது அவர் ஆசுவாசப் படுத்துவதும் நடக்கும். இப்போதெல்லாம் அப்படி ஒரு சம்பவமே நடப்பதில்லை.

இருவருமே இப்போது எமோஷன் ஆவதில்லை. காரணம், அந்தத் தெளிவை ஆண்டவன் எங்களுக்குக் கொடுத்திருக்கிறான். அதுவும் இப்போதுதான் கொடுத்திருக்கிறான். சில பேருக்கு மாத்திரம் இப்படி ஒரு தெளிவைக் கொடுத்துவிடுகிறான்.

ஆதிசங்கரருக்குக் கொடுத்தாற்போல 7 வயதில் கொடுப்பதும் உண்டு; ரமணருக்குக் கொடுத்தது போல 11 வயதிலும் கொடுப்பது உண்டு. நமக்கு 50, 60 வயதுகளைத் தாண்டிய பிறகு கொடுத் திருக்கிறான். `இப்பவாவது கொடுத்தானே அந்த பகவான்' என்று எண்ணி நன்றி சொல்லத்தான் தோன்றுகிறது.

என் கணவருக்கு பிள்ளையார் என்றால் அப்படி ஒரு பிரியம்; பித்து என்று கூடச் சொல்லலாம். மேலும் நம் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மதிப்பவர்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் வாரம் தோறும் சர்ச்சுக்குப் போய் பிரார்த்திக்கும் குடும்பம் அவருடையது. அப்படியிருக்க, அவருக்கு எப்படி பிள்ளையார் மேல் ஈர்ப்பு வந்தது என்று அவருக்கே தெரியவில்லை.

கனவில் யானை வருவதும், மறுநாள் பார்த்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அருகில் பெரிய அல்லது விசேஷமான பிள்ளையார் கோயில் இருப்பதும் அவர் வாழ்வில் அடிக்கடி நடந்த விஷயங்கள்.

இந்த இந்தியாவில்தானே எல்லாப் பிறப்பும் பிறந்திருப்போம்... அப்படி ஏதாவது விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம் என்று நான் கிண்டல் செய்வேன்.

நான்தான் அவருக்கு முதல் ஆசான்.

“சொல்லுங்க.. ‘ஓம் கம் கணபதயே நமஹ!” என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

“ஹை லக்ஷ்மி.. மந்திரம் எல்லாம் சொல்றியே... நான் சொல்லலாமா?” என்றார்.

“யார் வேணாலும் தாராளமா சொல்லலாம். உச்சரிப்பை மட்டும் தப்பு இல்லாமல் சொன்னால் பிரச்னையே இல்லை. அப்படிச் சொல்ல முடியலன்னா, அந்த மந்திரத்தை அப்படியே கேட்டுக்கிட்டே இருங்க...'' என்று சொன்னேன்.

நான் ஒரு முறை கேட்டேன்... “உங்களுக்கு ஏன் இந்து மதத்தின் மேல் இப்படி ஓர் ஈர்ப்பு?”

“இந்து என்பது ஒரு மதமே இல்லையே..!”

அது உண்மைதான். இந்து மதம் என்பது ஒரு மதம் இல்லை; அது சனாதான தர்மம். நாம் வாழும் விதம்தான் அது. அந்த வழியில் வாழ்வது சுலபம் தெரியுமா. மிகவும் எளிது! நாம் வாழும் வாழ்க்கை முறைதான் சனாதன தர்மமான நம்முடைய இந்து மதம்.

பல விஷயங்களில் ஒத்த கருத்துக்களை உடைய நாங்கள் முரண்படும் ஒரே விஷயம், பேய், பிசாசு போன்ற எதிர்மறை சக்திகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை மட்டும்தான்! அவர் முன்பு கூறிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பக்கத்து வீட்டுப் பையனுக்கு மேற்சொன்ன எதிர்மறை சக்தி ஒன்று பிடித்திருந்த தருணத் தில், அவனை அப்படியே தூக்கிக்கொண்டு போய் அவர்கள் ஜெபம் செய்யும் இடத்தில் நின்றார்களாம்.

அப்படியே அவனை வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்யச் செய்ய, அந்தப் பையனின் உடல் தூக்கிப் போட்டதாம். சிவாவுடன் இன்னும் இருவர் பிடித்திருக்க, அவர்களையும் சேர்த்து பூமியில் இருந்து தூக்குவது போல இருந்ததாம்.

சத்தமாகக் கத்திப் பிரார்த்தனை செய்யச் செய்ய, உடல் தூக்கிப் போடுவது குறைந்து, சிவாவின் அம்மா வந்து நின்றதும் அப்படியே நின்றுவிட்டதாம். சிறிது நேரத்தில் அந்தப் பையன் நார்மலாகிவிட்டானாம்.

அவனைச் சார்ந்தோரிடம் ‘வீட்டில் தினமும் செய்யும் ஜெபத்தை நீங்கள் செய்யுங்கள்’ என்று கூறிய இவர், கெல்லீஸில் இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்குப் போய் அவனுக்காக வேண்டிக்கொள்வாராம். அந்தப் பையனுக்கு அதன் பிறகு எந்தப் பிரச்னையும் இல்லையாம்.

ஒரு நாள் பூசாரியிடம் “நான் பிள்ளையாரி டம் ஒரு பையனுக்காக வேண்டினேன். அவன் இப்போ நல்லா இருக்கான். நான் என்ன செய்யணும்?’ என்று கேட்டிருக்கிறார்.

அவரோ, ‘ஒண்ணும் வேண்டாம்... ஒரு 100 ரூபாயை இந்த உண்டியல்ல போட்டுட்டு, ‘வேண்டுதல் முடிஞ்சிடுச்சு’ன்னு சுவாமிகிட்ட சொல்லிட்டு, ஒரு தேங்காய் உடைச்சிட்டுப் போங்கோ” என்று கூறியிருக்கிறார்.

சிதறு தேங்காய் உடைப்பதைப் பற்றி அறியாத இவர், சட்னிக்கு உடைப்பது போல தேங்காயை இரண்டாக உடைத்துக் கையில் எடுத்துக்கொண்டாராம்.

அப்போது பூசாரி “சுவாமிக்குன்னு நீங்க கொண்டு வந்ததை இங்கேயேதான் விட்டுட்டுப் போகணும். கையில் எல்லாம் எடுத்துட்டுப் போகக் கூடாது” என்றாராம்.

அவர் சொன்னார்... “எனக்கு அன்னிக்கு பட்டுன்னு பொறி தட்டின மாதிரி ஒரு விஷயம் புரிஞ்சுச்சு லக்ஷ்மி. இறைவன் நமக்கு இங்கே எல்லாமே கொடுத்திருக்கிறார். ஆனாலும், ஒரு தேங்காயைக்கூட நாம விட்டு வைக்காம உடைச்சு எடுத்துட்டுப் போறோமே... என்ன ஜன்மம் நாமன்னு தோணுச்சு. இது தோணும்போது எனக்கு வயசு இருபது!” என்று.

நான் நினைத்துக்கொண்டேன்...

‘எல்லாத்தையுமே விட்டுட்டுத்தான் போகப் போறோம். ஆனாலும் கெட்டியா புடிச்சுக்கிட்டுத் தொங்குறதை நாம விடுறதேயில்லை!’

திருமணமாகி இந்த 36 வருடங்களாக இந்த மாதிரியான விஷயங்கள் பலவற்றைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். என்னோடு திருப்பதிக்கு வருவார். நண்பர் களுடண் வேளாங்கண்ணிக்குப் போய் ஜெபித்துவிட்டு, அப்படியே நாகூர் போய் தொழுகையும் செய்துவிட்டு வருவார்.

“எனக்கு ஏன் இந்து மதத்தைப் பிடிக்குதுன்னா... பலவித உருவங்களைக் காட்டி, ‘இதை நம்பு, இல்லை அதையாவது வணங்கு’ன்னு சொல்லி, ஆண்டவனின் அரவணைப்பில் நாம் இருப்பதைப் புரிய வெச்சு, ‘நீ இன்னும் அந்தத் தாயின் கருவறையில் அவள் பாதுகாப்பில்தான் இருக்கே. அவள் தினமும் உன்னைக் காவல் காத்துக்கிட்டுத்தான் இருக்கா’ன்னு சொல்ற இந்த சிஸ்டம் எனக்குப் பிடிச்சிருக்கு லக்ஷ்மி” என்பார்.

என்னவொரு எளிமையான மதம் நம்முடையது இல்லையா!

மதம் – ஏதோ மலையைப் புரட்டும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை... நாம் வாழும் முறை!

- கடாட்சம் பெருகும்...

`பூஜை மணி!’

வீட்டில் பூஜை செய்பவர்கள், மணியைத் தங்கள் இதயத்துக்கு நேராக வைத்து ஒலி எழுப்ப வேண்டும். மணி, தேவர்கள் வசிக்கும் இடம். அதைத் தாழ்வாக வைத்து அடித்தால் தேவர்களை அவமதித்ததாக ஆகிவிடும். அதேபோல் பூஜை மணியைத் தரையில் வைக்கக் கூடாது.