Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: ‘சிவ தரிசனம் கிடைக்கும்!’

நடிகை மதுமிதா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை மதுமிதா

- அய்யனார்

எங்கள் ஆன்மிகம்: ‘சிவ தரிசனம் கிடைக்கும்!’

- அய்யனார்

Published:Updated:
நடிகை மதுமிதா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை மதுமிதா
‘`விபரம் தெரியாத சின்ன வயதில் கோயில்களுக்குப் போகிற போதெல்லாம் அங்கே சிவலிங்கத்தைப் பார்த்தா ரொம்பவே பயப்படுவேனாம், எங்க அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘ஏன் பயந்தேன்’னு இப்ப யோசிச்சுப் பார்த்தாலும் விடை தெரியலை. ஆனால் இன்று நான் தீவிரமான சிவபக்தை. பொதுவா யாரையாச்சும் பேசாம, அமைதியா இருக்கச் சொல்லித் திட்டறப்ப, ‘சிவனே’ன்னு இருக்க மாட்டியா’னு சொல்வாங்க. நான் இப்ப 24 மணி நேரமும் ‘சிவனே’ன்னுதான் இருக்கேன்’’ என்கிறார் நகைச்சுவை நடிகை மதுமிதா.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திரைப் பிரபலம் என்பதைத் தாண்டி அவரின் ஆன்மிக ஈடுபாடுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டோம்.

“நந்தகுமார்னு ஒரு நகைச்சுவை நடிகர். விவேக் சாருக்கு அப்பாவா சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் அன்பளிப்பா தந்த சிவபுராணப் புத்தகம் ஒன்று என் கைக்குக் கிடைத்தது. யாருக்கோ அவர் தந்தது, கை மாறிக் கை மாறி கடைசியில் என் கைக்கு வந்துவிட்டது. அந்தப் புத்தகத்தில் ‘கோளறு பதிகம்’னு சில பாடல்கள். வார்த்தைகள்லெல்லாம் ரொம்பக் கடினமானதா இருந்தன. சிவனை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய அந்தப் பாடல்களைப் புரட்டிட்டு ‘ஒண்ணும் புரியலை’ன்னு தூக்கி ஓரமா வச்சிட்டேன்.

எங்கள் ஆன்மிகம்: ‘சிவ தரிசனம் கிடைக்கும்!’

ஆனா அந்தப் புத்தகம் என் வீட்டுக்குள் வந்த பிறகு என் நடவடிக்கைகளில் அப்படியொரு மாற்றம். அதுவரை அம்மா பூஜையறையைச் சுத்தம் செஞ்சு விளக்கேத்தச் சொன்னாப் பண்ண மாட்டேன். ஆனா, அந்த நிலை அப்படியே மாறியது.

‘திடீர்னு எப்படி மாறினேன்’னு என் மனசு யோசிக்கிறப்பெல்லாம் இந்தப் புத்தகம் கண்ணுல படும். மறுபடி எடுத்து, புரியவில்லை என்றாலும் வார்த்தைகளை வாசிப்பேன். அந்த நேரத்தில்தான் ‘காஸ்மோரா’ ஷூட்டிங் வந்தது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்ல நடிகர் விவேக் சார்கிட்ட இருந்து நிறைய ஆன்மிக விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ‘எல்லா நாளும் நல்ல நாளே; கோள்கள்லாம் நமக்கு நன்மை செய்பவைதான்’னு கோளறு பதிகத்தை எளிமையா புரியவைத்தார்.

எங்கள் ஆன்மிகம்: ‘சிவ தரிசனம் கிடைக்கும்!’

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா சிவன் மீது ஈர்ப்பு வர ஆரம்பித்தது. எங்கள் பகுதியில் (சென்னை, திருவொற்றியூர்) இருக்கும் வடிவுடையம்மன் கோயிலுக்கு அடிக்கடிப் போய், அங்கிருக்கும் என் ஜன்ம நட்சத்திரமான பரணி நட்சத்திரத்துக்கு நேராக இருக்கும் சிவலிங்கம் முன்பு உட்கார்ந்து வணங்கத் தொடங்கினேன்.

‘நமசிவாய’ மந்திரத்தை உச்சரிச்சிட்டே இருப்பேன், அவ்ளோதான் என் பிரார்த்தனை. அதேபோல் சிக்கல்கள் என்னைச் சூழ்கிற நேரங்களில், ‘இதுல இருந்து என்னைக் காப்பாத்து சிவனே’ என்று வேண்டியதில்லை.

எங்கள் ஆன்மிகம்: ‘சிவ தரிசனம் கிடைக்கும்!’

காரணம், தன்னுடைய பக்தர்கள்கிட்ட திருவிளையாடல் பண்றவர் அவர். அதனால் எந்தச் சிக்கல் நமக்கு வந்தாலும், கடைசியில் அதை சுபமா முடிச்சுத் தந்து, நமக்குப் பிரச்னையை உண்டு செய்தவர்களே பிரச்னையைச் சந்திக்கிற மாதிரி பண்ணிடுவார். இதை நான் அனுபவபூர்வமாவே உணர்ந்திருக்கேன். அதனால எவ்ளோ கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் அப்பவும் அதே ‘நமசிவாய’தான்.’

இதை உணர்ந்தபிறகு சிவபெருமான் மீது அதீதமான ஈடுபாடு ஏற்பட்டிருக்கு. பிரதோஷம், சிவராத்திரின்னா சிவனை வணங்குவதுதான் முக்கியமான வேலை. கடந்த சிவராத்திரி அன்னைக்குக்கூட ராத்திரி தொடங்கி மறுநாள் விடியும் வரைக்கும் சென்னையில் இருக்கிற பன்னிரண்டு சிவாலயங்களுக்குப் போய் சாமி கும்பிட்டேன்.

வாழ்க்கையில் எந்த முடிவு என்றாலும் சிவனைக் கேட்டே செய்கிறேன். என்னுடைய கல்யாணத்தையே இதற்கு உதாரணமா சொல்லலாம். ரொம்ப வருஷமா பேசாம இருந்த இரண்டு குடும்பங்கள். அதிலும் கணவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர். ‘இது சரிப்பட்டு வருமா’னு திருவண்ணா மலையில பூ போட்டுக் கேட்டேன். பூ எடுத்த அர்ச்சகர் பேரு பிரகதீஷ். அதுவும் சிவன் நாமம்தான். பூ சாதகமாகக் கிடைத்தபோது, ‘என் கல்யாணத்துல சிவனே உன்னைப் பார்க்கணும்’னு வேண்டிக் கிட்டேன். சரியா, கல்யாணத்து அன்னைக்கு அருணாசலேஸ்வரர் ஃபோட்டோவுடன் அந்த அர்ச்சகரே நெத்தி நிறைய திருநீற்றுடன் வந்தார். இத்தனைக்கும் அவருக்கு நான் அழைப்பிதழே தரலை. இதை என்னவென்று சொல்வது... எல்லாம் சிவனுடைய மகிமைதான்.

எங்கள் ஆன்மிகம்: ‘சிவ தரிசனம் கிடைக்கும்!’

சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வைச் சொல்லணும். ஒரு வெளிநாட்டுப் பெண். அவருடைய கணவர் அந்த நாட்டு ராணுவத் தில் இருக்கார். அந்தப் பெண் சுற்றுலாவாக இந்தியா வந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர் கணவர் தங்கியிருந்த எல்லையில் சண்டை. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து கணவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அந்தப் பெண்மணியால் முடியவில்லை.

இந்தப் பெண் வட இந்தியாவுல இருக்கிற பழைமையான அந்தச் சிவன் கோயிலுக்கு வருகிறார். மனத்தின் கவலை முகத்தில் பிரதிபலிக்குது. கோயில்ல ஓர் ஓரமா சோகமா உட்கார்ந்திருந்த அந்தப் பெண்கிட்ட வயசான ஒரு தாத்தா வந்து ‘என்னம்மா பிரச்னை’ன்னு கேட்டிருக்கார். அந்தத் தாத்தாவுக்கு தன்னுடைய கணவர் விஷயத்தைச் சொல்லி யிருக்கிறார் அந்தப் பெண்.

அந்தக் கோயிலின் ஈசனைச் சுட்டிக்காட்டி, ‘இவன்கிட்டச் சொல்லிட்டுப் போ, புருஷன்கிட்ட இருந்து சேதி வரும்’னு சொல்லி

யிருக்கார் அந்தத் தாத்தா. தாத்தாவினுடைய அந்த வாக்கு அந்த இறைவனே நேரில் வந்து சொன்ன வாக்குபோல அந்தப் பெண்ணுக்குப் பட்டிருக்கு. உற்சாகமாக எழுந்து சிவன் சந்நிதிக்குப் போய், ‘ ஈசனே, என் கணவர் திரும்பி வந்துட்டா, இந்தக் கோயிலை நானே புனரமைக்கிறேன்’னு சொல்லி வேண்டிக் கிட்டாராம் .

சில நாள்களில் அந்தப் பெண் சொந்த நாட்டுக்குப் போயிட்டாங்க. திடீர்னு ஒரு நாள் அவங்க கணவர்கிட்ட இருந்து தொலைபேசி அழைப்பு. தொலைபேசியில் கணவர் சொன்னது இதுதான். 'எதிரிகளின் படையில் இருந்து ஓர் ஆயுதம் மிகச்சரியா என்னை நோக்கி வந்தது. முடிந்தது என் வாழ்க்கைன்னு நினைச்சேன். அந்த நொடி, என் பார்வையில் இதுவரை நான் சந்தித்திராத‌ வித்தியாசமான ஒருவர் தோன்றினார். மனுஷ முகமும் புலி உடலும் கொண்ட அந்த உருவத்தைப் பார்த்து வியந்து திகைத்துப் போய் நிற்க, என்னைத் தாக்க வந்த ஆயுதம் விலகி வேற பக்கமா போய்விட்டது’ என்றிருக்கிறார்.

இதைக் கேட்ட அந்தப் பெண்ணின் உடல் சிலிர்த்தது. தான் வேண்டிக்கொண்ட ஈசனின், புலித்தோல் தாங்கிய திருக்கோலம் நினைவுக்கு வந்தது. பக்தியில் அழுது கதறி ஈசனுக்கு நன்றி சொன்னாராம். சொன்னதுபோலவே இந்தியாவுக்கு வந்து அந்தத் திருக்கோயிலின் திருப்பணியைச் செய்துகொடுத்தாராம்.

இந்த சம்பவத்தை ஒரு நூலில் படித்ததிலிருந்து எனக்கும் அந்த நெற்றிக்கண்ணனைக் காண வேண்டும் என்கிற ஆவல் மனதில் எழுகிறது. நிச்சயம் ஒருநாள் வாழ்வில் சிவபெருமானை தரிசிப்பேன்னு நம்பறேன” என்று சொன்ன போது மதுமிதாவின் கண்கள் பக்தியில் கலங்கியிருந்தன.