Published:Updated:

கனவில் வருவாள் கருமாரி!

கருமாரி
பிரீமியம் ஸ்டோரி
கருமாரி

பிரேமா நாராயணன்

கனவில் வருவாள் கருமாரி!

பிரேமா நாராயணன்

Published:Updated:
கருமாரி
பிரீமியம் ஸ்டோரி
கருமாரி

நளினி என்றதுமே அவருடைய சாந்தமான முகமும், நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் அளவில் ஜொலிக்கும் குங்குமமும், மஞ்சள் புடவையும் கையில் வேப்பிலையும்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அம்மன் வேடங்களுக்குப் பொருந்துபவர் நடிகை நளினி. அவரிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவருக்கு எல்லாமே அம்மன்தான் என்பதும்.

நளினி
நளினி


கருமாரி அம்மனின் தீவிர பக்தை நளினி. கடந்த வாரம் நாம் சந்தித்தபோதும், மஞ்சள் முகமும் குங்குமமுமாக மங்கலகரமாகக் காட்சி அளித்தார். வழக்கம்போல கலகலப்பாகப் பேசினார்.

“சின்னக் குழந்தைக்கு சாக்லேட் மாதிரி எனக்கு ஆன்மிகம் என்பது பிடித்தமான விஷயம். எங்க பாட்டி, எங்க அம்மா மூலமாகத்தான் எனக்கு சாமியும் பக்தியும் அறிமுகமாச்சு. வீட்டில் எப்போதும் ஸ்லோகம் ஓடிட்டே இருக்கும். அதைக் கேட்டுக்கிட்டே இருக்கச் சொல்வாங்க. எனக்கு எட்டு அண்ணன் தம்பி. ஒரு தங்கை. ‘அயிகிரி நந்தினி’ எல்லாம் யாருக்குமே வராது... ஆனா நான் பாட்டுக்கு கத்திப் பாடிட்டே இருப்பேன். அதிலிருந்து ஆரம்பமானதுதான் என் ஆன்மிகம்.

சாமிக்கெல்லாம் ‘அய்யோ சாமி’ன்னு நான் பயப்பட மாட்டேன். ஏன்னா, கருமாரி அம்மன்தான் என்னுடைய அம்மா. பெருமாள் என் மாமா. முருகப்பெருமான் சகோதரன், ராகவேந்திரர் தாத்தா... இப்படி உறவுமுறையாகவும் உணர்வுபூர்வமாகவும் ஃப்ரெண்ட்லியாகவும்தான் இருப்பேன். கடவுளிடம் அவ்வளவு ஈர்ப்பு!” – புன்சிரிப்புடன் பேசுகிறார் நளினி.

“உங்கள் மனசுக்கு நெருக்கமான தெய்வம் எது?”

“என் மனசுக்குள் எப்போதும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து ஆக்கிரமிச் சிருப்பவள் அன்னை கருமாரிதான். நினைச்சதும் அவள் கோயிலுக்குப் போயிடுவேன். கோவிட் லாக் டவுன் எப்படா முடியும்னு காத்திருந்து, கோயில் திறந்ததும் ஓடிப்போய் எங்கம்மாவைப் பார்த்துட்டு வந்தேன். போகலன்னா அவளே கனவில் வந்து ‘என்னைப் பார்க்க வரலயா?’ன்னு கேப்பா. அவள் கோயிலுக்குப் போயிட்டு வந்தால், அன்னைக்கு ஏதோ ஒரு மாற்றம் அல்லது நல்லது நடந்துகிட்டே இருக்கும்.

அந்த 27-C பஸ்ஸில் ஏறும்போதே, ‘எங்க அம்மாவைப் பார்க்கப் போறேன்’னு ஆனந்தமா இருக்கும். அப்படி ஒருமுறை போய்ட்டு வரும்போதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. விவாகரத்துக்குப் பின்னர், ‘நான் நடிக்கவே மாட்டேன்’னு அந்த அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தேன். அப்போது என் பின்னாடியே வந்த குட்டி பத்மினி அம்மா என்னைத் திரும்ப நடிக்கணும்னு சொல்லி நடிக்க வெச்சாங்க. அந்தச் சந்திப்பு நிகழ்ந்ததும் கருமாரியின் கோயிலில்தான். கருமாரித் தாய் எப்போதும் என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மாதிரிதான் நினைச்சுக்குவேன்... அந்த நினைப்பே வேற லெவல்!

நான் அடிக்கடி போற இன்னொரு கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில். அவர்தான் எங்கள் குலதெய்வம். என் வீட்டுக்காரர் திருச்செந்தூருக்கே எம்.பி. ஆனது எவ்வளவு பெரிய விஷயம்! திருப்பதிக்கும் அடிக்கடி போறதுண்டு. கிரிவலம், பாதயாத்திரை, அங்கப் பிரதட்சணம் எல்லாமே பண்ணியிருக்கேன்!”

சிரித்தபடியே உரையாடலைத் தொடர்கிறார்..

“108 திவ்யதேசங்களில் 78 கோயில் பார்த்துட்டேன். பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் 175 கோயில்களுக்குப் போய்ட்டு வந்தாச்சு. போன வாரம்கூட நாதமுனி இருக்கும் கோயிலுக்குப் போய்ட்டு வந்தோம். காட்டுமன்னார்கோவில், கங்கை கொண்ட சோழபுரம்... இப்படி, எல்லாமும் பார்க்கப் பார்க்க அலுக்காத கோயில்கள். தேவலோகத்திலேயே போய் மிதிச்ச மாதிரி உணர்வைத் தரும் தலம் சிதம்பரம். அங்கே பள்ளியறை பூஜை பார்க்கும் பரவசம் இருக்கே... ஆஹா சொல்லி மாளாது. ‘போதும் இந்த ஜன்மம்’னு எனக்குத் தோணும்.

அதேபோல், திருமீயச்சூர் லலிதாம்பிகையையும் அடிக்கடி தரிசித்து வருவேன்.அவளைப் பார்த்தால் பார்த்துகிட்டே இருக்கணும் போலிருக்கும். அடுத்த ஜன்மம்னு ஒண்ணு இருந்தால் கும்பகோணம் பக்கம் பிறக்கணும்; அங்கே இருக்கும் கோயில்களுக்குப் போய்கிட்டே இருக்கணும்..!”

“வீட்டில் தினசரி பூஜை எல்லாம் உண்டா?”

“பெரும்பாலும் கார்த்தால 3:20க்கு எழுந்து 4:30 மணி வரை லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் பண்ணுவேன். பூஜை எல்லாம் என் இஷ்டப்படிதான். நான் என்ன சமைக்கிறேனோ அதை நைவேத்தியமா வெச்சு கும்பிடுவேன். என்னுடைய கிச்சன்லயே அன்னபூரணி இருக்கா… அம்மையப்பன் இருக்காங்க. சமைச்சதும், அவங்ககிட்ட ‘நீங்க முதல்ல சாப்பிடுங்க... எனக்குப் பசிக்குது... நான் கட்டணும்’னு சொல்வேன். ரொம்ப பயபக்தியா... செவ்வாய், வெள்ளி, ஆடி, புரட்டாசின்னு எல்லாம் பார்த்து பூஜை பண்றது இல்லை.”

“கனவில் கருமாரி வருவதாகச் சொன்னீங்க... அதுபோல கனவில் தெய்வம் பிரத்யட்சமாக வந்து சொன்ன விஷயம் எதுவும் நடந்திருக்கிறதா?”

“நிறைய! குறிப்பா சுவாமியின் காது, பாதம்தான் கனவில் வரும். ஒரு படத்துக்குக் கையெழுத்துப் போடறதுக்கு முன்னாடி ரொம்ப குழப்பமாக, டிஸ்டர்ப்டாக இருக்கும். கனவில் என் அம்மா வருவாங்க. தலையை வருடிக்கொடுத்து, ‘சரின்னு சொல்லு.. நான் பார்த்துக்கிறேன்’னு சொல்வாங்க. அப்படி ஒரு கனவு வந்தால்தான் நான் படமே ஒத்துக்குவேன். இல்லேன்னா எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் ‘நோ’தான்.

சமீபத்தில் நடந்தது... வைகுண்ட ஏகாதசிக்கு ரங்கம் போகணும்னு ரொம்ப ஆசை. டைட் ஷெட்யூல். போகவே முடியல. ஆனால் கனவில் தாயாரும் பெருமாளும் வர்ற மாதிரி இருந்தது. அன்னிக்கு நண்பர் கோபியின் வீட்டுக்குப் போனேன். அங்கே தாயாருக்கும் பெருமாளுக்கும் சந்நிதி வெச்சி ஒரு கோயிலே இருக்கு... சொர்க்க வாசலும் இருக்கு... அன்னிக்கு திறந்து வெச்சிருக்காங்க. அது வழியா நான் போனேன். எனக்குக் கண்ணிலிருந்து தண்ணீர் வழிஞ்சிட்டே இருக்கு. அதே நாளில் இன்னொரு வீட்டில் மிகப் பெரிய ரங்கரையும் தாயாரையும் பார்த்து சேவிக்கும் பாக்கியமும் கிடைச்சது. என்ன ஒரு கொடுப்பினை... சொல்லும்போதே எனக்கு புல்லரிக்குது. இதுமாதிரி என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கு..!” – உணர்வுவயப்பட்ட நிலையில் பேசினார் நளினி.

“ராகவேந்திரர் பக்தை நீங்க. அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்..”

“எனக்கு நினைவு தெரிஞ்சு அஞ்சு வயசிலிருந்து எங்க வீட்டில் துளசி மாடம் சுத்தி வந்து, நமஸ்காரம் பண்ணி, தாத்தாவுக்கு சர்க்கரை வச்சு பூஜை பண்றதைப் பார்த்திருக்கேன். திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலில் எங்கம்மா போய் என்ன கேட்டாலும் அப்படியே நடக்கும். அப்படி ஒரு சக்தி தாத்தாவுக்கு! மந்திராலயம் போக முடியலயேன்னு நீண்டநாள் வருத்தம் எனக்கு. திடீர்னு கோயில்லருந்து... `மந்திராலயம் போற பஸ்ஸில் 6 சீட் கேன்சல் ஆயிடுச்சு வர்றீங்களா’ன்னு கேட்டாங்க. உடனே புள்ளைங்க, அம்மா எல்லாரையும் கூட்டிட்டுக் கிளம்பிட்டேன். பஸ் அங்கே போய் நின்னதும் ஓடிப்போய் தாத்தாவைப் பார்த்த அந்த க்ஷணம் கிடைச்ச பாசிட்டிவ் வைப்ஸ் இருக்கே... வார்த்தையில் சொல்ல முடியாது..”

“கருமாரி அம்மன் நிகழ்த்திய அற்புதம் ஏதேனும்..?”

“எங்க வீட்டில் பெரிய கருமாரி அம்மன் படம் இருக்கு. ஒருமுறை எனக்கும் என் மாமியாருக்கும் நடந்த சின்ன பிரச்னையில், ‘எங்க சாமிக்கெல்லாம் இது ஆகாது’ன்னு சொல்லி அந்தக் கருமாரி படத்தைத் தூக்கிட்டு வந்து வெளியே போட்டுட்டாங்க. திடீர்னு எனக்கு உடம்பெல்லாம் அரிக்க ஆரம்பிச்சுது. நிக்கவேயில்ல.

ஆஸ்பிடல் போறோம்... டெஸ்ட் பண்றாங்க... என்ன சாப்டீங்கன்னு கேட்கிறாங்க... ஒண்ணுமே பண்ண முடியல... ‘எங்கம்மாவைத் தூக்கிப் போட்டுட்டாங்க’ன்னு நான் அழுதேன்.

என் வீட்டுக்காரர் எவ்வளவோ சொல்றார்... ‘என்னை ஒரே ஒரு தடவை கருமாரி கோயிலுக்குக் கூட்டிட்டுப் போங்க’ன்னு சொன்னேன். நீங்க நம்ப மாட்டீங்க, கோயிலுக்குப் போய் வந்ததுமே என் உடம்பில் தடிப்பு, அரிப்பு எல்லாம் மறைஞ்சிடுச்சு. என் மாமியார் பயந்து போயிட்டாங்க.. ‘நீயாச்சு, உன் ஆத்தாளாச்சு!’ன்னு அந்தப் படத்தை என்கிட்டயே கொடுத்துட்டாங்க!”

“சித்தர் வழிபாடு, குரு வழிபாடு, ஜீவ சமாதி தரிசனம் எல்லாம் உண்டா?”

“நிறைய தரிசனம் பண்ணியிருக்கேன். சித்தர்களைக் கண்டிப்பாக வழிபடணும். அவங்க சொன்னால்தான் மேல இருப்பவன் கேட்பான். புரவிபாளையம் சித்தரை தரிசித்திருக்கேன். ‘யார்’ படம் ஷூட்டிங்கின்போது கன்யாகுமரியில் மாயி, பழநியில் சாக்கடை சித்தர்... இப்படிப் பல சித்தர்களின் தரிசனம் கிடைச்சிருக்கு.

மகா பெரியவாளை ரொம்பப் பிடிக்கும். விசிறி சாமியாரிடமும் ஆசி வாங்கியிருக்கேன். நம்ப முடியாத ஒரு தருணத்தில், ரொம்ப நாட்களாக ஆசைப்பட்ட ஷீர்டிக்குப் போய் பாபாவைத் தரிசிச்சேன். அங்கே கொடுத்த முகூர்த்தக் காயை வாங்கிட்டு வந்ததுமே என் பொண்ணுக்கு வரன் அமைஞ்சுது. காட்டுமன்னார்கோவில் அருகில் குப்பங்குழி எனும் இடத்தில் இருக்கும், ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ கொடுத்த நாதமுனியின் திருவரசுக்கு சமீபத்தில் போய், கும்பிட்டுட்டு வந்தேன்.

மொத்தத்தில் ஆன்மிகம் மிகவும் அலாதியானது. அதுக்குள்ள போய்ட்டா... விவரிக்கமுடியாத சந்தோஷம், பரவசம், முக வசீகரம், எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்கிற தன்னம்பிக்கை, தைரியம் எல்லாமும் தானா வந்துடும். ஆன்மிகம் பெரிய கடல். நாமெல்லாம் அதில் ஒரு துளி. அந்தச் சுவையை நாம அனுபவிக்க ஆரம்பிச்சிட்டா வேற எதுவுமே நமக்குத் தேவையில்லை!”

‘என் அப்பா திருச்சிற்றம்பலம்!’ என்று கூறி மலர்ந்த சிரிப்புடன் கைகூப்பி வணங்கினார் ஆத்தாளின் செல்ல மகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism