
ஒரு தலம் 7
சங்க இலக்கியங்களில் `இலவந்திகைப் பள்ளி’ என்று இந்த ஊர் குறிக்கப்படுகிறது. இதையே `ஆதி சிதம்பரம்’ என்றும் போற்றுவர். இங்கு அருளும் ஈசன், `ஆதி சிதம்பரேசர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை ஆதி ரத்தினசபை. இங்கு அறையில் அம்பிகைக்காக ஆடிய ஈசன், அதைச் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார் என்பர். `இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்’ எனும் மன்னன், இந்தத் தலத்தில் மறைந்தார் என வரலாறு குறிப்பிடுகிறது.
* ஈசன், பார்வதிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த தலம் இது. பொய் சொல்லி தண்டிக்கப்பட்ட தாழம்பூ இங்கு சாப விமோசனம் பெற்று, ஈசனின் பூஜைக்கு உரியதாக இருக்கிறது. காகபுஜண்டர் சாபம் நீங்கிய தலமும் இதுதான்.

* மாணிக்கவாசகர், வேத வியாசர், காகபுஜண்ட ரிஷி, மிருகண்டு முனிவர், மயன், பரன், குபேரன், வாணாசுரன், காரைக்கால் அம்மையார் போன்றோர் இங்கு வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள். இலந்தைபுரி, தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்), வியாக்ரபுரம், மங்களபுரி, ஆதி சிதம்பரம், பிரம்மபுரம், சதுர்வேதபுரி என்று பல பெயர்களால் இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது.
* நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்க சந்நிதி இருக்கிறது. ஈசனிடம் வேத ரகசியம் கேட்க வந்த 1,000 முனிவர்களில் 999 பேர் ஈசனிடம் ஐக்கியமாகி, இந்த சஹஸ்ர லிங்கம் உருவானதாகக் கூறுகிறார்கள். எஞ்சி நின்ற ஒரு முனிவரே மாணிக்கவாசகராக மறுபிறப்பு எடுத்தார் என்கின்றன புராணங்கள்.
* இங்குள்ள அக்னி தீர்த்தம், மங்கள தீர்த்தம் ஆகியவை புனிதம் வாய்ந்தவை. கோயிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தம், அதற்கு அருகே மொய்யார்தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை இருக்கின்றன.

* பச்சை மரகதத்தால் உருவான நடராஜர் இந்தக் கோயிலின் சிறப்பம்சம். விலை மதிக்க முடியாத விசேஷத் திருமேனியர் இவர். எப்போதும் சந்தனம் பூசி ஆடும் இந்த நாயகனை, திருவாதிரைக்கு முதல் நாள் அன்று மட்டுமே சந்தனம் இல்லாமல் தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் சாத்தப்படும் சந்தனம் மருத்துவக் குணம்கொண்டது.
* `உலகின் முதல் சிவாலயம்’ என்று சைவப் பெருமக்களால் அழைக்கப்படும் பெருமை கொண்டது உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில். இங்குள்ள ஈசன் - தான்தோன்றீசன், காட்சி கொடுத்த நாயகன், கல்யாண சுந்தரன், கைதை வனேஸ்வரன், பிரளயாகேஸ்வரன், துரிதாபகன், இலவந்திகை ஈசன் என்று பல திருநாமங்கள் கொண்டு இலந்தை மரத்தடியில் வீற்றிருக்கிறார்.
* மூலவர் சுயம்புத் திருமேனியர். சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். இறைவி மங்களாம்பிகை திருக்கரத்தில் ருத்திராட்சம் ஏந்தியபடி காட்சி அருள்கிறாள். ராவணன், மண்டோதரி வணங்கிய தலம், மகாபாரத காலத்து மன்னன் பரீட்சித்து வழிபட்ட ஆலயம் இது எனும் தகவல்கள் மூலம் இந்தக் கோயிலின் தொன்மையை அறியலாம். அதனாலேயே `இது மண் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய கோயில்’ என்பர்.

* சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது உத்திரகோசமங்கை ஆலயம். இந்த ஊரின் மண்ணை மிதித்தாலே முக்தி என்பர். இங்குதான் தேவர்களால் முதன்முறையாக ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது என்கின்றன ஞான நூல்கள்.
* ராவணன், மண்டோதரி திருமணம் இங்குதான் நடைபெற்றது. வெகு நாள்கள் குழந்தை இல்லாமல் இருந்த ராவணன் மண்டோதரி தம்பதிக்கு, இங்குள்ள ஈசனே குழந்தையாக மாறி மடியில் தவழ்ந்தார் எனும் தகவலும் உண்டு.
* மகிமைமிகு ஈசனின் திருவிளையாடல்களில், அவர் வலைவீசி மீன்பிடித்த விளையாடல் நடைபெற்ற தலம் இதுதான். மீனவப் பெண்ணான சக்தியை ஈசன் இங்குதான் கரம் பிடித்தாராம்.
* மாணிக்கவாசகர் பிறப்பெடுக்கக் காரணமான தலம் இதுவே. பாண்டிய நாட்டு 14 சிவத்தலங்களில் இதுவே மூத்தது என்கின்றன புராணங்கள். நவகிரகங்கள் ஆலய வழிபாட்டில் இல்லாத காலத்தில் தோன்றியது என்பதால் உத்திரகோசமங்கை கோயிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் கோள்கள் மட்டுமே இருக்கின்றன.
* அருணகிரிநாதரின் திருப்புகழால் பாடப்பெற்ற முருகன் இங்கு இருக்கிறார். இங்கு முருகனுக்கு வாகனம் யானை. மாமன் சீராக ஐராவதத்தை இந்திரன் இந்தத் தலத்தில் அளித்தான் என `ஆதி சிதம்பர மகாத்மியம்’ எனும் நூல் கூறுகிறது.

* `மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும்’ என்பார்கள். அவ்வளவு நுட்பமான மரகதக்கல்லில் உருவான இங்கிருக்கும் நடராஜர் திருமேனி ஐந்தரை அடி உயரம் கொண்டது. இது, உலக அதிசய சிலை என்றும் போற்றப்படுகிறது.
* இங்கு அன்றாடம் மதிய வேளையில் நடைபெறும் மரகதலிங்கம் - ஸ்படிக லிங்க அபிஷேகம் விசேஷம். இங்கிருக்கும் தலவிருட்சமான இலந்தை 3,000 ஆண்டுகளைக் கடந்தது என வியந்து கூறுகிறார்கள்.
* இங்கு அதிகாலை பூஜையில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம். அதேபோல், மாணிக்கவாசகர் இறவா நிலை பெற்று, ஈசனுக்கு அருகே அமர்ந்து அவருக்கு அன்னம்பாலிப்பதாக நம்பப்படுகிறது. திருப்பெருந்துறைக்கு அடுத்து மாணிக்கவாசகருக்கு சுவாமி உருவக் காட்சி தந்த இடமும் இதுவே. மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் 38 இடங்களில் இந்தத் தலத்தைப் போற்றியிருக்கிறார்.
* ராமேஸ்வரம்போலவே இந்தக் கோயிலின் பிராகாரமும் மண்டபங்களும் அழகும் பிரமாண்டமும் மிளிரத் திகழ்கின்றன. தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பால பைரவர் என அநேக சந்நிதிகள் இங்கு இருக்கின்றன. காரணாகம முறைப்படி இங்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
* ஒரே நாளில் மூன்று வேளையும் மங்களநாதரை தரிசித்தால், பிறப்பிலா பேரின்ப நிலை கிட்டும் என்பது நம்பிக்கை. பித்ரு சாபம், திருமணத் தடை, மழலைப் பேறு இல்லாமை, கல்வி-கலைகளில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் இடையூறு போன்றவை விலக, இங்கு வந்து வழிபடலாம். இரவு 7:30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும்; மாங்கல்ய வரம் கிடைக்கும்; பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.
* மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்துக்கு 10 கி.மீ முன்பாக வலப்புறமாகப் பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், 15 கி.மீ தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம். அதிகாலை 5 முதல் மதியம் 1 மணி வரை; பிற்பகல் 4 முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.