Published:Updated:

அகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...

அகத்தியர்
பிரீமியம் ஸ்டோரி
News
அகத்தியர்

பரோபகாரமே பக்தி; மற்றதெல்லாம் வேஷம். அன்பு கொண்ட உயர்நிலையே ஆன்மிகத்தின் அடிப்படை. எப்போதும் எங்கும் அன்பாக இருக்க குருவருள் துணை வேண்டும்.

ஒரு குரு, இறைவனுக்குக் கீழ்ப்படிந்த சீடனை ஞானவானாக்கிவிடுவார். ஆனால் ஒழுக்கமில்லாத சீடனை, அவன் எத்தனை திறமையானவனாக இருந்தாலும், குருவால் அவனை ஞானம் அடைய வைக்க முடியாது. அதனால்தான் ‘ஆயிரம் மடங்கு திறமையைவிட ஒரு மடங்கு விசுவாசம் பெரிது’ என்கின்றன ஞான நூல்கள்.

குரு என்ற வார்த்தையைச் சொன்னாலே நமக்கு சட்டென ஞாபகத்தில் வருபவர் அகத்தியப் பெருமான். தமிழும் தமிழ் முறை வைத்தியமும் அகத்தியப் பெருமான் அருளால் செழித்தன. அவருக்குப் பின்னும் அவர் மாணாக்கர்களால் வளர்ந்தன. செம்புட்சேய், வையாபிகர், அதங்கோட்டாசான், அவிநயர், காக்கைப்பாடினியார், தொல்காப்பியர், தூரலிங்கர், வாய்ப்பியர், பணம்பாரனார், கழாரம்பமர், நற்றத்தார், வாமனர் என்ற 12 சீடர்களும் அகத்தியருக்குப் பெருமை சேர்த்த மாணவ முத்துக்கள்.

அகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...

அகத்தியரும் அவர் மாணவர்களும் தங்கியிருந்து மந்திரங்கள் முழக்கி வழிபட்ட ஆலயமொன்று திருவண்ணாமலைக்கு அருகே உள்ளது என்றும், அது தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது என்றும் கேள்விப்பட்டு அங்கு கிளம்பினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையனூருக்கு அருகே அமைந்துள்ளது அவலூர்பேட்டை. அவரியூர் என்று பழங்காலத்தில் போற்றப்பட்ட இந்த ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், ஈராயிரம் ஆண்டுகள் தொன்மையுடையது என்கிறார்கள். திருவண்ணாமலையில் அடி-முடி தேடிய திருமாலும் பிரம்மனும், உஷ்ண வடிவிலான ஜோதிமலை குளிர்ந்து லிங்க வடிவாக மாறும்வரை, இந்த ஊரிலிருந்தே சிவலிங்க வழிபாட்டை மேற்கொண்டார்களாம். சித்தர்களின் தலைவனாம் அகத்தியப்பெருமான் தென்னாட்டுப் பயணத்தின்போது இங்கு வந்து தங்கி வழிபட்டார் என்கிறது, தலவரலாறு.

அகத்தீஸ்வரர்
அகத்தீஸ்வரர்

புதுச்சேரி உழவர்கரைக்குச் செல்லும் முன்பு அகத்தியர், இந்த ஊரில் ஆசிரமம் அமைத்து தன் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணங்களைப் போதித்தார் என்கிறார்கள். தமிழ் இலக்கண பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு, இந்த ஆலய ஈசனே விளக்கம் அளித்து அகத்தியரை வழிநடத்தினார் என்றும் ஊர்ப் பெரியவர்கள் கூறுகிறார்கள். அகத்தியர் வழிபட்ட தலமென்பதால், ஈசனும் அகத்தீஸ்வரர் என்றானார். இந்த ஊரும் அகத்தியபுரி என்ற பெயரில் முன்பு வழங்கப்பட்டது.

அகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...

பின்னர், சோழர் காலத்தில் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது. மீண்டும் காலவெள்ளத்தில் ஆலயம் சிதைந்துபோனது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் அச்சுதேய தேவமகாராஜா என்பவர், 1519-ம் ஆண்டில் திருவேங்கடம் என்பவரின் பொறுப்பில் இந்த ஆலயத்தைப் புனரமைத்து பல திருப்பணிகள் செய்தார் என கல்வெட்டுகள் கூறுகின்றன. மீண்டும் இந்த ஆலயம் 1949-ம் ஆண்டில் புனரமைக்கப்பட்டது. அதன்பிறகு, இப்போது இந்த ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பால் 2012-ம் ஆண்டு முதல் புனரமைக்கப்பட்டுவருகிறது. 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும் போதுமான அளவு பொருள் சேராததால் இன்னமும் கோயில் திருப்பணி முழுமை அடையாமல் நிற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடைக்காடர், கீரைச் சித்தர், இலைச் சித்தர், மிளகுச் சித்தர், பழநிச் சித்தர் ஆகிய சித்தர் பெருமக்கள் வழிபட்ட ஆலயம் இது என்பதால், மிகுந்த சாந்நித்தியத்தோடு விளங்கி வருகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் வீண் மனக்கவலைகள், குழப்பங்கள், சோகங்கள் மறைந்துபோகின்றன என்கிறார்கள் பக்தர்கள். அகத்தியருக்கு ஆசிரியராக வந்து போதித்த ஈசன் என்பதால், இங்கு வந்து வேண்டினால் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்றும் கூறப் படுகிறது.

அழகே வடிவான அறம்வளர்த்த நாயகி இங்கே தர்மத்தின் வடிவாக அருள்பாலிக்கிறாள். நீதி கிடைக்காத மக்கள் இந்த அம்மனை வணங்கிக் கொண்டால் நீதி பெறுவார்கள். அநியாயம் செய்தவர்களை நடுங்கவைத்து திருத்துவாள் இந்த தேவி என்கிறார்கள். பிரதோஷ நாளில் இங்கு நடைபெறும் பூஜைகள் வெகு பிரசித்தமானவை.

அகத்தியருக்குப் பாடம் சொன்ன அரனார்...

பல நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயம் இப்போது ஆள் ஆரவமின்றி, அலங்காரம் ஏதுமின்றி, பாதி எழுந்த நிலையில் உள்ளது.

அனலாக எழுந்த சிவபெருமான் திருவண்ணா மலையில் அருளாட்சி புரிய, ஆங்கார வடிவெடுத்த அங்காளம்மன் மேல்மலையனூரில் ஆட்சி செய்ய, இந்த இரு ஊர்களுக்கும் நடுவேதான் இந்த அகத்தீஸ்வரர் அமர்ந்திருக்கிறார். அந்தத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள், இந்த அகத்தீஸ்வரரையும் ஒருமுறை தரிசித்துவிட்டு வாருங்கள்; அந்தப் பரமேஸ்வரரின் பேரருளால், உங்கள் மனக்கவலைகள் எல்லாம் நீங்கும்; இல்லத்தில் சுபிட்சம் பெருகும்; எதிர்காலம் சிறக்கும்!

பக்தர்கள் கவனத்துக்கு!

ஸ்வாமி : அருள்மிகு அகத்தீஸ்வரர்

அம்பாள் : அருள்மிகு அறம்வளர்த்த நாயகி

பிரார்த்தனைச் சிறப்பு : இங்கு வேண்டிக் கொண்டால் கல்வி கேள்விகளிலும் சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம். அறம்வளர்த்த அன்னை நீதி வழங்கும் தர்மரூபிணியாய் அருள்கிறாள்.

எப்படிச் செல்வது? : திருவண்ணாமலை குபேர லிங்கம் சந்நிதிக்கு வடகிழக்கே 22 கி.மீ தொலைவிலும், மேல்மலை யனூருக்கு தென்கிழக்கே 10 கி.மீ தொலைவிலும் அவலூர்பேட்டை உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.