Published:Updated:

சிம்ம முகத்துடன் லட்சுமிப் பிராட்டி... ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்!

அஹோபிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
அஹோபிலம்

ஒரு தலம் 8

வைணவ திவ்வியதேச தலங்களில் ஒன்று அஹோபிலம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம் இது என்பர். ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் உள்ள இந்தத் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஒன்பது நரசிம்மர்களை தரிசிப்பதால் பெரும்புண்ணியம் வாய்க்கும் என்பார்கள். இதற்கு நிகரான ஒரு தலம் நம் தமிழ் நாட்டிலும் உண்டு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ளது ஆவணியாபுரம். இங்குள்ள மலை யில்தான் ஒன்பது நரசிம்மர்கள் அருள்பாலிக்கிறார்கள். திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் அபூர்வ தலம் இது. நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், ‘தட்சிண அஹோபிலம்’ என்று போற்றப் படுகிறது.

ஸ்வாமியை தரிசிக்க படிக்கட்டுகளில் ஏறிச் செல்லவேண்டும். 30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் சந்நிதியை அடையலாம். மலை இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் அற்புதமாய்க் காட்சி தருகிறார் லட்சுமி நரசிம்மர். அவருடைய மடியில் அமர்ந்து அருளும் லட்சுமிப் பிராட்டியும், சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். இது வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம்.

சிம்ம முகத்துடன் லட்சுமிப் பிராட்டி... ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்!

நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலையில் உள்ள குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே மூலவராக உள்ளார்.

ஆதியில் உக்கிரத்துடன் திகழ்ந்த இவரின் சினத்தைத் தணிக்க பிரம்மன் யாகம் நடத்தினார். யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. அதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தைத் தான் ஏற்று, ஸ்வாமியின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாளாம். பெருமாளுக்காகக் கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார் என்கிறது தலவரலாறு.

மூலவர் சந்நிதியிலேயே நரசிம்மரின் இரண்டு உற்சவர் மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். ஒருவர் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி சமேதராக அருள்பாலிக்க, மற்றொருவர் சிம்மமுகப் பிராட்டியை மடியில் இருத்தியபடி அருள்கிறார். ஆக, இங்கே மூன்று நரசிம்மர்களை தரிசிக்கலாம்.

சிம்ம முகத்துடன் லட்சுமிப் பிராட்டி... ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்!

கருவறையை வலம் வரும்போது, தனிச் சந்நிதியில் அலர்மேல் மங்கைத் தாயாரை தரிசிக்கலாம். தாயார் சந்நிதிக்கு அடுத்தாற்போல் ஒரே சந்நிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கி அருள்காட்சி தருகின்றனர். அவர்களுக்கு அருகில் இரண்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை வழிபட்டால் ராகு, கேது தோஷம் விலகும் என்பது ஐதிகம்.

அடுத்துள்ள சந்நிதியில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் சுதர்சன மூர்த்தி ஆகியோரின் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம். கருவறை வெளிச்சுற்றில் கருவறையை ஒட்டிய சிறிய பாதையில் சென்றால், வசிஷ்ட மகரிஷி பாறையில் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

இங்கே தரிசனம் முடிந்து மேலும் படிகள் ஏறினால், மலை உச்சியில் திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசிக்கலாம். அவரை வலம் வரும்போது, வெளிச்சுற்றில் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், அமிர்தவல்லித் தாயார் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.

சிம்ம முகத்துடன் லட்சுமிப் பிராட்டி... ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்!

ஹிரண்யனை அழித்து தங்களைக் காத்த சிம்ம விஷ்ணுவை இங்கே தேவர்கள் வேதம் சொல்லி வழிபட்டார்கள். இன்றும் அவர்கள் வெப்பாலை மரங்களாக உருமாறி இந்த மலையில் நின்று வழிபட்டுவருகிறார்கள் என்கின்றன ஞானநூல்கள்.

பிருகு முனிவருக்கு நரசிம்மரின் அருளால் முக்திப்பேறு கிடைத்த தலம் இது. முக்தி நிலைக்கு முன்னதாக திருமாலின் ஐந்து வடிவங்களை தரிசிக்க ஆசைப்பட்டார் பிருகு. அதற்கேற்ப, மலைச்சாரலின் மத்திய பாகத்தில் லட்சுமி நரசிம்மராகவும், உச்சியில் யோக நரசிம்மராகவும், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளாகவும், சயனக் கோலத்தில் ரங்கநாதராகவும், வரதராஜராகவும் காட்சியளித்தாராம் இறைவன். எனவே இந்தக் கோயில் பஞ்ச க்ஷேத்திர ஆலயமாகப் போற்றப்படுகிறது. ஆக இங்கு வந்து வழிபட்டால், அகோபிலம், சோளிங்கர், காஞ்சி, திருப்பதி, திருவரங்கம் ஆகிய ஐந்து தலங்களை ஒருங்கே தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

மலையின் மத்தியில் லட்சுமி நரசிம்மர் சந்நிதியில் மூன்று நரசிம்மர்கள், அவரை வலம் வரும் பாதையில் ஐந்து நரசிம்மர்கள், மலைக்கு மேலே யோக நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர்கள் இங்கே அருள்கிறார்கள்.

இந்த ஆலயத்தைச் சுற்றியுள்ள 27 கிராமங்களுக்கும் நரசிம்மரே காவல் தெய்வமாக இருந்து அருள்புரிகிறார். இவரை வணங்கிய பிறகே, இங்குள்ள மக்கள் வேளாண்மையைத் தொடங்குகிறார்கள். விளைந்து வந்த தானியத்தில் சிறு பகுதியைக் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

சிம்ம முகத்துடன் லட்சுமிப் பிராட்டி... ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்!

குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஸ்வாமியின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள்.

சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம்.

திருப்பதியைப் போலவே சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களில் பிரம்மோற்சவம்; வைகாசி மாதம் நரசிம்ம ஜயந்தி; ஆடிப் பூரம்; கிருஷ்ண ஜயந்தி; திருக்கார்த்திகை; வைகுண்ட ஏகாதசி; மாசி மகம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - ஆரணி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ளது ஆவணியாபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது இந்த ஆலயம்.