Published:Updated:

ஐப்பசி அன்னாபிஷேக மகிமைகள்: சோற்றுக்குள்ளே மறைந்திருக்கும் சொக்கநாதரை தரிசிக்கும் நாள்!

ஐப்பசி அன்னாபிஷேகம்

சகலத்தையும் படைத்து, அதற்கான உணவையும் கொடுத்து நாளும் காத்து வரும் ஈசனுக்கு உணவையே அபிஷேகமாக அளித்துக் கொண்டாடும் விழாவே ஐப்பசி அன்னாபிஷேக விழா. நாளை (20-10-21) ஐப்பசி அன்னாபிஷேக விழா எல்லா சிவாலயங்களிலும் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

ஐப்பசி அன்னாபிஷேக மகிமைகள்: சோற்றுக்குள்ளே மறைந்திருக்கும் சொக்கநாதரை தரிசிக்கும் நாள்!

சகலத்தையும் படைத்து, அதற்கான உணவையும் கொடுத்து நாளும் காத்து வரும் ஈசனுக்கு உணவையே அபிஷேகமாக அளித்துக் கொண்டாடும் விழாவே ஐப்பசி அன்னாபிஷேக விழா. நாளை (20-10-21) ஐப்பசி அன்னாபிஷேக விழா எல்லா சிவாலயங்களிலும் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

Published:Updated:
ஐப்பசி அன்னாபிஷேகம்
அரிசி என்ற சொல்லிலேயே அரியும் சிவனும் அமர்ந்துவிட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். நெல், அரிசியாகும், அரிசி சோறாகும், சோற்றுக்குப் பிறகு எதுவுமே இல்லை. அது தேகத்தில் சக்தியாகி விடும். அதைப்போலவே ஆன்மா பிறப்பெடுக்கும், அது பல ஜீவன்களாக உலவும். மீண்டும் இறைவனோடு கலந்துவிடும். இந்த தத்துவத்தை எடுத்துரைக்கவே ஐப்பசி அன்னாபிஷேகம் ஒரு ஐதீக விழாவாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாளை (20-10-21) ஐப்பசி அன்னாபிஷேக விழா எல்லா சிவாலயங்களிலும் அனுஷ்டிக்கப்பட உள்ளது.
அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம்

சோறாகப் பொங்குவதும் சிவம்; அதை உண்பதுவும் சிவம்; அதை வயிற்றில் அக்னீயாக ஏற்றுக்கொண்டு, திவ்ய சக்தியாக தேகம் எங்கும் விநியோகிப்பதும் சிவம். ஒவ்வொரு அரிசியும் லிங்க வடிவம். வயிற்றில் தோன்றும் ஜடராக்னியும் சிவவடிவம். சிவத்தை சிவத்தைக் கொண்டே ஆற்றுவது தான் அன்னதானம். அது ஐப்பசி நாளில் ஈசனுக்குப் படையலாக சமர்ப்பிக்கப்பட்டு அது மனிதர்களுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் வழங்கப்படுவது சிறப்பானது என்கிறார்கள் பெரியவர்கள்.

வேள்வி வளர்த்து அந்தந்த தேவர்களுக்கென சமித்துகளை தீயில் இட்டு பூரணாஹுதி அளித்து தேவர்களின் பசியைப் போக்குவது போல, ஒவ்வொரு மனிதர்களும் உரிய நியமப்படி நெற்றியில் நீறு அணிந்து உண்ண அமர வேண்டும். உண்பதற்கு முன் அன்னத்தைச் சுற்றி நீர் தெளித்து, சிவ மந்திரங்களை உச்சரித்து, உடம்பில் உள்ள பஞ்சப் பிராணன்களுக்கு அந்த உணவு சக்தியையும் சாந்தியையும் அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, முதலில் கொஞ்சமாய் நீரைப் பருகி, தொண்டைக் குழாய்களை நனைத்துக் கொண்டு உண்ணத் தொடங்க வேண்டும். வேள்வியில் நெருப்பை எழுப்பி முறையாக சமித்துகளை சமர்ப்பிப்பதை போல நம் வயிற்றில் இருக்கும் அக்னிக்கும் உணவை வெகு பவ்யத்தோடு ஒரு வேள்வியைப் போலவே அளிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்னாபிஷேக விழா
அன்னாபிஷேக விழா

சகலத்தையும் படைத்து, அதற்கான உணவையும் கொடுத்து நாளும் காத்து வரும் ஈசனுக்கு உணவையே அபிஷேகமாக அளித்துக் கொண்டாடும் விழாவே ஐப்பசி அன்னாபிஷேக விழா. உடல் பலத்தை அளிப்பதோடு மட்டுமின்றி ஞான மோட்சத்தையும் அநுக்ரஹிக்கும் அன்னத்தை ஈசனின் வடிவமாகவே எண்ணுவதால் இந்த விழா முக்கியத்துவம் பெறுகிறது. சோற்றால் மட்டுமே மனிதன் வாழ்வதில்லை. என்றாலும் சோறு இல்லாமலும் வாழ முடியாது. அனைத்து நல்ல பண்புகளுக்கும் ஆகாரமே ஆதாரமாகத் திகழ்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்னத்தை வீணாக்கக் கூடாது, அன்னத்தை அளவுக்கு மிஞ்சியும் உண்ணக் கூடாது; அன்னத்தைப் பழிக்கக் கூடாது; கட்டாயம் அன்னதானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பஞ்ச பூதங்களும் சேர்ந்த வடிவே அன்னம். அதனால் பஞ்ச பூதங்களின் தலைவனான ஈசனுக்கு அதை சமர்ப்பிக்கிறோம். 72 வகை திரவிய அபிஷேகங்களில் அன்னத்தால் செய்யப்படும் அபிஷேகம் உயர்வானது. இது ஐப்பசி பௌர்ணமியில் மட்டுமே செய்விக்கப் படுவது. அன்ன அபிஷேகத்தை மட்டுமே ஒன்றரை மணி நேரம் வரை கூட அதே கோலத்தில் வைத்திருக்கலாம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

அன்னபூரணி
அன்னபூரணி
'அன்னமும் பிரம்மம்' என்று சாஸ்திரங்கள் ஆராதிப்பதால் அதைக் கொண்டும் அந்த பரப்பிரமத்துக்கே ஆராதிக்கும் இந்த அற்புத விழாவில் கலந்து கொண்டு சிவனுக்கு நைவேத்தியமான அன்னத்தை உண்பதால் அன்னம் தொடர்பான தோஷங்கள், பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் சிவலிங்க வடிவம் என்பதால் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈசனை தரிசிக்கும்போது கோடிலிங்கத்தை தரிசித்த புண்ணியமும் பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சந்திரனின் சாபம் தீர்த்த நாள் ஐப்பசி பௌர்ணமி என்பதால், சந்திரனே தனது விருப்ப தானியமான அரிசி கொண்டு இந்த ஐப்பசி அன்னாபிஷேகத்தை முதன்முதலாக நடத்தினார். ஐப்பசி மாத முழு நிலவு நாளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து தனது பூரண கதிர்களை வீசுகிறான். இந்த நாளில் பக்தர்கள் ஈசனைப் பூசிப்பதால் பூரண சந்திர கலையைப் பெற்று மனம் சம்பந்தமான சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்

அன்னபிஷேகத்தைக் கண்டவர் வாழ்வில் இன்பமும் நிம்மதியும் உண்டாகும். அதனால்தான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்றானது. அன்ன அபிஷேகத்தைக் கண்டாலோ, அன்று ஆலயத்துக்கு அரிசி தானம் அளித்தாலோ அவர்கள் ஈரேழு தலைமுறைகளும் பசியின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த நாளில் ஈசனை தரிசித்து அன்னப் பிரசாதம் உண்பவர்களின் தொழில், வியாபாரப் பிரச்னைகள் தீர்ந்து நன்மை உண்டாகும். குழந்தை வரம் கிட்டும். உணவால் உண்டான நோய்கள் தீரும். தேகம் வலிமை பெற்று ஆரோக்கியம் வளரும்.

சோற்றுக்குள்ளே மறைந்திருக்கும் சொக்கநாதரை இந்நாளில் தரிசித்து சகல சௌபாக்கியங்களும் பெறுவோம். சிவாய நம!