உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டிய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன். உலக வரலாற்றிலேயே மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு திக்கெட்டும் வெற்றியைக் குவித்த மாமன்னன் ராஜராஜன் என்று வரலாறு போற்றுகிறது. முறையான நிர்வாகம், சிறப்பான ஆட்சி என எல்லாத் தரப்பிலும் பெயர் பெற்று விளங்கியவன் முதலாம் ராஜராஜன். அதுமட்டுமா, காலம் கடந்தும் அவன் பெயர் சொல்லும் காவியப் பெட்டகமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி, தனக்கு மரணமே இல்லை என்பதை உலகறியச் செய்த சோழ மாமன்னன் ராஜராஜனுக்கு 1036-ம் ஆண்டு சதய விழா நாளை (13-11-21) நடைபெற உள்ளது.

அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜராஜன் சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் 947-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்கிறது வரலாறு. அதே சதய நட்சத்திரத்தில் 985-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் என்கிறது வரலாறு. தென்னகம் முழுக்க இருந்த பல செங்கல் தளிகளை கற்றளிகளாக மாற்றிய பெருமைக்கு உரியவன் ராஜராஜன். கோயிலில் வெட்டிய பல கல்வெட்டுகளை பாடல் வடிவில் வெட்டிய முதல் மன்னன் என்ற பெருமைக்கு உரியவன். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவன் ராஜராஜன். தஞ்சை கோயில் வடித்தெடுக்கவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன் காசு கொடுத்தவர்களைக்கூட மறக்காமல் கல்வெட்டில் பொறிக்க வைத்த நன்றி மறவாதப் பேரரசன் ராஜராஜன்.

உழவுக்கும் வணிகத்துக்கும் துணை நின்று பல முன்னேற்ற வழிகளை ஏற்படுத்தித் தந்தவன் ராஜராஜன். சாலை வசதிகளை தென்னகம் முழுக்க சீர் செய்து தந்தவன் ராஜராஜன். குடவோலை முறைப்படி உலகிலேயே முதன்முதலாக ஜனநாயக முறைப்படி கிராம தலைவர்களை தேர்ந்தெடுத்தவன். 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால்தான் அவன் புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது. இவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே சதய விழா கொண்டாடப்படுகின்றது. சதய விழா கடந்து வந்த பாதை சுவாரஸ்யமானது.
'சதய நாள் விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன்' என்ற கலிங்கத்துப் பரணியின் வார்த்தைகளுக்கு ஏற்ப ராஜராஜன் பிறந்தது ஒரு சதய நாளில் என்று வரலாற்று அறிஞர்கள் கணித்து ஆரம்பத்தில் ஒவ்வொரு மாத சதய நாளிலும் ராஜராஜனின் விழாவைக் கொண்டாடினார்கள். பிறகு திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றின்படி அங்கு ராஜராஜ சோழரின் அணுக்கியான பஞ்சவன் மாதேவி ராஜராஜர் பிறந்த சதய நாளில் விழா கொண்டாட ஏற்பாடு செய்கிறார். அனைத்து சதய நாளிலும் 10 கலம் நெல்லை நிவந்தமாக அளித்த பஞ்சவன் மாதேவி சித்திரை மாத சதய நாளுக்கு மட்டும் 256 கலம் நெல்லை நிவந்தமாக அளித்து சிறப்பாகக் கொண்டாடினார் என்று தெரிவிக்கிறது. அந்த கல்வெட்டின்படி சித்திரை சதயமே ராஜராஜரின் சதய நாள் விழா என்று கொள்ளப்பட்டது. இதற்கு மேலும் ஆதாரமாக திருவையாறு உலோக மாதேவிஸ்வரம் கோயில் கல்வெட்டு ஒன்றும் சித்திரை சதயமே ராஜராஜரின் சதய நாள் என்றும் கூறியது. அதேபோல் எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில் கல்வெட்டும் சித்திரை சதயமே சதய விழா நாள் என்றும் குறிப்பிட்டது.

இந்த நிலையில் தான் திருவாரூர் மூலட்டான திருச்சுற்று சுவரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்று 'அய்யன் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்' என்ற ராஜராஜரின் மைந்தர் ராஜேந்திரச் சோழன் கட்டளையிட்ட தகவலின்படி ராஜராஜ சோழரின் சதய நாள் விழா ஐப்பசி மாதமே என்று முடிவு செய்யப்பட்டது. இதை 'திரு அவதாரம் செய்தருளின ஐப்பசி திங்கள் சதய திருநாள்' என்ற திருவெண்காட்டுக் கல்வெட்டு உறுதிப்படுத்தியது.
அது முதல் ஐப்பசி சதய விழா மாமன்னன் ராஜராஜனைப் போற்றும் விதமாக தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறகு அது மாவட்ட அளவில் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தெற்காசியா முழுமையும் தனது படை பராக்கிரமத்தால் கட்டியாண்ட இம்மாபெரும் மன்னன், நமது வீரத்தின் அடையாளமாகக் கொண்டாப்பட வேண்டியவன்.

ஐப்பசி சதய நாளான நாளை தஞ்சையில், ராஜராஜனின் திருவுருவத்துக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதி உலா, தஞ்சைப் பெருவுடையாா் - பெரியநாயகி மூர்த்தங்களுக்குப் அபிஷேகம், பெருந்தீப வழிபாடு, இசை-இலக்கிய-நாட்டிய நிகழ்ச்சிகள் எனக் களை கட்டும். அதனினும் முக்கியமானது தமிழர்கள் அனைவரும் அவனைக் கொண்டாட வேண்டும் என்பதே. மற்ற தேசங்கள் எல்லாம் கண்டறியப்படாத அல்லது வளர்ச்சியுறாத காலத்தில் நிர்வாகம், ஜனநாயகம், மராமத்துப் பணிகள், கட்டடக்கலை, இலக்கியம், சமய நல்லிணக்கம்... என அனைத்துத் துறைகளிலும் முன் மாதிரியாக நின்ற மாமன்னன் ராஜராஜரின் புகழை நெஞ்சில் நிறுத்தி நினைவில் கொண்டாடுவோம்.