Published:Updated:

விஜயதசமி நாளில் ஸ்ரீ சரஸ்வதி கோயிலில் நடந்த அட்சராப்யாசம்!

விஜயதசமியன்று ஸ்ரீ மஹா சரஸ்வதி ஆலயத்தில் கல்வி பயில தொடங்கும் குழந்தைகளுக்கு அட்சராப்யாசம் செய்துவைக்கும் நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

சரஸ்வதி விஜயதசமி
சரஸ்வதி விஜயதசமி

கல்வி, ஞானம், கலைகள் யாவிலும் தேர்ச்சி, நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகள் அருளாசி பெறும்நாளான விஜயதசமியன்று ஸ்ரீ மஹா சரஸ்வதி ஆலயத்தில் கல்வி பயில தொடங்கும் குழந்தைகளுக்கு அட்சராப்யாசம் செய்துவைக்கும் நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார்
நாமக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் முப்பெரும் தேவியர்களுள் ஒருவரான ஸ்ரீசரஸ்வதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கல்விக் கடவுளான சரஸ்வதிதேவி ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். குழந்தைகள் முதன்முதல் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலத் தொடங்கும் முன் விஜயதசமி நாளில் குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்து வருவர்.

கல்விக்கு அதிபதியான ஸ்ரீசரஸ்வதியிடம் குழந்தையின் பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சித்து அம்பிகை கடாட்சம் பெறுவர். அதன்பின் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓத, நெல்மணிகள் பரப்பிய தாம்பாளத்தில் குழந்தையின் ஆட்காட்டி விரலைப்பிடித்து பிள்ளையார் சுழி போடவைப்பர். சிலேட்டில் குழந்தையின் விரலைப்பிடித்து ஹரி ஓம்..அ...ஆ.. எழுதவைத்து குழந்தையின் காதில் மூன்று முறை ஹரி ஓம் எனப் பெற்றோர் சொல்ல அட்சராப்யாசம் நிகழ்வு நிறைவுபெறும்.

இத்தகைய தெய்வீக நிகழ்வில் பங்குபெற நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வருகை தந்து நீண்ட கியூவில் காத்திருப்பர். எனவே, இந்த நிகழ்ச்சியில் விகடன் சார்பில் வாசகர்களின் குழந்தைகள் எளிதாகப் பங்கேற்கும் வகையில் கோயில் நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தோம். நாமக்கல், சேலம், சென்னை, வேலூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 21 குழந்தைகளை அவர்களது பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் விகடன் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. அறங்காவலர் குழுத் தலைவர் பிச்சை தலைமையில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் சிறப்பு வரிசையில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்ரீ சரஸ்வதிதேவியிடம் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தபின் காருண்ய சிவாச்சாரியார் எல்லா குழந்தைகளுக்கும் அட்சராப்யாசம் செய்து வைத்தார்.

விஜயதசமி
விஜயதசமி

நாமக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் - சுமதி தம்பதியர் கூறுகையில், ``எங்க குழந்தை குகன் பிறந்ததுமே இந்தக் கோயிலுக்கு வந்து கலைவாணியின் அனுக்கிரஹம் பெற்ற பின்பே பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்தோம். ஆனால், அங்கு எப்படி போவது? கூட்டத்தில் இது சாத்தியமா? என்று தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் விகடன் இணையதளத்தில் அறிவிப்பு பற்றிக் கேள்விப்பட்டு பதிவுச் செய்தோம். இதனால் இன்று எங்க ஆசைக்கனவு ரொம்ப ஈசியா நிறைவேறிடுச்சி. இவ்வளவு பெரிய கூட்டத்தில் கண்குளிர அம்பாள் தரிசனத்துடன் எங்க மகனை, அவள் சந்நதியில், அவள் திருநாமம் எழுத வைத்த விகடனுக்கு எப்படி நன்றி சொல்வதன்றே தெரியலை" என்று நெகிழ்ந்தனர்.

அனைத்துக் குழந்தைகளையும் ஆசீர்வதித்ததுடன்,பெற்றோர்க்கு புத்தகம், சரஸ்வதி படம் மற்றும் பிரசாதம் தந்து வழியனுப்பினார், அறங்காவலர் குழுத் தலைவர் பிச்சை. எழுதும்போது பயத்தில் ரகளை செய்த ஸ்வேதாவின் பெற்றோரான காரைக்கால் யுவராஜன் - சசிரேகா தம்பதியர், ``இந்நாளை எங்க வாழ்நாளில் மறக்க முடியாது" என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறி விடைபெற்றனர். வாசகர்களின் குழந்தைகள் கல்விப் பயணத்தை ஸ்ரீ சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் தொடங்கிவைக்க எல்லாவிதத்திலும் விகடனுக்கு உதவிய கோயில் அறங்காவலர் குழுவிற்கு சிறம்தாழ்ந்த நன்றிகள்.

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

விஜயதசமி
விஜயதசமி

இதன் பொருள்:

மனிதர்களுக்குப் பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.