Published:Updated:

சகல தோஷங்களையும் தீர்க்கும் எமதண்டீஸ்வரர்!

எமதண்டீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
எமதண்டீஸ்வரர் ( எமதண்டீஸ்வரர் )

எமனுக்காக கங்கை பெருகிய ஆலகிராமம்

சிவபெருமான் காலனை உதைத்து பக்தன் மார்க்கண்டேயனுக்கு அருளிய தலம் திருக்கடவூர் என்பது நமக்குத் தெரியும். ஈசன் மீது தன் பாசக் கயிற்றை வீசிய பாவத்தினால் துன்புற்ற எமனுக்கு, சிவனார் காட்சி தந்து கங்கையை வருவித்து அவனுடைய பாவ - தோஷத்தை நீக்கி அருளிய திருத்தலம் எது தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப் பட்டிலிருந்து உட்புறமாகச் 4 கி.மீ. தூரம் சென்றால் வரும் ஊர் ஆலகிராமம். இதுவே எமதருமனின் பாவம் விலகிய தலமாகும். இங்கு சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கிறார், அருள்மிகு எமதண்டீஸ்வரர். தமிழகத்தின் மூத்த விநாயகர் காட்சி தருவதும் இந்தக் கோயிலில்தான் என்பது சிறப்பம்சம்.

எமதண்டீஸ்வரர் ஆலயம்
எமதண்டீஸ்வரர் ஆலயம்ஊரின் மையப்பகுதியில், சாலையின் அருகிலேயே அமைந் துள்ளது, ஸ்ரீஎமதண்டீஸ்வரர் ஆலயம். பழைமை மாறாமல் புனரமைக்கும் பணி நிறைவுறும் நிலையில் இருப்பதை, மூன்று நிலை ராஜகோபுர தரிசனமே சுட்டிக்காட்டுகிறது. கிழக்கு நோக்கிய ஆலயம். கோபுர தரிசனம் முடித்து உள்ளே நுழைந்தோம். பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

`மார்க்கண்டேயனின் மீது வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்ததால், பெரும் பாவத்துக்கு ஆளானான் எமதருமன். தன்னு டைய தர்மத்தைப் பணியைத் தொடர்ந்து செய்ய முடியாமல் அவதியுற்றான். விமோசனம் தேடி பல தலங்களுக்கும் சென்று சிவ வழிபாடு செய்தான். நிறைவாக ஆற்கரமூர் எனும் இத்தலத்துக்கும் வந்தவன் (தற்போது ஆலகிராமம் எனப்படுகிறது), தவத்தில் மூழ்கினான். சிவபெருமான் மகிழ்ந்து காட்சி தந்தார்.

`ஆறு முறை கங்கையில் நீராடினால் உன் பாவம் நீங்கும்’ என்று அருள்பாலித்ததுடன், அவன் நீராட வசதியாக இந்தத் தலத்திலுள்ள திருக்குளத்தில் கங்கையை வரச்செய்தார்’ என்று தலபுராணத்தை எடுத்துச் சொன்னார் உடன் வந்த உள்ளூர் நண்பர் ஒருவர்.

இவ்விதம் எமனுக்கு அருளிய பெருமான் எமதண்டீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டாராம்.

பராமரிப்புகள் இன்றி பழுதடைந்து கிடந்த ஆலயத்தில், ஊர்ப் பொதுமக்கள் திருப்பணி செய்யத் தொடங்கியபோது விநாயகர், முருகன், விஷ்ணு, லகுலீசுவரர் ஆகிய தெய்வத் திருமேனிகள் கிடைத்தனவாம்.

எமதண்டீஸ்வரர் ஆலயம்
எமதண்டீஸ்வரர் ஆலயம்


இந்தச் சிற்பங்களின் வேலைப்பாடு களும், இத்தல சிவலிங்க வடிவமும் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக உள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து. விநாயகர், லகுலீசுவரர் ஆகிய சிற்பங்களில் திகழ்ந்த கல்வெட்டுகள் அவர்களை வியக்கவைத்தன. முருகன் சிலையில் உள்ள எழுத்துக்களோ, படிக்க இயலாத நிலையில் இருந்தன.

சிற்பங்களில், ஒரே கல்லில் வடிக்கப் பட்டிருக்கும் விநாயகர் திருமேனி மிகவும் பழைமையானது என்கிறார்கள். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிலை கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஆனால், இந்தத் தலத்தின் விநாயகர் சிற்பத்தின் அமைப்பும், அதில் காணப்படும் கல்வெட்டின் தமிழ் வட்டெழுத்துக்களின் வடிவ மும், இச்சிற்பம் கி.பி. 4 அல்லது 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்கும் என்று கருத வைக்கின்றன.

ஆக, பிள்ளையார்பட்டி விநாய கரைவிடவும் பழைமையான வர் இவ்வூர் விநாயகர் என்று உறுதியாகக் கூறுகிறார்கள் அதனால் இந்த விநாயகரை ‘மூத்த விநாயகர்’ என அழைக்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்.

மூத்த விநாயகர்
மூத்த விநாயகர்இந்தச் சிற்பத்தில் `பிரமிறை பன்னூற - சேவிக – மகன் – கிழார் - கோன் கொடுவித்து’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம், கல்வெட்டினைச் செதுக்கிய சிற்பியைக் குறிக்கும் என்கிறார், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன்.

இந்தக் கோயிலில் காணப்படும் விஷ்ணு மூர்த்தியும் விசேஷமானவர். ஒரே பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட மூர்த்தி இவர். நாலரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இந்தச் சிற்பத்தில், ஸ்ரீதேவி-பூதேவி இருவரும் வணங்கித் தொழ, மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்தவராக நெற்றியில் திருநீறு துலங்கக் காட்சி தருகிறார். வேறெங் கும் காண்பதற்கரிய அபூர்வ கோலம் இது என்கிறார்கள்.

விஷ்ணு மூர்த்தி
விஷ்ணு மூர்த்தி


கோயிலின் லகுலீசுவரர் சிற்பமும் சிறப்புமிக்கது. லகுலீசுவரர் என்பது சிவபெருமானின் 28-வது நாமமாகும். அகோரிகள் வழிபடும் தெய்வம் இவர். லகுலம் என்றால் ‘தடி’ எனப்படும். லகுலீசுவரர் வழிபாடு குஜராத்தில் தோன்றி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய இடங்களில் பரவியுள்ளது.

அம்பிகை இங்கே அருள்மிகு திரிபுரசுந்தரி எனும் திருப்பெயருடன் தெற்கு நோக்கி அருள்கிறாள். நான்கு திருக்கரங்கள். இரண்டு கரங்களில் நீலோத்பலம் மற்றும் தாமரையை ஏந்தியபடியும் மற்ற இரு கரங்களால் அபய வரத முத்திரை காட்டியபடியும் காட்சி தருகிறாள்.

அருள்மிகு திரிபுரசுந்தரி
அருள்மிகு திரிபுரசுந்தரி

எமதண்டீஸ்வரரின் லிங்கத் திருமேனி சதுர வடிவ ஆவுடையாருடன் திகழ்கிறது. மார்க்கண்டேயன் கட்டி அணைத்ததைக் குறிக்கும் விதமாக, லிங்கத் திருமேனியின் பின்புறம் குழந்தையின் முழங்கை போன்ற அமைப்பு தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவாமியின் கருவறை அமைப்பும் சதுர்சய விமானமும் பல்லவர் காலக் கட்டடக் கலையை உறுதிசெய்கின்றன.

இத்தலத்தில் இறைவனே சகல தோஷங் களையும் நிவர்த்தி செய்யும் தயாளனாக அருள்கிறாராம். ஆகவே, இங்கே நவகிரக சந்நிதி இல்லை. சனிபகவான் மட்டும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்.

எமதண்டீஸ்வரரின் லிங்கத் திருமேனி
எமதண்டீஸ்வரரின் லிங்கத் திருமேனி


காஞ்சி மகா பெரியவர் 1943, 1952, 1966, 1969, 1972 ஆகிய ஆண்டுகளில், தமது யாத்திரையின்போது இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டுள்ளார் என்பது தனிச்சிறப்பு. கோயிலின் சிறப்பு குறித்து சுந்தரமூர்த்தி சிவாசார்யரிடம் பேசினோம்.

“இந்த ஆலயம் 1,500 ஆண்டுகள் பழமை யானது. பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்தது. இங்கே அன்னை திரிபுரசுந்தரி, வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு விதமான முகபாவங்களோடு பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது விசேஷம்.

பிரதோஷ தினங்களில் மாலை 6.03 – 6.14 இடைப்பட்ட நேரத்தில் ஓரிரு கணங்கள் நந்தி பகவான் சுவாசிப்பதை நம்மால் உணரமுடியும். தற்போது திருப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன என்றாலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக, சில பணிகள் தடைப்பட்டுள்ளன. பல சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.

நந்தி பகவான்
நந்தி பகவான்மார்க்கண்டேயனுக்கு வரமளித்த சித்திரை மாதம் மகம் நட்சத்திர நாள், சோமவார பூஜை, பிரதோஷம், மகா சிவராத்திரி போன்ற முக்கிய நாள்களில் மட்டுமே சிவபெருமானுக்குப் பூஜை செய்து வருகிறோம். ஆகம முறைப்படி தமிழ் வழியில்தான் பூஜைகளைச் செய்கிறோம்” என்றார்.

இத்தலத்தில் திருமணம் செய்வது சிறப்பான தாக கருதப்படுகிறது. மேலும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகிய வைபவங்களையும் இக்கோயிலில் செய்வது விசேஷமாகக் கருதுகிறார்கள்.

மேலும், இங்கிருக்கும் மூத்த விநாயகருக்கு கணபதி ஹோமம் செய்து வழிபட்டால் சகல செல்வமும் நீண்ட ஆயுளும் பெறலாம் என்பதும், இத்தலத்து மூலவரை மனமுருகி வழிபட்டால், சகல தோஷங்களும் தீரும் என்பதும் ஐதிகம்!