சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

அம்மாவுக்காகவே இந்த யாத்திரை!

ஆன்மிகப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகப் பயணம்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஸ்கூட்டரில் ஆன்மிகப் பயணம்!

`அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது ஞானநூல்கள் கற்றுத் தரும் பாடம். அவ்வகையில் பார்வையற்ற நடக்க இயலாத தன் பெற்றோரைத் தன் ஆயுள் முழுக்க தூளியில் அமர்த்தி தோளில் சுமந்து பணி செய்தவன் ச்ரவணகுமாரன். வீடு தேடி வந்த பகவான் விட்டலனையே தம்முடைய பெற்றோர் பணிவிடைகள் முடியும் வரை காத்திருக்கச் செய்தவர் புண்ட்ரீகன். தந்தைக்காக மண வாழ்வையும் அரசப் பட்டத்தையும் துறந்தவர் பீஷ்மர்.

ஆன்மிகப் பயணம்
ஆன்மிகப் பயணம்


இப்படியான தெய்வ மைந்தர்கள் புராணக் காலத்தில் மட்டு மல்ல தற்காலத்திலும் உண்டு என்று நிரூபணம் செய்கிறார் கிருஷ்ணகுமார். கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான இவர், தன் தாயார் தனம்மாளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் விதம், தேசம் முழுவதும் உள்ள பல புண்ணிய தலங்களுக்கு அவரை அழைத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்.

2018-ல் மைசூரில் தொடங்கிய இவர்களின் யாத்திரை காஷ்மீர், ஆக்ரா, பீகார், சத்தீஸ்கார், பஞ்சாப், ஹரியானா, மியான்மர், பூடான், நேபாள், மத்தியபிரதேஷ், உத்தரபிரதேஷ் என பல மாநிலங்களை - இடங்களைக் கடந்து நான்கு ஆண்டுகளாகத் தொடர்கிறது.

நாடெங்கிலும் உள்ள பல புண்ணிய தலங்கள், எளிதில் செல்ல இயலாத க்ஷேத்திரங்கள் எனப் பயணித்து வரும் கிருஷ்ண குமாரை, ராமேஸ்வரம் செல்லும் வழியில் - ராகவேந்திர சுவாமி குருமடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தாயாருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தவர், புன்னகையுடன் நம்மை வரவேற்றுப் பேசினார்.

ஆன்மிகப் பயணம்
ஆன்மிகப் பயணம்
ஆன்மிகப் பயணம்
ஆன்மிகப் பயணம்
ஆன்மிகப் பயணம்
ஆன்மிகப் பயணம்

“என் அப்பா தட்சிணாமூர்த்தி வங்கி ஊழியர். மைசூரில்‌ உள்ள சொந்த வீட்டில் அப்பா, அம்மா, நான், அத்தைமார்கள் என 15 பேர் கூட்டுக் குடும்பமாக வசித்தோம். அப்பா ஒருவரின் சம்பாத்தியம்தான். அப்பா, அம்மாவின் இளமைக்காலம் குடும்ப கடமையைப் பூர்த்தி செய்வதிலேயே கழிந்துபோனது. 2015-ல் அப்பா இறந்துபோனார். அப்போது நான், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணிபுரிந்தேன். மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம். அப்பா இல்லாமல் அம்மா ரொம்பவே கலங்கிப்போனார்.

சிறுவயதில் இருந்தே எனக்கொரு வழக்கம் உண்டு. தினமும் இரவு உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் அம்மாவிடம் பேசிக் கொண் டிருப்பேன். அவரின் குறைநிறைகளை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அப்பா இறந்தபிறகு அப்படி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் `எப்பவாச்சும் ஒருமுறையாவது காஞ்சி, திருவனந்தபுரம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களுக்கெல்லாம் சென்றது உண்டா’ எனக் கேட்டேன்.

`பக்கத்துத் தெருவில் இருக்கும் கோயிலுக்குக் கூட அவ்வளவாக சென்றது இல்லையேப்பா...’ என்றார்கள். அவரின் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த கணம் எடுத்த முடிவுதான் இந்த ஆன்மிகப் பயணம். ‘பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இருக்கும் கோயில்களுக்கெல்லாம் உங்களை அழைச்சுட்டுப் போறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தேன்.

அதை நிறைவேற்ற 2018 ஜனவரியில் வேலையை ராஜினாமா செய்தேன். எங்களின் இந்தப் பயணத்துக்கு ‘மாத்ரு சேவா சங்கல்ப் யாத்ரா’ என்றே பெயர் வைத்தேன். தொடர்ந்து அந்த வருடம் ஜனவரி 16-அன்று எங்கள் யாத்திரை தொடங்கியது. அப்பா எனக்குப் பரிசாகக் கொடுத்த ஸ்கூட்டரிலேயே பயணிக்கிறோம்.

மைசூரிலிருந்து புறப்பட்டு இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான கோயில்களுக்கு அழைத்துச் சென்றேன். நேபாளம், பூடான், மியான்மர், சீன எல்லைகளில் உள்ள இடங்களுக்கும் சென்று வந்தோம். எல்லையில் உள்ள தவாங் நகரத்துக்கும் சென்றுவந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்’’ - பரவசத்தோடு விவரித்த கிருஷ்ணகுமார், பயணத்தில் ஏற்பட்ட சிரமங்களையும் பகிர்ந்துகொண்டார்.

2020 மார்ச் மாதம் பூடானில் இருந்தோம். அப்போதுதான் கொரொனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால் சுமார் ஒன்றரை மாதங்கள் பூடானிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அங்கே சேனல் ஒன்றுக்கு எங்களின் நிலைமையை விளக்கிப் பேட்டி அளித்தேன்.

அதைப் பார்த்த அந்தப் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர், செல்போனில் என்னைத் தொடர்புகொண்டார். அவரின் உதவியோடும் அந்த மாநில முதல்வரின் உதவியோடும் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று, மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். 7 நாள்கள் 2673 கி.மீ. கடந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்து சேர்ந்தோம்.’’

ஆன்மிகப் பயணம்
ஆன்மிகப் பயணம்


``அம்மா எழுபது வயதுக் கடந்துவிட்ட நிலையில், அவரை ஸ்கூட்டரிலேயே அழைத்துச் செல்வது கடினமாகத் தோன்ற வில்லையா?’’

``அப்படியான தயக்கம் எனக்கு இல்லை. மேலும், ஒருமகனாக அம்மாவின் ஒவ்வோர் அசைவையும் வைத்தே அவரின் நிலையைப் புரிந்துகொள்வேன் நான். உடல்நிலை, உபாதை என எதுவாக இருந்தாலும், அதற்கேற்ப உடனடியாக முடிவெடுத்துச் சமாளிக்கிறோம். இடத்துக்கு ஏற்ப, உடல்நிலைக்கு ஏற்ப உணவு வழக்கங்களைப் பழகிக்கொண்டுவிட்டோம். பெரும்பாலும் ஓட்டல் உணவுகளைத் தவிர்த்துவிடுகிறோம்’’ எனக் கூறும் கிருஷ்ணகுமார், திருமணம் செய்துகொள்ளவில்லை; பிரம்மசார்யம் ஏற்றுள்ளாராம்.

அதுபற்றி கேட்டபோது, ``இறைவனைத் தேடும் என் கண்களுக்கு வாழும் தெய்வமாகத் தெரிந்தது அம்மாவும், அப்பாவும்தான். இந்த ஜன்மத்தில் என் வாழ்க்கை என் பெற்றோருக்கானது என்பதை உணர்ந்து பிரம்மசார்யம் ஏற்றேன். ஆரம்பத்தில் பெற்றோர் கடுமையாக எதிர்த்தார்கள்; வருத்தப்பட்டார்கள். பிறகு நான் எடுத்துக்கூறியதும் என் உணர்வுக்கு மதிப்பளித்து மெள்ள மெள்ள ஏற்றுக்கொண்டார்கள்’’ என்கிறார் கிருஷ்ணகுமார்.

``யாத்திரைக்கான செலவு...?’’

``கார்ப்பரேட் நிறுவனத்தில் 13 வருடம் பணிபுரிந்துள்ளேன். அதன் மூலம் கிடைத்த பணம் எங்களுக்குப் போதுமானது. வங்கியில் டெபாசிட் செய்துள்ளேன். மாதம்தோறும் கிடைக்கும் வட்டிப்பணத்தையே யாத்திரைக்குச் செலவு செய்கிறேன். யாத்திரையில் சிற்சில இடங்களில் அங்கேயுள்ள அன்பர்கள், வழிச் செலவுக்குப் பணம் கொடுக்க முன்வருவார்கள். நான் மறுத்து விடுவேன். என் அம்மாவுக்கான இந்தப் பயணத்துக்கான அனைத்துப் பங்களிப்பும் என்னுடையதாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக் இருக்கிறேன்.

மற்றபடி தங்குவதற்கு இடம், எப்போதேனும் பசிக்குச் சிறிது உணவு என எவரேனும் அளித்தால், ஏற்றுக்கொள்கிறோம். வழியெங்கும் அந்தந்தப் பகுதி மக்கள் தரும் ஆதரவும் அன்புமே எங்களின் அடுத்தக்கட்ட பயணத்துக்கான உந்துதலைத் தருகிறது!’’ நம்பிக்கை பொங்க கூறுகிறார் கிருஷ்ணகுமார்.

``காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பல்வேறு மாநிலங்கள், அந்தந்த இடங்களில் உள்ள பண்பாடுகள், கலாசாரம், நாகரீகம், பழக்கவழக்கங்கள், புராணக் கதைகள்... என அணுஅணுவாய் ரசித்தபடி தொடர்கிறது எங்கள் பயணம்’’ எனக் கூறும் கிருஷ்ண குமார், ``காசியில் எடுத்து வந்த கங்கை நீர் என்னிடம் பத்திரமாக உள்ளது. அதை ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகிக்கக் கொடுக்கவேண்டும். அங்கிருந்து நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், திருவாரூர் ஆகிய தலங்களுக்குச் செல்வது எங்கள் திட்டம். இதுவரை 61,000 கி.மீ. தூரம் பயணித்துள்ளோம். மேலும் தொடரப்போகும் பயணத்துக்குக் காவலாய் இருந்து அந்த இறைவனே அருள்புரியவேண்டும்’’ என்கிறார்.

அன்னையின் விருப்பத்தை நிறைவேற்ற தனயன் மேற்கொண்டிருக் கும் இந்த யாத்திரை பரிபூரணமாக நிறைவேற, இறையருள் நிச்சயம் துணை நிற்கும்.

தூக்கம் தியானத்துக்குச் சமமா?

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் தியானத்தின் மகிமைகளை பல்வேறு மேற்கோள்களுடன் எடுத்துரைத்தார்.

‘’அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்’’ என்றார்.

சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், ‘’அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?’’ என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்...

‘’முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!’’

- எல்.ராமு, கோவை-2