Published:Updated:

ராஜயோகம் அருள்வார் ஸ்ரீராஜகோபால சுவாமி! - குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற மன்னார்கோவில்

ஸ்ரீராஜகோபால சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராஜகோபால சுவாமி

- ஆனந்த் பாலாஜி

ராஜயோகம் அருள்வார் ஸ்ரீராஜகோபால சுவாமி! - குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற மன்னார்கோவில்

- ஆனந்த் பாலாஜி

Published:Updated:
ஸ்ரீராஜகோபால சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராஜகோபால சுவாமி
திருவரங்கத்தில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் சூழ அனந்தசயனத்தில் அருள்பாலிக்கும் திருவரங்கநாதருக்கு இணையான மகிமையுடன் திகழ்கிறார், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ராஜகோபால சுவாமி.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆம், இப்பகுதியில் என்றும் வற்றாத ஜீவநதிதாம் தாமிரபரணியும், கடனா நதியும் சூழ்ந்து திகழ, நடுவே இயற்கை எழிலுடன் விளங்குகிறது அருள்மிகு ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில். இக்கோயிலில், அஷ்டாங்க விமானத்தின் கீழ் நின்ற, இருந்த, சயனக் கோலங்களில் அருள்கிறார் ஸ்ரீமந் வேதநாராயணன்.

ராஜயோகம் அருள்வார் ஸ்ரீராஜகோபால சுவாமி! - குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற
மன்னார்கோவில்

காலங்களை வென்று நிற்கும் இந்தப் புண்ணிய பூமியின் புராணம், யுகங்களைக் கடந்த கதையைக் கொண்டது. பல்வேறு காலகட்டங் களில் மன்னர்கள் பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, கம்பீரமாக விளங்கும் இந்தக் கோயில், என்று தோன்றியது என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாதபடி தொன்மை வாய்ந்ததாம்.

சப்த ரிஷிகளில் ஒருவரும் பிரஜாபதிகளில் முக்கியமானவருமான பிருகு மகரிஷி, தட்ச பிரஜாபதியின் மகளான கியாதியை மணந்தார். ஒரு தருணத்தில் கியாதி, அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால், மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் கியாதியின் சிரத்தை அரிந்தார். அதனால் கோபம் கொண்ட பிருகு, ‘நான் மனைவியை இழந்து தவிப்பது போல, பரந்தாமனும் பூமியில் பிறந்து மனைவியை இழந்து தவிக்கட்டும்’’ எனச் சாபம் கொடுத்தார்.

ராஜயோகம் அருள்வார் ஸ்ரீராஜகோபால சுவாமி! - குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற
மன்னார்கோவில்

ஆனாலும் நாழிகை கடந்து சினம் தணிந்த பிறகு, பரந்தாமனைச் சபித்துவிட்டதை நினைத்து மனம் வருந்தினார். பெரும் தவறிழைத்துவிட்டதாகக் கலங்கியவர், அதற்குப் பரிகாரமாய் ஆழ்ந்த தவத்தில் மூழ்கினார். மகரிஷியின் வாக்கு பொய்க்கக் கூடாதே. ஆகவே, அவரின் சாபத்தை ஏற்று ஸ்ரீராமனாய் அவதரித்து சீதையைப் பிரிந்து வாடினார் பகவான். பின்னர் அவளை மீட்ட பிறகு, பிருகு மகரிஷி வேண்டிக்கொண்டதற்கு இணங்கி, அவருக்குத் திருகாட்சி அருளினார்.

அப்படி அவர் காட்சி தந்த பொதிகை மலை தீரத்தில், ஸ்ரீவேத நாராயணனையும் ஸ்ரீதேவி, பூதேவியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பிருகு. அவர் தன்னுடைய கொள்ளுப்பேரனான மார்க்கண்டேயனுடன் இணைந்து வேதங்கள் ஓதி இத்தலத்துப் பெருமாளை வழிபட்டதாகச் சொல்கின்றன புராணங்கள். ஆகவே, இதற்கு `வேதபுரி’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு.

இக்கோயிலில், மூலவரான அருள்மிகு வேதநாராயணன் அருகிலேயே பிருகுவும் மார்க்கண்டேயரும் இருப்பதைக் காணலாம். இந்த மூலவர் சுதை வடிவில் வர்ணகலாபத்துடன் விளங்குகிறார். ஆகவே அவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம். உற்சவமூர்த்தியான ஸ்ரீராஜ கோபால சுவாமியின் அருகில் கருடாழ்வாரும் ஆண்டாளும்... ஸ்ரீவில்லி புத்தூரில் இருப்பதுபோலவே காட்சியளிப்பது சிறப்பு.

ராஜயோகம் அருள்வார் ஸ்ரீராஜகோபால சுவாமி! - குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற
மன்னார்கோவில்

ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் ஸ்ரீவேதவல்லித் தாயார். அருகிலேயே ஸ்ரீயோக நரசிம்மர் சந்நிதியும் ஸ்ரீபுவனவல்லித் தாயார் சந்நிதியும் அமைந்துள்ளன. தாயார் சந்நிதிக்கு அருகில் பரமபத வாசல் உள்ளது.

ஆலயச் சிற்பங்களும், கட்டுமான அமைப்பும் வியக்கவைக்கும் அழகுடனும் நுட்பத்துடனும் திகழ்கின்றன. ராமாயணக் காலத்தில் விபீஷணரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமிது என்கிறார்கள்.

9-ம் நூற்றாண்டில் தென்பகுதியை ஆண்ட சேர பேரரசன் குலசேகரன். இந்த மாமன்னன் அரச பதவி வேண்டாம், பெருமாளின் திருவடியைத் தொழும் பாக்கியமே வேண்டும் என்று இறைப்பணியில் தன்னை அர்ப்பணித் துக்கொண்டு, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானார்.

`நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே...’

திருப்பதியில் படியாகக் கிடந்தாயினும் உன்னைச் சேவிப்பேன் என்று பாடிப் பரவியவர் குலசேகர ஆழ்வார். இவர், தம்முடைய இறுதிக் காலத்தில் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு முக்தியடைந்தாராம்.அவருடைய திருவரசு (ஜீவசமாதி) இத்திருக் கோயிலின் உள்ளே ஸ்ரீகுலசேகரஆழ்வார் சந்நிதியாக விளங்கு கிறது. குலசேகர ஆழ்வார் வழிபட்ட ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன் ஆகியோர் அர்த்த மண்டபத்தில் அருள்கின்றனர்.

ராஜயோகம் அருள்வார் ஸ்ரீராஜகோபால சுவாமி! - குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற
மன்னார்கோவில்

குலசேகர மன்னன் திருப்பணிகள் பல செய்து வந்ததால், அவரையும் இத்தலத்தின் ஸ்ரீராஜகோபாலனையும் தொடர்ப்புப் படுத்தி, `மன்னனார் கோவில்’ என்று அழைக்கப்பட்டதாம் இவ்வூர். தற்போது அப்பெயர் மருவி `மன்னார்கோவில்’ என்று வழங்கப் படுகிறது. திருக்கோயிலின் பிராகாரத்தில் ஸ்ரீகண்ணன், ஸ்ரீகாட்டுமன்னார், ஸ்ரீசக்கரத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீமணவாள மாமுனிகள் ஆகியோர் அருள்கின்றனர்.

கி.பி. 1024-ல் ராஜேந்திர சோழனால் இந்தக் கோயிலுக்குப் பல சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. ஆகவே இத்தலம் ராஜேந்திர விண்ணகரம் எனச் சிறப்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டன- வெளிப் பிராகார சுவர்கள் கட்டப்பட்டன.கோயிலின் பந்தல் மண்டபத்தில் முத்துகிருஷ்ண நாயக்கர் சிலையும், அவருடைய தளவாய் ராமப்பய்யன் சிலையும் உள்ளன. மண்டப முகட்டில் பாண்டியர்களின் மீன் சின்னத்தையும் காண முடிகிறது.

ஸ்ரீராமானுஜருக்குக் குருவாக விளங்கிய பெரியநம்பிகளின் பரம்பரையினர் சுமார் 900 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் இறைப் பணிகள் செய்து வருகின்றனர். குலசேகர ஆழ்வார் சந்நிதியில் உள்ள கல்வெட்டு இதைப்பற்றி குறிப்பிடுகிறது. அந்த வம்ச வழியில் வந்த நரசிம்மகோபாலன், தற்போது பகவானுக்கான சேவைகளை செய்து வருகிறார்.

இத்தலத்துக்கு வேறொரு சிறப்பும் உண்டு. நாலாயிரதிவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய வாதிகேசரி ஸ்ரீஅழகிய மணவாள ஜீயர் அவதரித்ததும் இந்தத் தலத்தில்தான். மேலும், திருநெல்வேலி- பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்ரீவேத நாராயணன் கோயிலுக்கு மூலமாக விளங்குவது இந்தத் திருக்கோயில் என்றும் சிலிர்ப்போடு தகவல் சொல்கிறார்கள், பக்தர்கள்.

நெல்லைச் சீமைக்குச் செல்வோர், அவசியம் இந்தத் தலத்துக்க்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்; பெருமாளின் திருவருளால் உங்கள் வாழ்வில் ராஜயோகம் கூடிவரும்; தடைகள் நீங்கி, முன்னேற்றம் உண்டாகும்.

எப்படி செல்வது?: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது மன்னார் கோவில். அம்பாசமுத்திரம் நகரிலிருந்து பேருந்து, மினிபஸ் வசதிகள் அடிக்கடி உண்டு.