Published:Updated:

`எரிமலையில் ஏறிச் செல்லும் எறும்பு!'

துளித் துளிக் கடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
துளித் துளிக் கடல்கள்

நம்பிக்கைக் கதைகள் எஸ்.ராஜகுமாரன்

ஜப்பானில் ஃப்யூஜி எரிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பௌத்த துறவி வசித்து வந்தார். அவரது அன்றாடப் பணிகளில் ஒன்று, நடந்து சென்று எரிமலையின் அருகே அமர்வது. சிறிது நேரம் அதை பார்த்துக் கொண்டே இருப்பது. பிறகு குடிலுக்குத் திரும்புவது.

`எரிமலையில் 
ஏறிச் செல்லும் எறும்பு!'

அவருடைய சீடர்களுக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால் அவரைப் பின்பற்றி அவர்களும் அந்த எரிமலை அருகில் சென்று சில நிமிடங்கள் நின்று பார்ப்பதும் பிறகு கவனம் கலைந்து குடில் திரும்புவதுமாக இருந்தனர்…

சிறிது காலம் சென்று ஒரு நாள்…

சீடர்கள் குருவிடம் சந்தேகத்தை கேட்டு விட்டனர். "குருவே அது ஒரு எரிமலை! பார்த்தால் தெரிகிறது. அதில் நீங்கள் அப்படி என்ன அதிசயத்தை தினமும் சென்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

புன்னகைத்தபடியே துறவி சொன்னார் "அந்த எரிமலையின் மீது ஓர் சிற்றெறும்பு ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது!"

சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் அந்தப் பார்வைகளில் 'இவருக்கு என்ன ஆயிற்று? ஏதேனும் மனப்பிறழ்வா?' என்ற கேள்வி தொக்கி நின்றது!

ஒருவன் அவரிடம் துணிச்சலாக அதை கேட்கவும் செய்தான். "குருவே! தவறாக நினைக்க வேண்டாம்… இது என்ன ஒரு அதீத கற்பனை? உங்களுக்கு என்ன ஆயிற்று?"

அதற்கு அவர் சொன்னார்: "சிற்றெறும்பு ஒருபோதும் ஃப்யூஜி எரிமலையைக் கண்டு அஞ்சுவதில்லை! அவ்வளவு வெப்பமாக அக்கினி குழம்பை கக்கியபடி சீறும் எரிமலை எவ்வளவு அமைதியாக அடங்கி ஒடுங்கி இருக்கிறது! அந்த அமைதியை உறுதி செய்வது போலதானே இந்த சிற்றெறும்பும் போய்க்கொண்டிருக்கிறது!"

சீடர்கள் மேலும் குழம்பினார்கள். "குருவே நீங்கள் மனத்தெளிவுடன்தான் இதைச் சொவ்கிறீர்களா? எரிமலையின் மேல் எப்படி எறும்பு போக முடியும்? என்றான் ஒரு சீடன்.

துறவி புன்னகை பூத்தபடி சொன்னார்: "எறும்பின் அமைதி எறும்புக்கு! எரிமலையின் அமைதி எரிமலைக்கு! இரண்டுக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. அமைதியில் சிறிய அமைதி பெரிய அமைதி என்ற வேறுபாடு உண்டா என்ன?"

ஒரு சீடன் "இப்பொழுதும் தெளிவாகப் புரியவில்லை குருவே!" என்றான்.

"தினசரி தேவையற்ற சத்தங்களை நம் செவிகளால் கேட்கிறோம். தேவையான அமைதியை நாம் கவனிக்க தவறுகிறோம். இயற்கையின் ஓசைகள் நம் இதயத்துக்குள் வருவதற்கு நாம் அனுமதிப்பதே இல்லை! மழை பெய்கிற போது அதன் இசையை நாம் கவனித்து கேட்கிறோமா? ஒவ்வொரு பூ உதிரும் போதும் ஒரு சிறிய ஓசையும் உதிர்கிறதே, அதை செவி கொடுத்துக் கேட்கிறோமா? எத்தனை எத்தனை பறவைகள் மரங்களில் அமர்ந்து எத்தனை எத்தனை பாடல்கள் பாடுகின்றன! அவற்றை ரசித்துக் கேட்கிறோமா? தண்ணீருக்குள் நடனமிட்டபடி நீந்தும் மீனின் மெல்லிய நீச்சல் ஓசையை நாம் கேட்டிருக்கிறோமா? செயற்கை சத்தங்களைக் கேட்டுப் பழகி விட்டோம்!

தேவையற்ற இரைச்சல்களின் சுமை தாங்கி ஆகிவிட்ட நம் செவிகளில் மெல்லிய ஓசைகள் கேட்கக்கூடிய நுண்மைத்தன்மை பழுதாகி விட்டது! எங்கும் எப்போதும் உரத்த சத்தம். உரத்த சண்டை. உரத்த குரல்கள். உண்மையில் இந்தக் கொடூரமான உரத்த ஓசைகளில் இருந்து விடுபட்டால் மட்டுமே நம் மனம் சிந்திக்க தொடங்கும். அப்பொழுது மட்டுமே நம்மால் நம்மை உணர முடியும்! புரிகிறதா?' என்றார் துறவி.

"இப்பொழுது புரிகிறது குருவே! நாளை முதல் நாங்களும் உங்களுடனே வந்து ஃப்யூஜி எரிமலையின் மேல் ஓசையின்றி ஊர்ந்து செல்லும் சிற்றெறும்பை கவனித்துப் பார்க்கிறோம்! சத்தங்களால் சூழ்ந்து கிடந்த மனதுக்கு நிசப்தத்தின் அர்த்தங்களை அமைதியாக விளக்கியதற்கு நன்றி குருவே என்றனர்!