Published:Updated:

`நினைத்ததை நிறைவேற்றும் ராமர் கோயில் சங்கு!' - நாகை கிராம மக்களின் அசராத நம்பிக்கை

சங்கு
சங்கு

பழைமை வாய்ந்த ராமர் கோயிலில் உள்ள சங்கு கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது.

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி கிராமத்தில் பழைமையான ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமர், சீதை, லெட்சுமணன், அனுமான் ஆகிய தெய்வங்களுக்கு சிலைகள் உள்ளன.

கோயில்
கோயில்

மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதிகமாக இருந்தது.

திருமணத்தடை, குழந்தைப்பேறு மற்றும் பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்காக இந்தக் கோயிலுக்கு, பக்தர்கள் பல கிராமங்களிலிருந்தும் வந்து வழிபட்டுச் சென்றுள்ளனர்.

குளம்
குளம்

இந்தக் கோயிலில் ஒரு பஜனை மடம் அமைந்திருந்தது. இங்கு வந்து பல பக்தர்கள் தினந்தோறும் பஜனையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. வருடம்தோறும் மார்கழி மாதம் முழுவதும் இங்கு நடைபெறும் பஜனை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முக்கிய விழாவாக அமைந்திருந்தது. ராமநவமி விழாவும் இங்கு சிறப்பான இடத்தைப் பெற்று வந்துள்ளது. மேலும், தைப்பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். தைப்பொங்கல் அன்று இக்கோயிலில் ஊர்மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு மகிழ்ந்திருக்கின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று கிராமத்தில் உள்ள கால்நடைகள் அனைத்தையும் அலங்கரித்து அணிவகுப்பாக அழைத்து வந்து, மேளங்கள் அடித்து கொண்டாடுவார்கள். காணும் பொங்கல் அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றுகூடி விளையாடி மகிழும் இடமாகவும் இக்கோயில் இருந்திருக்கிறது.

இக்கோயிலில் பொதுத்திருக்குளம் ஒன்றும் உள்ளது. பரந்து விரிந்திருந்த இந்தக் குளம் இன்று குறுகி குட்டைபோல காட்சியளிக்கிறது. இக்கோயிலில் உள்ள கிணறு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டது. கிணறு தோண்டிக்கொண்டிருக்கும்போது, கிணற்றில் சங்கு ஒன்று கிடைக்கவே அதை ராமரின் வடிவமாகக் கருதி இன்றும் பத்திரமாக மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். எண்ணிய காரியம் வெற்றியடைய அந்தச் சங்கை தொட்டாலே போதும். ராமரின் அருளால் நல்லது நடக்கும் என்பது இக்கிராம மக்களின் நம்பிக்கையாக இன்றும் இருந்து வருகிறது.

சங்கு
சங்கு

இத்தகைய பெருமை வாய்ந்த இந்தக் கோயில் தற்போது இடிபாடுகளால் சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால், தொன்று தொட்டு நடைபெற்று வந்த வழிபாடு நின்றுவிட்டது. என்றாலும் சங்கு வழிபாடும் அதனால் நினைத்த காரியம் வெற்றியும் அடைவதாகக் கூறும் இக்கிராம மக்கள், "இக்கோயிலைப் புணரமைத்து கட்டிக்கொடுக்க இந்து சமய அறநிலையத்துறை முன் வர வேண்டும். இக்கோயில் குளத்தை உடனடியாகத் தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின் செல்ல