Published:Updated:

அசோகர் காலத்துக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவைப் பெற்றிருந்தனர்; நிரூபித்த கல்வெட்டுகள்!

தாதப்பட்டி நடுகல்

தமிழகத்திலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டையில் பல்வேறு தொல்லியல் தடயங்கள் கிடைத்துவந்தன.

அசோகர் காலத்துக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவைப் பெற்றிருந்தனர்; நிரூபித்த கல்வெட்டுகள்!

தமிழகத்திலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டையில் பல்வேறு தொல்லியல் தடயங்கள் கிடைத்துவந்தன.

Published:Updated:
தாதப்பட்டி நடுகல்
அசோகனே இன்றைய இந்திய எழுத்துருக்கு வித்திட்டவர். அவரது வழியில் தோன்றியதே இன்றைய இந்திய நவீன எழுத்துகள் எனும் கூற்றை உடைத்து, அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே எளிய மக்களும் எழுத்தறிவைப் பெற்றிருந்தனர் என்பதை உணர்த்திக் காட்டிய கல்வெட்டுகள் இவை.
புலிமான்கோம்பை நடுகற்கள்
புலிமான்கோம்பை நடுகற்கள்

சங்க இலக்கியங்கள், நம் முன்னோர்கள் நடுகற்கள் அமைத்து வழிபாடு செய்ததைப் பற்றி நிறைய குறிப்புகள் தருகின்றன. இவற்றுள் நமக்கு தற்சமயம் கிடைத்த சில சங்ககால நடுகற்கள் குறித்துக் காண்போம்.

புலிமான்கோம்பை நடுகற்கள்: காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு:

அசோகனே இன்றைய இந்திய எழுத்துருக்கு வித்திட்டவர், அவரது வழியில் தோன்றியதே இன்றைய இந்திய நவீன எழுத்துகள் எனும் கூற்றை உடைத்து, அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே எளிய மக்களும் எழுத்தறிவைப் பெற்றிருந்தனர் என்பதை உணர்த்திக்காட்டிய கல்வெட்டுகள் இவை. காலத்தால் முந்தைய இந்தியக் கல்வெட்டும் இதுவே.

வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பைக் கல்வெட்டுகளை இன்று காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில் முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதிவந்தனர். ஆனால் 2006-ல் தேனி மாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொ.ஆ.மு 4-ம் நூற்றாண்டு வரை பழைமையானது எனக் கருதப்படுகிறது. பொதுவாக பொ.ஆ.மு 3-ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழகத்தில் தமிழி இருந்துவந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் ஒரு சான்றாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்வெட்டு
கல்வெட்டு

முதல் கல்வெட்டு:

'.. அன் ஊர் அதன் ..ன் அன் கல் '

என்று சிதைந்துள்ளது. ஒரு ஊரைச் சார்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட கல் என்று இதற்குப் பொருளுரைக்கின்றனர்.

இரண்டாம் கல்வெட்டு
இரண்டாம் கல்வெட்டு

இரண்டாம் கல்வெட்டு:

'வேள் ஊர் அவ்வன் பதவன்'

என்றுள்ளது. இதில் வேள் என்பது சங்ககால வேளிர் ஆண்ட ஊரைக் குறிக்கும் பொருளில் உள்ளது. இதில் வேள் ஊரைச் சார்ந்த பதவன் மகனாகியவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்ற பொருள் தருகிறது.

புலிமான்கோம்பை நடுகல்
புலிமான்கோம்பை நடுகல்

மூன்றாம் கல்வெட்டு:

'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்'

என்றுள்ளது. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது. கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது. இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன.

பொற்பனைக்கோட்டை
பொற்பனைக்கோட்டை

2.பொற்பனைக்கோட்டை நடுகல்: கல்வெட்டு வாசகம்:

1.கோவென்கட்டிற் நெதிர 

2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்

3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு

4) அங்கபடை தாணைத் தணயன் கணங்

5) குமாரன் கல்

கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து செல்ல, அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” பசுக்கூட்டத்தை மீட்கும் முயற்சியில் இறந்துபட்டமைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் இம்மன்னர் பற்றிக் குறிப்பில்லையெனினும், இங்கு மிகப்பெரிய கோட்டை இருந்துள்ளது. அதன் எச்சம் இப்பகுதியில் இன்றும் உள்ளது. இவ்வூருக்குச் செல்லும் வழியில் இன்றும் "கொங்கதிரையன்பட்டி" எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் வாழ்விடப்பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழகத்திலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டையில் பல்வேறு தொல்லியல் தடயங்கள் கிடைத்துவந்தன. 2005-ம் ஆண்டு குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வின் மூலமாக சங்ககால செங்கல் மற்றும் பானை ஓடுகள் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தினார். பொற்பனைக்கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக மேலாய்வு செய்ததைத் தொடர்ந்து இரும்பு உருக்கு தொழிற்சாலை, இரும்பு உருக்குக் கழிவுகள், சுடுமண் குழாய்கள், உருக்கு கலன்கள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன.

இதைத் தொடர்ந்து கோட்டையின் மேற்பரப்பில் இருக்கும் கட்டுமானங்களில் கொத்தளங்கள் உள்ளிட்டவை இருப்பதையும் கண்டறிந்தனர். இந்நிலையில்சமீபத்தில் நடத்திய அகழாய்வில்

நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட செங்கல் கட்டுமான நீர்த்தடக் கால்வாய் அமைப்பு அகழ்வாய்வு குழியில் வெளிப்பட்டிருக்கிறது.

அரண்மனை மேட்டை நோக்கி இக்குழாய் அமைந்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

பொற்பனைக் கோட்டை
பொற்பனைக் கோட்டை

நகர நாகரிகத்திற்கான முக்கியக் குறியீடாகத் தொல்லியல் துறையினரால் பார்க்கப்படும் இந்தக் கால்வாய் அமைப்பு கிடைத்திருப்பது, பொற்பனைக் கோட்டையின் மீது சிறப்புக் கவனத்தைத் திருப்பியுள்ளது. கீழடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் மட்டுமே இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் கோட்டை மற்றும் அதுசார்ந்த வாழ்விடம் குறித்த எவ்வித ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக தஞ்சாவூர் வல்லம் பகுதியில் இருந்த சங்ககாலக் கோட்டை முழுவதுமாகச் சிதைந்துவிட்ட நிலையில் சங்ககாலப் பாடல்களில் கூறப்பட்ட அனைத்து அவயங்களும் கொண்ட ஒரே கோட்டையாக பொற்பனைக்கோட்டை இருப்பது இந்த அகழ்வாய்வின் முதல் கட்டத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது. தற்போது அகழ்வாய்வு செய்யப்படும் இடத்திற்கு மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் அரண்மனை மேட்டுப் பகுதியில் மிக முக்கியமான கட்டுமானங்கள் இருக்கும் வாய்ப்புள்ளது. வருங்காலங்களில் நடைபெறும் அகழாய்வுகளில் நிறைய ஆச்சர்யங்கள் பொற்பனைக்கோட்டை வாயிலாய் வெளியாகலாம்.

தாதப்பட்டி நடுகல்
தாதப்பட்டி நடுகல்

3.தாதப்பட்டி நடுகல்:

திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே தாதப்பட்டி என்னும் கிராமத்தின் வயல்வெளியில் உள்ளது இந்நடுகல். தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததில் பெரும் பங்கு இந்தத் தமிழிக் கல்வெட்டிற்கு உண்டு.

இக்கல்வெட்டில் வரும் '**ன் அடிஓன் பாகல் பாளிய் கல்' என்ற வரியில் 'அடிஓன்' என்பது 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்ற தொல்காப்பிய மேற்கோளைக் கொண்டுஇதில் வரும் 'பாகல் பாளிய் கல்' என்பதைக் கொண்டு பாகல் மரத்தின் அடியில் இறந்தவருக்குப் பாழி (பள்ளி) எடுப்பித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கல்வெட்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப்படுகிறது.

அடுத்து அனைவரையும் நடுங்கச் செய்யும் சதியேற்ற நடுகற்கள் பற்றிக் காண்போம்!