Published:Updated:

கி.பி 10-ம் நூற்றாண்டு பிச்சாடனர் சிற்பம்... கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு!

திருக்கோவிலூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிச்சாடனர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

சிற்பம்
சிற்பம்

சிவமூர்த்தங்கள் 64-ல் ஒன்றான பிச்சாடனார் திருக்கோலத் திருமேனி மீனாட்சியம்மன் கோயில், அண்ணாமலையார் கோயில் என மிகச்சில சிவாலயங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. தற்போது, திருக்கோவிலூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிச்சாடனர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் (புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி) தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மணலூர்பேட்டையில் இந்தச் சிற்பம் கிடைத்துள்ளது.

சிற்பம்
சிற்பம்

அந்த ஊரின் ஆஞ்சநேயர் கோயிலருகே கால்வாய் சீரமைப்புப் பணியின்போது கற்சிற்பம் தென்பட்டுள்ளது. அதை ஊர்மக்கள் மீட்டு, அதிகாரிகளுக்குத் தகவலளித்தனர். சிங்கார உதியன் தலைமையில் திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் குழு சிற்பத்தை ஆய்வு செய்தது.

ஆய்வாளர் வீரராகவனிடம் பேசினோம். ``இந்த ஊரில் இரண்டு சிவாலயங்கள் இருந்துள்ளன. இச்சிற்பம் கிடைத்துள்ள இடம் சிதைந்த ஆலயம் இருந்த இடமாக இருக்கலாம். ஏனெனில், ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த ஆலயங்களில் பயன்படுத்தப்பட்ட கற்பலகைகள் கிடைத்துள்ளன. அதில் ஒரு கல்லில் இந்தச் சிற்பம் இருந்தது. அந்தச் சிற்பம், பிச்சாடனர் உருவமுடைய புடைப்புச் சிற்பமாகும். பெரும்பாலும் இந்தச் சிற்பங்கள் சிவாலயங்களின் வெளிப்புற சுவற்றின் மாடங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தலையில் வரிசடையும் நாற்கரங்களுமாகச் சிற்பத்தின் உருவமைப்பு உள்ளது. பத்திர குண்டலமும் சரவணி சவடி, ஆரம் போன்ற அணிகலன்களும் உள்ளன. மேற்கரத்தில் வாகு வளையங்களும் காப்பும், மேல் வலது கரத்தில் உடுக்கை, இடது கரத்தில் சூலமும் உள்ளன. தொடை முதல் தோள்வரை புரிநூல். சிற்பத்தின் இடது பக்க முன்கரத்தின்கீழ் செல்வப் பாத்திரம் ஏந்தும் பூதகணம். இடதுகால் நேராக வலதுகால் சற்று மடித்தபடி துவிபங்க நிலை என இந்தச் சிற்பம் அமைந்துள்ளது. பிச்சாடனார் சிற்பம் பீடத்தில் நிற்பதுபோல் இருக்கிறது. இதன் காலம் கி.பி.10, 11-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம்.

சிற்பம்
சிற்பம்

பாதுகாப்புக் கருதி மணலூர்பேட்டை வருவாய்துறை அலுவலகத்தில் தற்போது இந்தச் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி இங்கே ஒரு வயல்வெளிப் பகுதியில் கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசு கால நான்கரை அடி உயரக் கல்வெட்டைக் கண்டுபிடித்தோம். அதன் இரண்டு பக்கங்களிலும் மொத்தம் 43 வரிகள் இருந்தன. கல்வெட்டில், பெருத்த பிள்ளையாருக்கு குடிகளின் தானம், வழிபாட்டு முறை, சாபம் எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தன. கல்வெட்டு இடத்திலிருந்து 100 அடியில் மண்மேடாக இருக்கும் கல்மண்டபம் அக்காலத்துப் பிள்ளையார் கோயிலாக இருக்கலாம். இப்பகுதியில் அதிகளவு தொல்லியல் சின்னங்கள் கிடைப்பதால் இங்கு தொல்லியல் அகழாய்வு நடத்தினால் வரலாற்றுச் சிறப்பை மேலும் அறிய முடியும்” எனக் கூறினார்.