Published:Updated:

தியாகத்தின் அடையாளங்களா அரிகண்டம், நவகண்டம், யமகண்ட முறைகள்? வரலாறு சொல்லும் அதிசயத் தகவல்கள்!

நவகண்டம்

கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு, எதிரி கொடுக்கும் பொருளுக்கு ஏற்பப் பாடுவதுதான் அரிகண்டம். அப்படிப் பாடும்போது ஏதாவது தவறினால் அந்தக் கத்தியாலேயே கவியை வெட்ட வேண்டி வரும்.

தியாகத்தின் அடையாளங்களா அரிகண்டம், நவகண்டம், யமகண்ட முறைகள்? வரலாறு சொல்லும் அதிசயத் தகவல்கள்!

கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு, எதிரி கொடுக்கும் பொருளுக்கு ஏற்பப் பாடுவதுதான் அரிகண்டம். அப்படிப் பாடும்போது ஏதாவது தவறினால் அந்தக் கத்தியாலேயே கவியை வெட்ட வேண்டி வரும்.

Published:Updated:
நவகண்டம்

தமிழன்னைக்குப் பெருமை சேர்த்த புலவர்களில் காளமேகப் புலவர் தனித்துவமானவர். கி.பி. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று நால்வகை கவிதைத் திறமைகளும் கொண்டு திகழ்ந்த திறமையாளர். இரட்டுற மொழிதலில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்றே தமிழ் இவரைக் கொண்டாடும்.

அரிகண்ட, நவகண்ட சிற்பங்கள்.
அரிகண்ட, நவகண்ட சிற்பங்கள்.

காளமேகப்புலவர் பாண்டி நாட்டில் திருமோகூர் என்னும் ஊரில் இருந்த அந்தணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும், திருவரங்கம் மடப்பள்ளியில் பணிபுரிந்து வந்த வரதன் என்பவரே, திருவானைக்கா வந்து அகிலாண்டேஸ்வரி அன்னையின் அருளால் 'கவிகாளமேகம்' என்றானார் என்றும் வேறு வேறு கருத்துக்கள் உள்ளன.

ஒரு முறை அதிமதுரகவி என்னும் புலவர், மூச்சுவிடும் முன்பே 300, 400 எனப் பாடல்களைப் பாடுவதாகப் பெருமை பேசினார். அதைக்கேட்ட காளமேகப் புலவர், "பிள்ளாய் இம்மென்னும் முன்னே 700, 800 பாடல்களை யானும் பாடுவேன்; அம்மென்றால் 1000 பாட்டுகளைப் பாடுவேன்; சும்மா இருந்தால் இருப்பேன்; வெகுண்டெழுந்தால், யானையின் துதிக்கையைப் போலப் பெரிய தாரைகளாகப் பொழியும் மேகம் நான் என்று நினைப்பாயாக'' என்று பாடினார்.

இப்பாட்டைக் கேட்ட அதிமதுரகவி "கூர் அம்பாயினும் வீரியம் பேசேல் என்பதை அறியாயோ? நீ இவ்வளவு வீரியம் பேசுகிறாயே, அரிகண்டம் பாடு, பார்ப்போம்'' என்றார்.

காளமேகம், "அரிகண்டம் என்றால் என்ன?'' என்று வினவினார்.

அதைக்கேட்ட அதிமதுரகவி, "கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு, எதிரி கொடுக்கும் பொருளுக்கு ஏற்பப் பாடுவதுதான், அப்படிப் பாடும்போது ஏதாவது தவறினால் அந்தக் கத்தியாலேயே வெட்ட வேண்டி வரும்" என்றார்.

இதைக்கேட்ட காளமேகம், சிரித்து, "இதுதானா அரிகண்டம் என்பது? இத்தனை சுலபமானதைச் சொல்ல வந்தீரே; யமகண்டம் பாடுவதல்லவா மிகக் கடினம், அதையே நான் பாடுவேனே'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரிகண்டம்
அரிகண்டம்

இதைக் கேட்ட மதுரகவி விளக்கம் கேட்க,

"பூமியில் பெருநெருப்பு ஒன்றை வளர்த்து அதன் மேல் கொப்பறை நிறைய எண்ணெய் விட்டு அதில் அரக்கு, மெழுகு, குங்குலியம், கந்தகம், சாம்பிராணி என யாவும் கொதித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கொப்பரைக்கு மேலே உறிகட்டி ஏறி நிற்க வேண்டும். அவரைச் சுற்றி நான்கு நான்காகக் கத்திகள் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அந்தக் கத்தியின் முனைகள் சங்கிலியால் கட்டப்பட்டு, அவை நான்கு யானைகளின் துதிக்கையில் கட்ட வேண்டும்.

உறியில் இருக்கும் புலவர், எவரெவர் என்னென்ன பொருள் கொடுத்தாலும், அதை அந்நொடியில் தானே தடையின்றிப் பாட வேண்டும். அவ்வாறு பாடும்போது சிறிதளவு வழுவினாலும் பாடச் சொன்னவர்கள் யானைப் பாகர்களுக்குக் கண் சைகை காட்டுவர். அவர்கள் யானைகளை மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்டுவர். அந்த யானைகள் சங்கிலிகளை விசையுடன் இழுக்கும். இழுத்தவுடனே புலவனின் கழுத்தும் இடுப்பும் கத்திகளால் துண்டிக்கப்படும். தலையொரு துண்டமும் இடுப்பு முதல் காலளவும் ஒரு துண்டமுமாகி, அந்த எண்ணெய்க் கொப்பறையில் விழுந்துவிடும். இதுதான் யமகண்டம்'' என்று விளக்கம் தந்தார் காளமேகப் புலவர்.

எழுபது புலவர்கள் கேட்க யமகண்டம் பாடிய புலவர் காளமேகம் மட்டும்தான் என்று கூறப்படுகிறது. பின்னாளில் அபிராமி பட்டரும் நெருப்பின் மீது உறி கட்டி ஏறி நின்று அபிராமி அந்தாதி பாடி, அபிராமியின் அருளால் வென்றதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவை யாவும் தன் புலமையை, தன்னுடைய பக்தியை நிலைநாட்ட உருவானது என இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் வீரத்தின் அடையாளமாக, தியாகத்தின் சின்னமாக நடைபெற்றவை அரிகண்டம், நவகண்டம் என வரலாறு கூறுகிறது.

அரிகண்டம்
அரிகண்டம்

இம்மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்துப் பலியிட்டுக் கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, உடலின் ஒன்பது பாகங்களை தானே அரிந்து கொற்றவைக்குப் பலியிடுவதுதான் நவகண்டம்.

நவகண்டம்
நவகண்டம்


குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. தனது தலையை ஒரே முயற்சியில், தானே அரிந்து பலியிடுவதற்கு 'அரிகண்டம்' என்று பெயர். இது ஒரு விழா போல் நடத்தப்படுவதும் உண்டு. நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன்போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்குப் பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார்.

அரிகண்டம், அதாவது தலையை அறுத்துக் கொள்வதை சாதாரண வீரன் கூட செய்துவிட முடியும். ஆனால் நவகண்டம் அதாவது ஒன்பது இடங்களில் வெட்டிக் கொள்வது, தலைசிறந்த வீரனும் தியாகியும் மட்டுமே செய்யக்கூடியது என்கிறது வரலாறு.


எதிரி நாட்டுடன் போரில் வெல்லவும், உடல் நலம் குன்றி இருக்கும் மன்னன் உயிர் பிழைக்கவும், ஓடாத தேரை ஓட வைக்கவும், பெரும் அவமானத்துக்கு உள்ளான ஒருவன் அதில் இருந்து மீளவும், நாடு வளம் பெறத்தாமே விரும்பி வேண்டிக் கொண்டும், நோயாலோ காயத்தாலோ இறந்துபோக விரும்பாத வீரன், மரண தண்டனை பெற்ற வீரன், தன்னுடைய தியாகத்தைக் காட்டவும், இப்படி அரிகண்டம், நவகண்டம் கொடுப்பது வழக்கம்.

இப்போது முக்கியமானவர்களுக்குப் பாதுகாப்பு படை இருப்பது போன்று முன்பு சோழர்களுக்கு வேளக்காரப் படைகளும் பாண்டியர்களுக்கு தென்னவன் ஆபத்துதவிகள் என்ற படைகளும் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விட்டால், கொற்றவை சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதை வழக்கமாகக் கொண்டவர்கள் இவர்கள்.

வேளக்கார படை வீரன்
வேளக்கார படை வீரன்


சொன்ன சொல்லை மீறினாலோ, வேண்டியது கிடைத்தாலோ நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கமும் இருந்தது இது பாவாடம் எனப்படும். இந்த முறைகளை விளக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் தென்னகம் எங்கும் காணக் கிடைக்கின்றன. அதில் மணிமங்கலம், புள்ளமங்கை சிற்பங்கள் தனித்துவம் கொண்டவை.

திருச்சி பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர், ஆற்றுப்படை குழு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism