Published:Updated:

பிறவா நிலையடைய வடக்கிருந்து உயிர்விடும் சல்லேகனை வழக்கம்; அதிசயிக்க வைக்கும் கல்வெட்டுத் தகவல்கள்!

கல்வெட்டு

சங்கப் புலவர் கபிலர் நண்பன் பாரிக்காக வடக்கிருந்து உயிர்விட்டசெய்தியின் வழியே வடக்கிருத்தல் என்பது தொன்மையான தமிழர் வழக்கம் என்பதை அறியலாம்.

பிறவா நிலையடைய வடக்கிருந்து உயிர்விடும் சல்லேகனை வழக்கம்; அதிசயிக்க வைக்கும் கல்வெட்டுத் தகவல்கள்!

சங்கப் புலவர் கபிலர் நண்பன் பாரிக்காக வடக்கிருந்து உயிர்விட்டசெய்தியின் வழியே வடக்கிருத்தல் என்பது தொன்மையான தமிழர் வழக்கம் என்பதை அறியலாம்.

Published:Updated:
கல்வெட்டு
வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் வெறுத்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் என வரலாறு கூறும். சங்ககாலத் தமிழகத்தில் போரில் முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். மானமிகு இவ்வீரர்கள் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கி அமர்ந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது மரபாக இருந்ததுண்டு.
வடக்கிருத்தல்
வடக்கிருத்தல்

சிறைப்பட்ட சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை, தாமதமாக தனக்கு தண்ணீர் வழங்கியதை அவமானமாகக் கருதி வடக்கு இருந்த செயலையும், கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் வடக்கு இருந்ததை நீங்களும் அறிவீர்கள். வடக்கு நோக்கி விரதம் இருப்பதை உத்ரக மனம், மகாப் பிரத்தானம் என்று வரலாறு கூறுகிறது. வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கும் அந்நாளில் நடுகல் வைக்கப்பட்டது.

அவமானம், வீரச்செயலில் வழுவுதல், நட்பு கருதி உயிர்நீத்தல், நோக்கம் நிறைவேறாமைக்கு பொறுப்பேற்றல், கோரிக்கை நிறைவேற , கவனம் உண்டாக்க என காரணங்களுக்காக இந்த உண்ணாநோன்பிருந்து உயிர்விடும் வழக்கம் நம்மிடையே இருந்து வந்துள்ளது. சமண மதத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும். இவ்விரதம் மேற்கொள்வோர் முதலில் தம் குருவிடம் உத்தரவு பெற்று, சரியான இடத்தினை தேர்ந்தெடுத்து, தனியாய் மக்கள் நடமாட்டம் இல்லா இடத்தில் தர்ப்பைப் புல் பரப்பி, அதன்மேல் வடக்குதிசை நோக்கி விரதம் மேற்கொள்வர். முதலில் திரவ உணவு மட்டும் உட்கொள்வர். பின் தண்ணீர் மட்டுமே அருந்துவர். அதற்கு அடுத்து தண்ணீரும் அருந்தாமல் விரதம் மேற்கொள்வர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரவேலன் கல்வெட்டு
காரவேலன் கல்வெட்டு

தொடக்கத்தில் புல்மேல் நடக்கலாம், அமரலாம், ஆனால் இறுதிநிலையை அடையும்போது கைகாலை அசைக்காமல் இருந்து உயிர் துறப்பர். சல்லேகனை எனும் இச்சொல் பின்னாளில் வந்தது, ஆரம்பத்தில் ஆராதனை, நிசீதி என வழங்கப்பட்டது. தமிழிலக்கியத்தில் வரும் `வடக்கிருத்தல்' வழக்கமே சல்லேகனையாக வந்திருக்கக்கூடும் எனும் கருத்துமுண்டு. சங்ககால பெருஞ்சேரலாதன் முதல் நாயகன் பொன்னர் வரை வடக்கிருந்து உயிர்விட்ட சான்று உண்டு.

ஐங்குறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசியில், நீலகேசி எனும் பெண், குண்டலகேசி எனும் பௌத்த பெண்ணிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாய் அமைந்த ஒரு காப்பியமாகும். இதில் முகமலர்ந்து விரும்பியேற்கும் சாவினை `தற்கொலை' என குண்டலகேசி கூறுகிறது. அதை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம் (சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது. இவ்விரதம் இருப்போர் பிறவா நிலையடைவோர் என நீலகேசி கூறுகிறது. கலிங்க அரசன் காரவேலனின் உதயகிரிக் கல்வெட்டு (கி.மு முதல் நூற்றாண்டு) சமண முனிவர்களின் இருக்கைகளை நிஸீதியா என்று குறிப்பிடுகிறது.

திருப்பரங்குன்றம் கல்வெட்டு
திருப்பரங்குன்றம் கல்வெட்டு

நிசீதிகைக் கல்: ஈரோடு வட்டம் விஜயமங்கலம் சந்திரப்ரவர் கோயிலில் ஓர் நிசீதிகை கல் உள்ளது. இது கர்நாடக மாநிலம் சிரவணபெலகோலாவிலுள்ள 19 மீட்டர் உயரமுள்ள கோமதீஸ்வரர் எனும் பாகுபலி சிலையெழுப்பிய சாமுண்டராஜனின் தங்கை புலிஅப்பை என்பவர் நிசீதிகை நோன்பேற்று இறக்கிறார், அவருக்கெழுப்பிய நடுகல்லே இது. சமண மதத்தில் பெண்களுக்கு வீடுபேறு கிடையாது. ஆண்கள் சல்லேகனை நோன்பிருந்தால், வீடுபேறு அடைவர், ஆனால் பெண்கள் சல்லேகனையிருந்து, இறந்து அதன்பின் அடுத்த பிறவியில் ஆணாய் பிறந்து அதன்பின் வீடு பேறடைவர் என சமணநூல்கள் கூறுகிறது.

சில நிசீதிகை கல்வெட்டுகள் : திருநாதர்குன்று: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிலுள்ள திருநாதர்குன்று எனும் மலைக்குன்றுள்ளது. இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில்,

`ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை'

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சந்திரநந்தி எனும் சமண ஆசிரியர் ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து இங்கு உயிர்நீத்துள்ளார். இக்கல்வெட்டில்தான் முதன் முதலாக உயிர் எழுத்தில் ஒன்றான `ஐ' இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-6-ம் நூற்றாண்டாகும்.

பறையம்பட்டு: விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில்,இரண்டு குன்றுகள் காணப்படுகின்றது. அதில் இரண்டாவது குன்றின் உச்சியில் முருகர் கோயில் அமைந்துள்ளது .

குன்றின்மேல் உள்ள முருகர் கோயிலை கடந்து குன்றின் உச்சியில் ஒரு பழமையான வட்டெழுத்து நிசீதிகை கல்வெட்டு காணப்படுகிறது.

இந்த கல்வெட்டு செய்தி பின்வருமாறு:

நமோத்து பாணாட்டு வ (ச்)

சணந்தி (ஆ) சாரி (ய)

ர் மணாக்க ராராதனி

நோற்று (மு)டித்த (நி)

சீதிகை

பாண நாட்டை சேர்ந்த வச்சணந்தி என்கிற ஆசிரியரின் மாணாக்கர்

ஆராராதன் என்பவர் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த நீசிதிகை (இடம்) என்ற செய்தி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி.6-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

பறையம்பட்டு கல்வெட்டு
பறையம்பட்டு கல்வெட்டு

திருப்பரங்குன்றம் கல்வெட்டு: மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் மலையில் இக்கல்வெட்டு உள்ளது. தமிழ் மற்றும் கிரந்தத்தில் இக்கல்வெட்டு உள்ளது.

`அரிட்ட நேமிபடாரர் நிசீதிகை இது'

என்பது இக்கல்வெட்டின் வாசகம்.

கல்வெட்டின் தொடக்கத்திலுள்ள வரிகள் அழிந்துள்ளதால். எத்தனை நாட்கள் அவர் உண்ணாநோன்பு இருந்தார் என்பதை அறியமுடியவில்லை. 'வடக்கிருந்தார்' என்று தமிழ் இலக்கியங்கள் புகழும் இப்பெருமக்கள் மானத்தைப் பெரிதென எண்ணி உயிர் துறந்த பெருவீரர்கள் என்றே நினைவு கூறப்படுகிறார்கள். புலவரில் புகழ்க்கொண்டோன் எனப் போற்றப்படும் சங்கப் புலவர் கபிலர் நண்பன் பாரிக்காக வடக்கிருந்து உயிர்விட்டசெய்தியின் வழியே வடக்கிருத்தல் என்பது தொன்மையான தமிழர் வழக்கம் என்பதை அறியலாம்.

இதுபோன்ற பல அரிய தகவல்கள் நாம் எத்தனை உயர்ந்த நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உலகுக்கு அறிவித்த வண்ணமே உள்ளன.