திருக்கதைகள்
Published:Updated:

கதை சொல்லும் திருத்தலங்கள்!

திருத்தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
திருத்தலங்கள்

திருத்தலங்கள்

இவருக்கான அபிஷேக நீர் ‘திருமஞ்சன மேடை’ என்ற இடத் திலிருந்து வர வேண்டும். திருமஞ்சன மேடை, கூவம் ஆற்றின் கரையில் (கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்) உள்ளது. வேறு ஏதேனும் நீர் கொண்டு வந்து, அதைக் கொண்டு அபிஷேகம் நடந்துவிட்டால், சுவாமி திருமேனி மீது சிற்றெறும்புகள் ஊரத் தொடங்கும் என்கிறார்கள்!

கதை சொல்லும் திருத்தலங்கள்
கதை சொல்லும் திருத்தலங்கள்

‘உலவா சோற்றுக் கலம்’

சிவபக்தியில் சிறந்த அந்த அருளாளர் மனம் கலங்கி நின்றார் சிவனாரின் சந்நிதியில். மழை பொய்த்துப் போனதால் ஊரெல்லாம் பசியால் வாடி வதங்கியது. ஆண்கள், பெண்கள்... அதை விட, சின்னஞ்சிறு பிள்ளைகளும் வாடி வதங்கிப்போனார்கள்.

இதுவரை எப்படியோ தாக்குப் பிடித்தாயிற்று. இனி முடியாது. `என்ன கொடுமை இது? இறைவா... பரமனாரே, உனக்குப் பரமகருணை என்பார்களே! ஆனால், இப்போது கண்ணே இல்லாததுபோல இருக்கிறாயே, இது நியாயமா?’- கிட்டத்தட்ட சண்டையே போட்டுக் கொண்டிருந்தார் அருளாளர்.

திருச்சோற்றுத்துறை
திருச்சோற்றுத்துறை


பரமனிடமிருந்து பதில் இல்லை. விளக்குகூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங் கினார். அவர் மனைவியார் ஓடிப் போய்த் தடுத்தும் பலனில்லை. ஏதும் செய்வதறியாது தவித்த அந்தப் பெண், கண்களில் நீர்மல்க சிவ மூர்த்தத்தை நோக்கினார். பார்வையாலேயே இறைஞ்சினார்.

அப்போதுதான் அந்தப் பேரொலி கேட்டது. திடீரென்று கேட்ட அந்தச் சத்தத்தில் ஊரே உறைந்து போனது. எங்கிருந்தோ தோன்றிய அடர்த்தியான மேகங்கள், கண நேரத்தில் இடியுடன் மழை பொழிய, ஊரே வெள்ளக் காடானது. சோதனைக்குமேல் சோதனை! மக்களின் மிஞ்சியிருந்த ஆடைகளும் உடைமைகளும் தண்ணீரில் அடித்துப் போக... ஊரே அல்லோலகல்லோலப் பட்டது. அதேநேரம் அருளாளர் எல்லோரையும் உரக்க அழைக்கும் குரல் கேட்டது.

கையில் பாத்திரம் ஒன்றை வைத்தபடி, எல்லோரையும் அழைத்தார் அருளாளர். அனை வரையும் திண்ணை திண்ணையாக உட்காரவைத்து சோறு போட்டார். அவரின் கையில் இருந்த சிறு பாத்திரத்திலிருந்து சோறும் நெய்யும் குழம்புமாகக் கொட்டின!

‘அப்ப, மழை பெஞ்சுதில்ல... அந்தத் தண்ணில இந்தப் பாத்திரம் திடீர்னு வந்ததாம். ‘இதை வைத்து எல்லார்க்கும் சோறு போடு அருளாளா... இது அள்ள அள்ளக் குறையாது!'ன்னு அசரீரி கேட்டு தாம். கடவுள் கண்ணத் திறந்துட்டார்!’ என்று ஊர் மகிழ்ந்தது.

இப்படி, அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவ பெருமான் எழுந்தருளி இருக்கும் தலமே, ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை. காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான இது, கண்டியூர்- ஐயம்பேட்டை சாலையில், கண்டி யூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு. திருவையாற்றில் இருந்தும் செல்லலாம்.

அருளாளர் அன்னம் வேண்ட, அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் படியாக அட்சய பாத்திரம் வழங்கினார் ஈசன் என்று பார்த்தோமில்லையா? அந்தப் பாத்திரத்துக்கு ‘உலவா சோற்றுக் கலம்’ என்று பெயர். பெருமானுக்கு அருள்மிகு தொலையாச் செல்வர் என்றும், அம்மைக்கு அருள்மிகு அன்னபூரணி என்றும் திருநாமங்கள்.

இங்கு வந்து அம்மையையும் அப்பனையும் உளமார உருகி வழிபட்டால், வறுமையும் வாட்ட மும் அண்டவே அண்டாது; வீட்டில் அன்னம் எப்போதும் செழித்திருக்கும்; கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை!

`பொற்றாளம் கொடுத்த ஈசன்!’

அம்பிகை ஊட்டிய ஞானப்பாலைப் பருகி, ஊறிய தமிழ்ப் பெருக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் உலகம் வியக்கும் தேவாரப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் இல்லையா! அன்றிரவு, தோணியப்பரின் நினைவுடன் துயின்ற திருஞானசம்பந்தர், மறு நாள் காலை பொழுது புலரத் தொடங்கியதும் திருக்கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரை வணங்கினார்.

கோலக்கா சப்த புரீஸ்வரர்
கோலக்கா சப்த புரீஸ்வரர்


இறைவன் அருளால், பக்கத்தில் உள்ள திருக்கோலக்கா என்னும் திருத்தலத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது. திருக்கோலக்கா - திருஞானசம்பந்தப் பெருமானின் யாத்திரையில் இதுவே முதல் தலம் எனலாம். இவ்வூர் சீர்காழியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. ‘சீர்காழி எல்லை முடிந்து விட்டதா!’ என்று எட்டிப் பார்ப்பதற்குள் கோலக்கா வந்துவிடும்!

கோலக்காவுக்கு வந்த திருஞானசம்பந்தர். வேதத்தின் விழுப் பொருளாம் விடையேறு நாயகனை தரிசித்தார்; பாடத் தொடங் கினார். `மடையில் வாளை பாய மாதரார்’ என்று ஆரம்பித்துக் கைத் தாளமிட்டுக் கொண்டே பாடினார்.

அன்பும் பக்தியும் இழையோட... சந்தமும் தாளமும் சதிராட... சீர்காழிக் கொழுந்து பாடப் பாட, பிஞ்சுக் கரங்கள் தாளம் போடப் போட... தன் அன்புப் பிள்ளையின் அம்புஜக் கரங்கள், தாள வேகத்தில் சிவந்து போவதைப் பொறுப்பாரா பரமேஸ்வரனார்?

அஞ்செழுத்து எழுதப்பெற்ற ஆடகப் பொன்னால் ஆன தாளம், பிள்ளையின் பிஞ்சுக் கரங்களில் வந்து அமர்ந்தது. தலைமீது தாளத்தை வைத்து வணங்கிய சம்பந்தர், மீண்டும் கைகளில் எடுத்து, அதைத் தட்டினார்.

பரமனார் கொடுத்த தாளத்தைக் கொண்டு, செல்ல மகன் பாடல் இசைப்பதைப் பார்த்த அம்பிகை, உடனே, அந்தத் தாளத்துக்கு ஒலியும் ஓசையும் கொடுத்தார்.

திருக்கோலக்கா எனும் இவ்வூரில் அருளும் ஈசனுக்கு சப்த புரீஸ்வரர் எனும் அருள்மிகு திருத்தாளமுடையார் என்று திருப்பெயர். திருஞானசம்பந்தருக்குத் தாளம் கொடுத்தவர் ஆதலால், இப்படியொரு திருநாமம். ஆதியில் மாசிலா ஈஸ்வரர் என்று ஐயனும், பெரியநாயகி என்று அம்மையும் திருநாமம் கொண்டிருந்ததாக உள்ளூர்க் காரர்கள் கூறுகிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் சகல துன்பங்களும் சடுதியில் நீங்கிவிடுமாம்.

பேச்சு வராத சிறுவன் ஒருவனுக்கு திருக்கோலக்கா இறைவனால் பேச்சு வந்த அதிசயமும் நிகழ்ந்துள்ளது இத்தலத்தில். அவனின் தாயார் உள்ளம் மகிழ்ந்து கோயி லுக்குப் பொற்றாளம் செய்து கொடுத்தாராம்!

`ஐயன் அதிசயன்!’

திருவிற்கோலம்
திருவிற்கோலம்
ஐயன் - அதிசயன்
ஐயன் - அதிசயன்


திரிபுர அசுரர்களை அழிக்கப் புறப்பட் டார் சிவபெருமான். அப்போது மேரு மலையே வில்லாக வளைந்து அவரின் திருக்கரத்தை அடைந்தது. வாசுகிப் பாம்பு வில்லின் நாணானது. இத்தகைய வில் ஆயுதத்தை ஏந்திய திருக்கோலத்தைச் சிவனார் தேவர்களுக்குக் காட்டியருளிய தலமே திருவிற்கோலம்.

க்ஷீரா நதியாக விளங்கி, இன்று கூவமாகத் திகழ்கிற நதியின் கரையில் இருப்பதால், ‘கூவம்’ என்றே அழைக்கப்படுகிறது இந்த ஊர். திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில், திருவிற்கோலம், கூகம் ஆகிய இரண்டு பெயர்களைப் பயன்படுத்துகிறார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கத்தை அடுத்து, திருவள்ளூர் நோக்கிச் செல்லும் சாலையில் சென்று கூவம் கூட்டு ரோட்டை அடையலாம். அங்கிருந்து கூவம் ஊர் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்து இறைவர் திருவிற்கோலநாதரை `ஐயன் அதிசயன்' எனப் பாடுகிறார் சம்பந்தர்.

சென்ற நூற்றாண்டு வரை, இந்த சிவலிங்கம், சில அறிகுறிகளைக் காட்டியதாம். மழை மிகுந்து வெள்ளம் வருவதாக இருந்தால், முன்னதாகவே சிவலிங்கத்தின் மீது வெண்மை படருமாம்; அதே போன்று போர் வரப்போகிறது என்றால், செம்மை படருமாம். இப்போது இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை. இருந்தாலும், இதைக் குறித்தே ஞானசம்பந்தர் ‘ஐயன் - அதிசயன்’ என்று பாடியதாகத் தெரிகிறது.

இன்னொரு விதத்திலும்கூட அதிசயர் என்று சொல்கிறார்கள். இவருக்கான அபிஷேக நீர் ‘திருமஞ்சன மேடை’ என்ற இடத் திலிருந்து வர வேண்டும். திருமஞ்சன மேடை, கூவம் ஆற்றின் கரையில் (கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்) உள்ளது. வேறு ஏதேனும் நீர் கொண்டு வந்து, அதைக் கொண்டு அபிஷேகம் நடந்துவிட்டால், சுவாமி திருமேனி மீது சிற்றெறும்புகள் ஊரத் தொடங்கும் என்கிறார்கள்!

தொகுப்பு: நமசிவாயம்